மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 3 ஜூலை 2020

தேவராட்டம் சாதிப் படம் இல்லை: முத்தையா

தேவராட்டம் சாதிப் படம் இல்லை: முத்தையா

குட்டிப்புலி, கொடிவீரன், மருது, கொம்பன் ஆகிய படங்களை இயக்கியவர் முத்தையா. தென் மாவட்ட மக்களின் வாழ்வைச் சாதிப் பின்புலத்துடன் படமாக்கியவர். இவரது இயக்கத்தில் கௌதம் கார்த்திக், மஞ்சிமா மோகன், சூரி, வேல ராமமூர்த்தி, போஸ் வெங்கட் நடித்துள்ள தேவராட்டம் படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார்.

இப்படத்தின் அறிவிப்பு வெளியானபோது மீண்டும் ஒரு சாதிப் பெருமை பேசும் படமா என தேவராட்டம் பற்றி விமர்சனம் எழுந்தது. “இது சாதி படம் அல்ல, தேவராட்டம் என்பது ஒரு ஆட்டக்கலை. அதனை பெயராகக் கொண்டு அக்கா-தம்பிக்குமான உறவின் மேன்மையை உணர்வுப் பூர்வமாக கூறும் படம்” என்றார் இயக்குநர் முத்தையா.

மே 1 அன்று வெளிவரும் இப்படத்திற்கான பத்திரிகையாளர் சந்திப்பு இன்று காலை சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் தான் இயக்குநர் இவ்வாறு கூறியிருக்கிறார்.

“கொம்பன் படம் எனக்கு நல்ல அடையாளம். தேவராட்டம் சாதிப்படம் கிடையாது. எனக்கு அப்படி படம் எடுக்கவும் தெரியாது. குடும்ப உறவுகளைப் பற்றிய படம் தான் இது. ஏன் உன் படத்தில் அருவாள் இருக்கிறது என்கிறார்கள். கமர்ஷியல் படம் என்றால் அதை வைத்து தான் ஆகவேண்டிய இருக்கிறது.

வெளியில் வந்தால் தான் பிரண்ட்ஷிப். வீட்டுக்குள் வந்தால் உறவு தான். உறவுகள் சரியாக இருந்தால் தவறுகள் நடக்காது. பொள்ளாச்சி சம்பவத்தில் அப்படி ஈடுபட்டவர்களை பலரும் வெட்டவேண்டும் கொல்ல வேண்டும் என்றார்கள். அதை நிஜத்தில் செய்ய முடியவில்லை. அதனால் தான் அதைப் படத்தில் வைக்கிறோம். கோபத்தின் வெளிப்பாடு தான் ஹீரோவின் கேரக்டர்.

பணம் என்பது சினிமாவுக்கு ரொம்ப முக்கியம். அதனால் தான் கமர்ஷியல் விஷயங்களை படத்தில் அதிகமாக வைக்கிறேன். சிட்டியில் படம் எடுத்தாலும் உறவுகளைப் பற்றித்தான் படம் எடுப்பேன். தயவுசெய்து என்னை சாதிக்குள் கொண்டுபோய் அடைத்துவிடாதீர்கள்” என்றார் முத்தையா.

தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசும்போது, “இயக்குநர் முத்தையாவோடு எனக்கு இது இரண்டாவது படம். இந்தப்படம் ஒரே ஷெட்யூலில் 52 நாட்களில் எடுத்த படம்.

இவ்ளோ பெரிய ஆக்‌ஷன் படத்தை தொடர்ந்து வேலை செய்து எடுப்பது சாதாரணம் கிடையாது. நாங்கள் புரொடக்ஷன் சார்பில் யாருமே செல்லவில்லை. எல்லாவற்றையும் தன் சொந்தப்படம் போல முத்தையாவே பார்த்துக் கொண்டார்

கௌதமையும் மஞ்சிமாவையும் கிராமத்து படத்தில் காட்டுவது சரியாக இருக்குமா என்ற பயம் எனக்குள் இருந்தது. ஆனால் முத்தையா சரியாக வரும் என்றார். படம் பார்த்ததும் எனக்கு திருப்தியாகிவிட்டது. இயக்குநர் சொன்னது போலவே செய்திருக்கிறார். படத்தில் எல்லாமே உறவுமுறைகள் பற்றியது. இந்தப்படத்தைப் பார்த்த பின் எனக்கு அக்கா இல்லையே என்ற ஏக்கம் வந்தது.

இந்தப்படத்தைப் பார்த்த பின் அக்கா இல்லாதவர்கள் நமக்கு அக்கா இல்லையே என்று ஏங்குவார்கள். அக்கா இருப்பவர்கள் மேலும் பாசமாக இருப்பார்கள். வினோதினி, போஸ் வெங்கட் கேரக்டர் படத்திற்கு பெரிய பலம். வேல.ராமமூர்த்தி சார் கலக்கியிருக்கிறார்” என்றார்.

நாயகன் கௌதம் கார்த்திக் பேசும்போது, "இந்தப்படம் என்னைக் காப்பாற்றும் என்று நம்புகிறேன். எனக்கு இந்தப்படம் வந்ததிற்கு காரணம் ஞானவேல்ராஜா சார் தான். முத்தையா சார் தான் மதுரை மக்களின் பாஷையையும் வாழ்க்கை முறைகளையும் சொல்லித் தந்தார். சத்தியமாக மதுரை மக்களின் பாசம் போல யாரும் வைக்க முடியாது. பாடல்கள் சிறப்பாக வந்திருக்கிறது. என் அப்பாவிற்கு இப்படத்தில் இடம் பெற்றுள்ள பசப்புக்கள்ளி பாடல் மிகவும் பிடித்திருக்கிறது.

மஞ்சிமா மோகன் நிறைய சப்போர்ட் செய்திருக்கிறார். சரியான நேரத்திற்கு படப்பிடிப்பிற்கு வந்து விடுவார். ஒளிப்பதிவாளர் என்னை மிக அழகாக காட்டி இருக்கிறார். மதுரையை மிக மிக அழகாக காட்டி இருக்கிறார்” என்றார்.

நடிகை மஞ்சிமா மோகன் பேசும்போது, "தேவராட்டம் எனக்கு முக்கியமான படம். முத்தையா சார் முதலில் ஒரு படத்திற்காக கேட்டார். அப்போது டேட் இல்லாததால் நடிக்க முடியவில்லை. மீண்டும் நான் உங்களை தேடி வருவேன் என்றார். சொன்னது போலவே இந்தப்படத்திற்கு என்னை நடிக்க அழைத்தார். கௌதம் நல்ல எனர்ஜியான நடிகர். படத்தில் என்னோடு ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி” என்றார்.

எழுத்தாளரும் நடிகருமான வேல.ராமமூர்த்தி பேசும்போது, "எனக்கு நல்ல அடையாளத்தை கொம்பன் படம் மூலமாக ஏற்படுத்தித் தந்த தம்பி முத்தையாவிற்கு நன்றி. அவர் தொடர்ந்து தன் படங்களில் குடும்ப உறவுகளைப் பற்றிப் பதிவு செய்து வருகிறார். இந்த தேவராட்டம் படம் அக்கா தம்பி பாசத்தை அடிப்படையாக கொண்டது. அக்காவின் பாசம் அம்மாவின் பாசத்திற்கு ஈடானது. இரு பெருங் குடும்பங்களின் கதை இது. அந்தப் பெருங்குடும்பங்களின் ஆணிவேராக என் கேரக்டர் இருக்கிறது” என்றார்.

புதன், 24 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon