மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 3 ஜூலை 2020

மாறன் சகோதரர்களுக்கு எதிராக சாட்சி விசாரணை தொடக்கம்!

மாறன் சகோதரர்களுக்கு எதிராக சாட்சி விசாரணை தொடக்கம்!

சட்டவிரோத பி.எஸ்.என்.எல் தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில் மாறன் சகோதரர்களுக்கு எதிராக சி.பி.ஐ நீதிமன்றத்தில் சாட்சி விசாரணை தொடங்கியுள்ளது.

மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராகத் தயாநிதி மாறன் 2004 முதல் 2007 வரை பதவி வகித்த போது, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, தன்னுடைய சகோதரர், கலாநிதி மாறனுக்கு சொந்தமான சன் தொலைக்காட்சிக்குச் சென்னை பி.எஸ்.என்.எல்.இன் அதிவிரைவு தொலைபேசியின் 700 க்கும் மேற்பட்ட இணைப்புகளை, முறைகேடாக வழங்கியதில் அரசுக்கு 1 கோடியே 78லட்சத்து 71 ஆயிரத்து 391 ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக சிபிஐ 2013 ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கில், சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில், கடந்த ஜனவரி 30 ஆம் தேதி குற்றம்சாட்டப்பட்ட கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக கூட்டுச்சதி, போலி ஆவணங்கள் தயாரித்தல், குற்றத்திற்கு உடந்தையாக இருத்தல், நம்பிக்கை மோசடி, ஊழல் முறைகேடு ஆகிய பிரிவின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த நிலையில் சிபிஐ நீதிமன்றம் பதிவு செய்த குற்றச்சாட்டை ரத்து செய்ய வேண்டும் எனவும், சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் எனவும் மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 5 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை மார்ச் 20ஆம் தேதி விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உள்ளிட்டோர் தரப்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ததோடு, விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணையை 4 மாதத்தில் முடிக்குமாறும் தெரிவித்திருந்தது . வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றால் விசாரணை நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட மாறன் சகோதரர்கள் உள்ளிட்டோருக்கு எதிராக வாரண்ட் பிறப்பித்து சிறையில் அடைத்து வழக்கு விசாரணையைத் தொடரலாம் எனவும் உத்தரவிட்டது.

உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்துக் குற்றம்சாட்டப்பட்டவர்கள் ரவி, கண்ணன், கௌதமன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. சாட்சி விசாரணை தொடரலாம் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து சட்டவிரோத பி.எஸ்.என்.எல் இணைப்பு முறைகேடு வழக்கு, இன்று (ஏப்ரல் 24) 14 ஆவது சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஆர்.வசந்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில் 16 ஆவது சாட்சியான பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் முன்னாள் பொது மேலாளர் செல்வம் ஆஜராகி மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராகச் சாட்சியம் அளித்தார். செல்வத்திடம் இன்று விசாரணை முடிவடையாததைத் தொடர்ந்து நாளைக்குத் தொடர்ந்து விசாரணை தொடரும் என அறிவித்த நீதிபதி வசந்தி வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தார்.

புதன், 24 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon