மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 3 ஜூலை 2020

தயாநிதி அழகிரியின் ரூ.40 கோடி சொத்துக்கள் முடக்கம்!

தயாநிதி அழகிரியின்  ரூ.40 கோடி சொத்துக்கள் முடக்கம்!

கிரானைட் சுரங்க முறைகேடு விவகாரம் தொடர்பாக மு.க.அழகிரி மகன் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான சொத்துக்களை அமலாக்கத் துறை இன்று (ஏப்ரல் 24) முடக்கியுள்ளது.

இதுதொடர்பாக அமலாக்கத் துறை வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில், “ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனத்துக்கு சொந்தமாக மதுரை, சென்னை ஆகிய இடங்களிலுள்ள நிலம், கட்டிடங்கள், வங்கியிலுள்ள வைப்புத் தொகை உள்ளிட்ட 40.34 கோடி மதிப்புள்ள 25 அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அமலாக்கத் துறையால் முடக்கப்பட்டுள்ளது. கிரானைட் சுரங்க முறைகேடு விவகாரம் தொடர்பாக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் மேற்குறிப்பிட்ட சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒலிம்பஸ் நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளர், பங்குதாரர்கள் மீது தமிழக போலீசார் பதிவு செய்த வழக்கு, தாக்கல் செய்த குற்றப் பத்திரிகை ஆகியவற்றின் அடிப்படையில் அமலாக்கத் துறை விசாரணை நடத்தி மேற்கண்ட நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.காவல்துறையின் குற்றப்பத்திரிகையில் மேற்கூறிய நிறுவனம் பல்வேறு விதிமுறை மீறல்களில் ஈடுபட்டதாகத் தெரிவித்துள்ளது. தயாநிதி அழகிரி உள்ளிட்டோர் சுரங்க முறைகேடுகளில் ஈடுபட்டு, தவறான முறையில் அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியதோடு, தவறான வழியில் லாபம் ஈட்டியுள்ளனர் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி மற்றும் திமுக பிரமுகர் சூடாமணியின் மகன் நாகராஜன் ஆகியோரை பங்குதாரர்களாக கொண்டு இயங்கியது ஒலிம்பஸ் நிறுவனம். மேலூர் அருகே கீழவளவு பகுதியில் சுமார் 3 ஏக்கர் நிலப்பரப்பில் இந்நிறுவனத்துக்கு சொந்தமாக குவாரி அமைந்திருந்தது. அதிமுக ஆட்சி அமைந்த பிறகு 2012ஆம் ஆண்டில் முறைகேடாக கிரானைட் வெட்டி எடுத்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறி பல கிரானைட் நிறுவனங்களின் உரிமம் ரத்துசெய்யப்பட்டு குவாரிகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

அதுபோல குறிப்பிட்ட அளவை விட அதிகமாக கிரானைட் வெட்டி எடுத்து அரசுக்கு ரூ.254 கோடி இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறி துரை தயாநிதி உள்ளிட்ட 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதில் கைது செய்யப்படாமல் இருக்க பல நாட்களாக தலைமறைவாக இருந்த தயாநிதி, ஜாமீன் கிடைத்த பிறகுதான் 2012 டிசம்பர் மாதம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

இதுதொடர்பாக மதுரை மேலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நீண்ட காலமாக நடந்து வரும் வழக்கில் 2017ஆம் ஆண்டு துரை தயாநிதி உள்ளிட்டோர் மீது 5191 பக்க குற்றப் பத்திரிகையை தமிழக அரசு தாக்கல் செய்தது. இவ்வழக்கில், தற்போது தயாநிதி அழகிரியின் சொத்துக்கள் முடக்கப்பட்டிருப்பது அழகிரி ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதன், 24 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon