மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 3 ஜூலை 2020

விருப்பங்களும் கட்டாயங்களும்!

விருப்பங்களும் கட்டாயங்களும்!

ஒரு கப் காபி!

வெற்றியாளர்கள், வெற்றியை ஒரு தேர்வாகப் பார்ப்பதில்லை; அது அடைந்தே தீர வேண்டிய ஒன்று என்ற வகையிலேயே அணுகுகிறார்கள். பெரும்பான்மை மக்கள், தாங்கள் விரும்பும் மாற்றத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போது, வெற்றியாளனின் மனநிலை என்பது, எது நடக்க வேண்டும் என்பதில் கவனத்தைக் குவிப்பதாக இருக்கும்.

உங்களது விருப்பங்கள் அனைத்தையும் அத்தியாவசியமானதாக மாற்றும் வலிமை உங்களுக்கு வேண்டும். நீங்கள் ஒன்றை விரும்பும் நிலையில் அது ஒரு தேர்வுதான். அது கிடைக்கலாம், கிடைக்காமலும் போகலாம். ஆனால், அடைந்தே ஆக வேண்டிய விஷயம் என்றால், அதில் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை. கிடைக்கிறதா பார்க்கலாம் என்னும் பேச்சுக்கே இடமில்லை. கிடைத்தே ஆக வேண்டும்.

ஒவ்வொருவருமே வெற்றிகரமாக இருக்க விரும்புகிறார்கள்; வெகு சிலர் மட்டுமே வெற்றியாளர்களாக இருக்க வேண்டியது கட்டாயம் என்று நினைக்கிறார்கள்.

நீங்கள் எப்படிப்பட்டவர்? உங்களது விருப்பங்களை உங்கள் கட்டாயங்களாக எப்படி மாற்றப் போகிறீர்கள்?

நீங்கள் விரும்பும் எல்லாவற்றுக்கும் ஒரு காரணம் அல்லது ஏன் என்ற கேள்விக்கான பதில் இருக்க வேண்டியது அவசியம்.

உதாரணம்: நான் வெற்றிகரமானவனாக இருந்தே ஆக வேண்டும். ஏனெனில் என் குழந்தைகளுக்காக நான் எதையாவது விட்டுச் செல்ல விரும்புகிறேன்.

நீங்கள் விரும்பும் எல்லாவற்றுக்குமான காரணத்தை நீங்கள் கண்டுவிட்டால், அதனால் கிடைக்கும் பலனின் மீது உங்களுக்கு ஆழ்ந்த வேட்கை சுடராக எரியத் தொடங்கிவிடும். அப்போது உங்கள் விருப்பங்கள் அனைத்தும் கட்டாயங்களாக மாறும்.

எனவே, உங்கள் விருப்பங்கள் அனைத்துக்கும் காரணங்களைத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

விருப்பங்கள் + ஏன்கள் = கட்டாயங்கள்

நான் நீண்டகாலம் வாழ்வதற்கு ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும்.

உடல் ஆற்றல் மற்றும் ஆரோக்கியத்துக்காக நான் உடற்பயிற்சி செய்தே ஆக வேண்டும்.

நான் கடினமாக உழைப்பதால் இளைப்பாறுதலுக்கு வெளியே செல்ல வேண்டும்.

ஆன்மிக ரீதியாக வலுவாக இருப்பதற்கு நான் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

உயிர்களுக்கு உதவ நான் தான தருமம் செய்ய வேண்டும்.

எனது அன்பை வெளிப்படுத்துவதற்காக நான் குடும்பத்துடன் கொஞ்சம் நேரம் செலவழிக்க வேண்டும்.

எனது நோக்கம் என்னை விடப் பெரியது. எனது விருப்பங்களுக்குக் காரணம் உண்டு. என் சுயநல ஆசைகளைவிட அவை முக்கியமானவை. அதனால் நான் பலன் கிடைக்கும் வரை போராட விரும்புகிறேன்.

உங்களது நோக்கங்களுக்காகப் போராடுவதற்கான விருப்பம் உங்களுக்கு வேண்டும். அதனால் உங்களது எல்லா விருப்பங்களையும் ஏன் என்பதற்கான காரணத்துடன் சேருங்கள். அப்போதுதான் உங்கள் கனவுகள் அனைத்தும் பலன் கொடுக்கும்.

- ஜானி டி. விம்ப்ரே

நன்றி: From the HOOD To doing GOOD (தீரட்டும் வேதனை மலரட்டும் சாதனை) என்னும் நூலிலிருந்து. வெளியீடு: சக்சஸ் ஞான்

புதன், 24 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon