மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 3 ஜூலை 2020

சவுகிதாரை துறந்து காங்கிரஸில் இணைந்த பாஜக எம்பி!

சவுகிதாரை துறந்து காங்கிரஸில் இணைந்த பாஜக எம்பி!

மக்களவைத் தேர்தலில் பாஜகவில் போட்டியிட சீட் வழங்கப்படாததால் பாஜகவிலிருந்து விலகிய எம்பி உதித் ராஜ் இன்று (ஏப்ரல் 24) காங்கிரஸில் இணைந்துள்ளார்.

2014ஆம் ஆண்டில் பாஜக சார்பில் போட்டியிட்டு டெல்லி வட மேற்கு தொகுதி எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் உதித் ராஜ். இந்திய வருவாய் சேவை பிரிவின் முன்னாள் அதிகாரியான இவர் தலித் செயற்பாட்டாளராகவும் இருந்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியினர் சவுகிதார் பிரச்சாரத்தை முன்னெடுக்கத் தொடங்கிய போது பாஜகவின் மற்ற நிர்வாகிகளைப் போலவே இவரும் ட்விட்டரில் தனது பெயருக்கு முன்னாள் சவுகிதார் என்ற பெயரை இணைத்துக்கொண்டார்.

இந்நிலையில் டெல்லி வட மேற்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட உதித் ராஜ்ஜுக்கு சீட் வழங்கப்படாமல் பாடகரும், அரசியல்வாதியுமான ஹன்ஸ் ராஜ்ஜிற்கு சீட் வழங்கப்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த உதித் ராஜ் பாஜகவிலிருந்து விலகி, இன்று (ஏப்ரல் 24) காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். ட்விட்டரில் தனது பெயருக்கு முன்னாள் போட்டிருந்த சவுகிதார் பெயரையும் உடனடியாக நீக்கியுள்ளார். உதித் ராஜ்ஜை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது என்று அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியில் இணைந்ததற்கான படத்தையும் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

காங்கிரஸில் இணைந்த வேகத்தில் பாஜகட்சி தலித் விரோத கட்சி என்பது தெளிவாக தெரிகிறது என்று உதித் ராஜ் குற்றம்சாட்டியுள்ளார். ”எனக்கு சீட் தருவார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் தரவில்லை. எனவே பாஜகவிலிருந்து வெளியேறுகிறேன்” என்று நேற்று உதித் ராஜ் அறிவித்திருந்த நிலையில் இன்று ராகுல் காந்தியை நேரில் சந்தித்து காங்கிரஸில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

புதன், 24 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon