மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 3 ஜூலை 2020

இலங்கை குண்டுவெடிப்பு: அமைச்சர் பேட்டி!

இலங்கை குண்டுவெடிப்பு: அமைச்சர் பேட்டி!

இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு தாக்குதலில் தொடர்புடைய பெரும்பாலான தற்கொலை படையினர் வெளிநாடுகளில் படித்திருக்கின்றனர் என்று தான் கருதுவதாக இலங்கை அமைச்சர் ரூவன் விஜயவர்தனே தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடந்த ஞாயிறு முதல் பல்வேறு இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டு வருகிறது. இதில் இன்று (ஏப்ரல் 24) காலை நிலவரப்படி பலியானோரின் எண்ணிக்கை 359ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் இன்று (ஏப்ரல் 24) செய்தியாளர்களைச் சந்தித்த இலங்கை பாதுகாப்பு துணை அமைச்சர் ரூவன் விஜயவர்தனே, கொழும்பு நகரிலுள்ள வெள்ளவத்தா என்ற பகுதியில், சவாய் என்ற திரையரங்கு உள்ளது. அதன் முன்பாக சந்தேகப்படும் படியாக இரு சக்கர வாகனம் ஒன்று நின்று கொண்டிருந்தது. அதில் வெடிகுண்டு இருப்பதாக சந்தேகித்து சோதனை நடத்தப்பட்டது. ஆனால் வாகனத்தின் சீட்டை திறக்க முடியாததால் அந்த வாகனத்தையே அழிக்க முடிவு செய்யப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், பயங்கரவாத குழுக்கள் இரண்டு பிரிவுகளாக பிரிந்து செயல்படுவதாகத் தெரிவித்தார். கடந்த ஞாயிறு அன்று நிகழ்த்தப்பட்ட தற்கொலைப் படையைச் சேர்ந்த ஒருவர் பட்டப்படிப்பை இங்கிலாந்திலும் , முதுகலைப் பட்டத்தை ஆஸ்திரேலியாவிலும் முடித்திருப்பதாக நம்புவதாக தெரிவித்துள்ளார்.

இலங்கை தற்கொலை படை குழுவைச் சேர்ந்தவர்களில் பெரும்பாலானோர், நடுத்தர அல்லது உயர் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் பொருளாதாரத்தில் நிலையானவர்களாக இருக்க வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இவர்களில் பலர் பல்வேறு நாடுகளில் சட்டம் உள்ளிட்ட படிப்புகளையும் படித்திருக்கின்றனர் என்று கருதுவதாகக் கூறுகிறார்.

தொடர்ந்து பேசிய அவர், குண்டு வெடிப்பு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. . குண்டுவெடிப்பில் உயிரிழந்த 359 பேரில் 39 பேர் வெளிநாட்டினர் என்று குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற சோதனைகளில் நேற்று மாலை முதல் இன்று காலை வரை மட்டும் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.

புதன், 24 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon