மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 3 ஜூலை 2020

புலன் விசாரணை தரத்தை மேம்படுத்தக் குழு!

புலன் விசாரணை தரத்தை மேம்படுத்தக் குழு!

குற்ற வழக்குகளின் புலன் விசாரணை தரத்தை மேம்படுத்துவது குறித்து பரிந்துரை வழங்க முன்னாள் காவல் ஆணையர் ஆர். நடராஜ் உள்ளிட்ட 5 பேர் அடங்கிய குழுவை அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கு ஒன்றில் ஜாமீன் கோரி இருவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், 7 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை வழங்க கூடிய வழக்குகள், 10 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை வழங்க கூடிய வழக்குகள் மற்றும் ஆயுள் தண்டனை வழங்க கூடிய வழக்குகளின் எண்ணிக்கையை மாவட்ட வாரியாக அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக காவல்துறை டிஜிபிக்கு உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி டிஜிபி தாக்கல் செய்த அறிக்கையில், சென்னையில் 10 ஆண்டுகள் தண்டனை வழங்கக்கூடிய வழக்குகளின் எண்ணிக்கை 2017ல் 297 என்று இருந்தது. 2018ல் 476 ஆக அதிகரித்துள்ளது எனவும், ஆயுள் தண்டனை வழங்கும் வழக்குகளின் எண்ணிக்கை 203 ஆக இருந்தது 2018ஆம் ஆண்டில் 230 ஆக அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 2013 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் 3 ஆண்டுகள் தண்டனை வழங்கக்கூடிய வழக்குகளில் 3.35 லட்சம் வழக்குகள் தண்டனையில் முடிந்துள்ளதாகவும், 54,052 வழக்குகள் விடுதலையில் முடிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் தண்டனை வழக்குகளில் 868 வழக்குகள் தண்டனையிலும், 1558 வழக்குகள் விடுதலையிலும் முடிந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், திருவள்ளூர், தஞ்சாவூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், நாகப்பட்டினம் மாவட்டங்களில், 7 முதல் 10 ஆண்டுகள் தண்டனை வழக்குகளும், ஆயுள் தண்டனை வழக்குகளும் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த அறிக்கை முழுமையாக இல்லை எனத் தெரிவித்த நீதிபதி, 2013ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 2018ஆம் ஆண்டில் குற்ற வழக்குகள் அதிகரித்துள்ளதாக வேதனை தெரிவித்தார்.

மேலும், விடுதலை எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறித்து நீதிபதி அதிருப்தி தெரிவித்தார். இந்தியாவின் நீதி பரிபாலனம் என்பது குற்றவாளிகளை சீர்திருத்தி மறு வாழ்வு வழங்கும் வகையில் உள்ளது. ஆனால் குற்றவாளிகளை எப்போதும் குற்றவாளியாகவே வைத்திருக்கும் வகையில் ஒரு வழக்கில் சிக்கியவர்கள், திருந்தி புது வாழ்வு வாழ அனுமதிக்காத வகையில், தொடர்ச்சியாக வழக்கு பதிவு செய்யப்படுவதாகக் குற்றம்சாட்டினார்.

மேலும், புலன் விசாரணையின் தரத்தை மேம்படுத்துவதற்கும், குற்றவாளியின் சீர்திருத்தம் மற்றும் மறுவாழ்வுக்கு தேவையான நடைமுறைகளை கண்டறியவும் முன்னாள் காவல் ஆணையர் ஆர். நடராஜ், ஓய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளர் சித்தண்ணன், மூத்த வழக்கறிஞர் என். ஆர். இளங்கோ, பேன்யன் அமைப்பின் இயக்குனர் கிஷோர் குமார், அண்ணா நகர் துணை ஆணையர் சுதாகர் அடங்கிய குழுவை அமைத்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.

8 வாரங்களில் அறிக்கை அளிக்க அக்குழுவுக்கு உத்தரவிட்ட நீதிபதி, டிஜிபியின் அறிக்கை முழுமையாக இல்லாததால் மாவட்டங்களின் முழு விவரங்களை திரட்டி, அறிக்கையுடன் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இந்த குழுவிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க அரசுக்கு அறிவுறுத்தினார்.

புதன், 24 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon