மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 3 ஜூலை 2020

போலி ஐஏஎஸ் அதிகாரி மீது நடவடிக்கை!

போலி ஐஏஎஸ் அதிகாரி மீது நடவடிக்கை!

ஐஏஎஸ் அதிகாரி எனக் கூறி, அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த வழக்கில், கைது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக மத்திய குற்றப்பிரிவு காவல் துறை தெரிவித்துள்ளது.

தமிழக தலைமைச் செயலகத்தில் உள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் துணைச் செயலாளராக பணியாற்றுவதாகக் கூறி, அரசு வேலை வாங்கித்தருவதாக 70 லட்சம் ரூபாய் மோசடி செய்த திருவண்ணாமலையைச் சேர்ந்த நாவப்பன் மீது அளித்த புகார் தொடர்பாக விசாரணை நடத்தக் கோரி சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், தன்னை ஐஏஎஸ் அதிகாரி எனக் கூறிக்கொண்ட நாவப்பன், ஏற்கனவே 50 பேரிடம் அரசு வேலை வாங்கித்தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார். இதுபற்றிய செய்தியைப் பார்த்த பின், தலைமைச் செயலாளரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், தங்களுக்கு 2 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும். முறையான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்

இந்த வழக்கு மார்ச் 9ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றத்தில் ஆஜரான சென்னை மத்திய குற்றப் பிரிவு ஆய்வாளர், இந்த வழக்கு குறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தார்.

இந்த மனு நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன்பு மீண்டும் இன்று (ஏப்ரல் 24) விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு காவல் துறை சார்பில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து கைது செய்து இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

புதன், 24 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon