மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 3 ஜூலை 2020

விஜய்: ஒரு நாள் கால்ஷீட் விலை ஒரு உயிரல்ல!

விஜய்: ஒரு நாள் கால்ஷீட் விலை ஒரு உயிரல்ல!

விஜய் நடிக்க, அட்லீ இயக்கும் திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து ஏற்பட்டது. 100 அடிக்கும் மேலான உயரத்தில் கிரேன் உதவியுடன் கட்டி வைக்கப்பட்டிருந்த ஃபோக்கஸ் லைட் அறுந்து விழுந்த போது, கீழே நின்றுகொண்டிருந்த செல்வராஜ் என்பவரின் மீது அந்த லைட் விழுந்தது. அப்போது அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சேர்த்தனர். சன்ரைஸ் கால்ஷீட்டில் தொழிலாளர்கள் வேலை செய்வதால், மதியம் ஷூட்டிங் முடிந்ததும் வீட்டுக்குக்கூட செல்லாமல் நேரடியாக மருத்துவமனைக்கு விரைந்தார் விஜய்.

செல்வராஜ் மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்த விஜய், மருத்துவர்களிடம் செல்வராஜின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். அதன்பின், குடும்பத்தினரிடம் பேசியவர், ‘எந்த உதவியாக இருந்தாலும் தயங்காமல் கேளுங்கள் என்று கூறியதுடன், அவரது பர்சனல் மொபைல் நம்பரையும் கொடுத்திருக்கிறார். அதன்பிறகு அங்கிருந்து வீட்டுக்குச் சென்றவர் அப்படத்தின் புரொடக்‌ஷன் மேனேஜரை அழைத்துப் பேசியிருக்கிறார். ஷூட்டிங்கின் வேகமே இந்த விபத்துக்கான காரணமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

சன்ரைஸ் கால்ஷீட் என்பதால் காலை 5 மணியிலிருந்து 10 மணி வரையிலும், மாலை 3 முதல் 6 மணி வரையிலும் ஷூட்டிங் நடைபெறுகிறது. காலை எடுக்கும் காட்சிகளை, காலை வெயில் இருக்கும் வகையிலேயே எடுத்துவிடவேண்டும். அப்படி இல்லையென்றால், மாலை வெயிலுக்கு ஏற்ப அனைத்து மாற்றங்களையும் செய்யவேண்டும் என்பதால், தொழிலாளர்கள் வேலையில் அவசரப்படுத்தப் பட்டிருக்கின்றனர். அப்படிப்பட்ட அவசர வேலையினாலேயே, ஃபோக்கஸ் லைட்டை சரியாக பொருத்துவதில் கவனக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. அந்த கவனக்குறைவு கிட்டத்தட்ட ஒரு உயிரையே எடுக்கும் அளவுக்கு விபரீதத்தை உண்டாகியிருக்கிறது என்ற தகவல்கள் விஜய்யிடம் சொல்லப்பட்டிருக்கிறது. அதன்பிறகு மாலை ஷூட்டிங் தொடங்கியபோது, ‘யாரும் அவசரமா வேலை செய்யவேண்டாம். ஒரு நாள் ஷூட்டிங் தள்ளிப் போறதால எந்த பிரச்சினையும் இல்லை. பத்திரமா வேலை செய்யுங்க’ என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இதன் காரணத்தை விசாரித்தபோது, விஜய்யின் நேரடி உத்தரவு இதன் பின்னணியில் இருப்பதாகக் கூறுகின்றனர் படக்குழுவினர்.

‘என் ஒரு நாள் கால்ஷீட்டின் விலை ஒரு உயிரில்லை’ என்று கூறியதுடன், ‘இனி இப்படியொரு சம்பவம் என்னுடைய எந்த ஷூட்டிங்கிலும் நடக்கக்கூடாது’ என்றும் அழுத்தமாக சொல்லியிருக்கிறார். விஜய் இப்படி சொன்னாலும், சொல்ல வேண்டியவருக்கு இது புரியுமா? என்று இழுக்கின்றனர் படக்குழுவினர். காரணம், அட்லீ இந்தப் படத்தை விரைவில் முடிக்க மிகவும் அவசரம் காட்டுகிறாராம். எதனால் என்று விசாரித்தபொழுது “ஷங்கர் சாரிடம் வேலையை கற்றுக்கொண்டாலும், மிக முக்கியமான அவரது பொறுமை குணத்தை அட்லீ கற்றுக்கொள்ளவில்லை” என்று கூறும் படக்குழுவினர், இருவருக்குமான வேறுபாட்டை ஒரு உதாரணத்துடன் குறிப்பிடுகின்றனர்.

“எந்திரன் படத்தின் ஷூட்டிங்கில், சிட்டியாக வேடமிட்டு ரஜினி நடிக்கத் தொடங்கியிருந்த சமயம். ரஜினி அணிந்துகொண்டு நடிக்கும் முகமூடி மற்றும் உடல் பாகங்களின் பொருட்கள் புதிதாக தமிழ் சினிமாவுக்குக் கொண்டுவரப்பட்டிருந்தன. அவற்றை ஸ்பாட்டிலேயே செய்து, உடனே ரஜினிக்கு மாட்டிவிடவேண்டும். ஒரு மணி நேரத்தில் அவை நெகிழத் தொடங்கி சுருங்கிவிடும். எனவே, நேரம் மிகக் கவனமாக கடைபிடிக்கப்பட்டது. ஆனால், ஒரு ஷாட் முடிந்தபிறகு ரஜினியும், ஷங்கரும் பேசிக்கொண்டிருந்துவிட்டு, அந்த பொருட்களை எடுக்க நேரமாகிவிட்டது. அதில், ரஜினியின் கையில் மாட்டப்பட்டிருந்த உரை மட்டும் மாட்டிக்கொண்டது. கொஞ்சம் கொஞ்சமாக அது சுருங்கி ரஜினியின் கைகளை அழுத்துவது அவரது முகத்தில் தெரியத் தொடங்கியது. அதை உருவாக்கியவர் முதற்கொண்டு பலரும் என்ன செய்வதெனத் தெரியாமல் விழித்துக்கொண்டிருக்க, ஷங்கர் மட்டும் மிக நிதானமாக ஸ்பாட்டிலிருந்த அனைவரையும் ஓரிடத்திற்கு அழைத்து விஷயத்தை விளக்கியிருக்கிறார். அப்போது அங்கிருந்த ஒரு நபர், இரு விதமான எண்ணெய்களை சேர்த்து பயன்படுத்தினால் எடுத்துவிடலாம் என்று சொல்ல, ஷங்கர் ரஜினியிடம் கேட்டிருக்கிறார். ‘நமக்கு வேற வழி இருக்கா?’ என்று கேட்டவருக்கு இல்லை என்ற பதில் கிடைத்ததும், ஷங்கர் அனுமதியுடன் எண்ணெய் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதன்பின் சில நிமிடங்களிலேயே ரஜினியின் கையில் பொறுத்தப்பட்டிருந்த அந்த உரை கழண்டு வர, ஷூட்டிங் ஸ்பாட்டே மகிழ்ச்சியில் ஆழ்ந்தது. இப்படி, ஸ்பாட்டில் ஏற்படும் பிரச்சினைகளை கோபப்படாமல் கையாளும் ஷங்கரின் வழியை அட்லீ பின்பற்ற வேண்டும்” என்கின்றனர் படக்குழுவினர்.

புதன், 24 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon