மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 3 ஜூலை 2020

இரட்டை இலை: உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் சசிகலா

இரட்டை இலை: உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் சசிகலா

இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கோரி சசிகலா தரப்பிலிருந்து உச்ச நீதிமன்றத்தில் இன்று மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் தீர்ப்பு வழங்கிய டெல்லி உயர் நீதிமன்றம், எடப்பாடி பழனிசாமி-பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது செல்லும் என்று உத்தரவிட்டது. சசிகலா, தினகரன் ஆகியோர் தனித் தனியாக தாக்கல் செய்த மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.

டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சசிகலா, தினகரன் தரப்பிலிருந்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு அதில், இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைக்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது. இதனிடையே கடந்த மாதம் 26ஆம் தேதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு குக்கர் சின்னம் ஒதுக்கக் கோரிய மனுவை விசாரித்த நீதிபதிகள், இரட்டை இலை தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை முடித்து வைப்பதாக தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து அமமுகவைக் கட்சியாக பதிவு செய்ய முடிவெடுக்கப்பட்டு, அக்கட்சியின் பொதுச் செயலாளராக தினகரன் பதவியேற்றுக் கொண்டார். சசிகலாவுக்காக தலைவர் பதவி காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் கடந்த 22ஆம் தேதி கட்சியைப் பதிவு செய்ய தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டது. தான் அமமுகவை வழி நடத்துவேன் என்றும், இரட்டை இலை சின்னம் தொடர்பான சட்டப் போராட்டத்தை சசிகலா தொடர்வார் என்றும் தினகரன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இரட்டை இலை சின்னம் தொடர்பாக சசிகலா தரப்பிலிருந்து இன்று (ஏப்ரல் 24) சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், எடப்பாடி-பன்னீர் தரப்புக்கு இரட்டை இலை சின்னம் வழங்கிய தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டுமெனவும், தங்களுக்கு இரட்டை இலை சின்னத்தை வழங்கிட உத்தரவிட வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் இவ்வழக்கை தாக்கல் செய்துள்ளார். கட்சியைப் பதிவு செய்துவிட்டதால் தினகரன் இதில் மனுதாரராக சேர்க்கப்படவில்லை.

புதன், 24 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon