மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 8 ஜூலை 2020

ராதிகா: மோகன் லாலுக்காக ஒரு படம்!

ராதிகா: மோகன் லாலுக்காக ஒரு படம்!

இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் இருந்து ஏப்ரல் 21ஆம் தேதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் ராதிகா. தற்போது இவர் மோகன்லால் நடிக்கும் புதிய படத்தில் இணைந்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் நடித்த இப்படை வெல்லும் படத்திற்குப் பின் ராதிகா நடிப்பில் வேறு எந்தப் படத்திலும் வெளியாகவில்லை. இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சின்னத்திரையில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக இருந்து வரும் ராதிகா தான் நடித்துவந்த சந்திரகுமாரி தொடரில் இருந்து அண்மையில் விலகினார். அவரது கதாபாத்திரத்தில் விஜி சந்திரசேகர் இணைந்து நடித்துவருகிறார்.

தற்போது ராதிகா திரையுலகில் அதிகமாக கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார். அந்த வகையில் 30 ஆண்டுகளுக்குப் பின் சமீபத்தில் கன்னடப் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமானார். யுவ ரத்னா என்ற அப்படத்தில் சாயிஷா, புனித்ராஜ்குமார் இணைந்து நடிக்கின்றனர்.

தற்போது மோகன்லால் கதாநாயகனாக நடிக்கும் ’இத்யாமானி மேட் இன் சைனா’ என்ற மலையாளப் படத்தில் இணைந்துள்ளார். அதன் பணிகள் பூஜையுடன் தொடங்கியுள்ளன. அறிமுக இயக்குநர் ஜிபி ஜோஜு இயக்குகிறார். அந்தோணி பெரும்பாவூர் தனது ஆசீர்வாத் சினிமாஸ் மூலம் தயாரிக்கிறார்.

இந்தப் படத்தில் இணைந்தது குறித்து ராதிகா, “மோகன்லாலுடன் இணைந்து நடிப்பது பெருமையாகவும் கௌரவமாகவும் உள்ளது. நான் இந்தப் படத்தில் நடிக்க சம்மதித்ததற்கு அவர் நன்றி சொன்னது இன்னும் பெருமையாக உள்ளது. நீங்கள் இல்லையென்றால் இந்தக் கதையில் நான் நடித்திருக்கமாட்டேன் சார்” என்று ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

சிவகார்த்திகேயன், நயன்தாரா இணைந்து நடித்துள்ள மிஸ்டர் லோக்கல் படத்தில் ராதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்தப் படம் மே 17ஆம் தேதி வெளியாகவுள்ளது. மோகன்லால் சூர்யா கதாநாயகனாக நடிக்கும் காப்பான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது அதன் பணிகள் பரபரப்பாக நடைபெற்றுவருகின்றன.

புதன், 24 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon