மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 3 ஜூலை 2020

தலைமை நீதிபதி மீது பாலியல் புகார் கூறியவருக்கு நோட்டீஸ்!

தலைமை நீதிபதி மீது பாலியல் புகார் கூறியவருக்கு நோட்டீஸ்!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார் கூறிய பெண்ணுக்கு விசாரணை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஏப்ரல் 20ஆம் தேதி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு கடிதம் அனுப்பிய விவகாரம் தொடர்பாக விசாரிக்க 3 நீதிபதிகள் கொண்ட விசாரணை ஆணையம் நேற்று (ஏப்ரல் 23) அமைக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி எஸ்.ஏ.போப்தே தலைமையில் அமைக்கப்பட்ட இந்த விசாரணை ஆணையத்தில் நீதிபதிகள் ரமணா மற்றும் இந்திரா பானர்ஜி உள்ளிட்ட 3 பேர் உள்ளனர். பெண் வழக்கறிஞர்கள் சங்கம், உச்ச நீதிமன்ற பதிவு வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் சில மூத்த வழக்கறிஞர்கள் இப்பாலியல் புகாரில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், உச்ச நீதிமன்றம் சிறப்பு அமர்வு அமைத்துத் தானாக விசாரணையைத் தொடங்கியதற்கும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் இந்த விசாரணை ஆணையம் நேற்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆணையம் குறித்து மூத்த நீதிபதி போப்தே பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், ”மூத்த நீதிபதி என்ற வகையில் ரமணாவும், பெண் நீதிபதி விசாரணை ஆணையத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக இந்திரா பானர்ஜியும் இந்த ஆணையத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். நீதிபதிகள் மீதான பாலியல் புகார் குறித்து விசாரிக்க உருவாக்கப்பட்டுள்ள in-house procedure-இன் படி இந்த விசாரணை ஆணையம் செயல்படும்” என்று கூறியுள்ளார்.

இந்த ஆணையத்தின் முதல் விசாரணை ஏப்ரல் 26ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான ஆவணங்களை தயார்படுத்துமாறும் உச்ச நீதிமன்ற பொதுச் செயலாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அன்றைய தினத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய பெண் ஆஜராக வேண்டுமென நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. விசாரணை எப்போது முடிக்கப்பட வேண்டும் என்பதற்கான கால வரையறை எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை எனவும், விசாரணையில் பதிவு செய்யப்படும் தகவல்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்படும் எனவும் போப்தே கூறியுள்ளார்.

மேலும் இந்த விவகாரம் குறித்து ஆலோசனை நடத்த சிபிஐ இயக்குநர், டெல்லி காவல் ஆணையர் மற்றும் புலனாய்வுப் பிரிவு இயக்குநர் இன்று நண்பகல் 12.30 மணிக்கு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

புதன், 24 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon