மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 3 ஜூலை 2020

மம்தா அனுப்பிய பரிசு: மனம் திறந்த மோடி

மம்தா அனுப்பிய  பரிசு: மனம்  திறந்த மோடி

எதிர்க்கட்சிகளிலும் தனக்கு நண்பர்கள் இருப்பதாகவும், பத்திரிகையாளர்களின் கணிப்புக்கு மாறான பல சம்பவங்கள் அரசியலில் நடப்பதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இன்று (ஏப்ரல் 24) ஏ.என்.ஐ. ஊடகத்துக்காக பிரபல நடிகர் அக்‌ஷய் குமாருக்கு பிரதமர் மோடி அளித்த சிறப்புப் பேட்டியில் அரசியல் தாண்டிய பல விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

அப்போது எதிர்க்கட்சியில் தனக்கு மிக நெருக்கமான நண்பர்களாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியையும், காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தையும் குறிப்பிட்டுள்ளார் பிரதமர்.

மம்தாவும் மோடியும் மக்களவைத் தேர்தல் களங்களில் கடுமையான வார்த்தைப் பிரயோகங்களால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டிருக்கும் நிலையில் பிரதமரின் இந்த பேட்டி அரசியல் வட்டாரங்களில் கவனிப்பை ஏற்படுத்தியுள்ளது.

“பங்களாதேஷ் நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா எனக்கு வருடத்தின் சில சிறப்பான நாட்களை ஒட்டி இனிப்புகளை பரிசாக அனுப்பி வைப்பார். இது மம்தா பானர்ஜிக்கு தெரியவந்தபிறகு அவரும் எனக்குப் பரிசுகளை அனுப்ப ஆரம்பித்தார். இனிப்புகளையும் குர்தாக்களையும் எனக்கு மம்தா பரிசாக அனுப்பி வைப்பது வழக்கம். ஒவ்வொரு வருடம் குர்தாக்களை எனக்கு அனுப்பி வைப்பார் மம்தா. இந்த வருடம்கூட ஓரிரு குர்தாக்களை தேர்ந்தெடுத்து வைத்திருப்பார்” என்று குறிப்பிட்டுள்ளார் மோடி.

மேலும், “நான் குஜராத்தின் முதல்வர் ஆகாத நிலையில் ஒரு நாள் சில வேலைகளுக்காக டெல்லி சென்றிருந்தபோது நாடாளுமன்றம் சென்றிருந்தேன். அங்கே குலாம் நபி ஆசாத்தோடு பேசிக்கொண்டிருந்தேன். நாங்கள் இருவரும் சிரித்துப் பேசிக்கொண்டே வெளியே வரும்போது பத்திரிகையாளர்கள் சிலர் என்னிடம் இதுபற்றி ஆச்சரியமாய் கேட்டார்கள். அதற்கு குலாம் நபி ஆசாத், ‘நாங்கள் ஒரு குடும்பத்தினரைப் போன்ற உணர்வோடு ஒன்றுபட்டிருக்கிறோம். இதெல்லாம் வெளியுலகத்துக்குத் தெரியாது’ என பதில் சொன்னார்” என்று தெரிவித்துள்ளார் மோடி.

புதன், 24 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon