மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 24 ஏப் 2019

மயூரன்: த்ரில்லர் களமான கல்லூரியின் விடுதி!

மயூரன்: த்ரில்லர் களமான கல்லூரியின் விடுதி!

கல்லூரியின் விடுதி வாழ்க்கை குறித்து கிரைம் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ளது மயூரன் திரைப்படம்.

இயக்குநர் பாலாவிடம் நந்தா, பிதாமகன் உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் நந்தன் சுப்பாராயன். இவர் இயக்குநராக அறிமுகமாகும் மயூரன் திரைப்படத்தில் அஞ்சன் தேவ் கதாநாயகனாக நடிக்க, ஆஸ்மிதா கதாநாயகியாக நடிக்கிறார். ஆஸ்மிதா தேசிய நாடகப் பள்ளியில் பயின்றவர் ஆவார்.

கல்லூரியின் விடுதியில் இருந்து ஒரு நாள் இரவு ஒரு மாணவர் காணாமல் போகிறார். அவரைத் தேடிச் செல்கின்றனர் நண்பர்கள். ஆனால் அப்போது அவர்கள் பல உண்மைகளைக் கண்டறிகின்றனர். கல்லூரி விடுதி வாழ்க்கை கொண்டாட்டம் நிறைந்தது மட்டுமல்ல என்று கூறும் இப்படம் ஹாஸ்டல் பின்னணியில் கிரைம் த்ரில்லர் பாணியில் பல சம்வங்களை கொண்டுள்ளது.

பாலாஜி ராதாகிருஷ்ணன், ஆனந்தசாமி, வேலராமமூர்த்தி, அமுதவன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கூத்துப் பட்டறையில் இருந்து பல கலைஞர்களை படக்குழுவில் இணைத்துள்ளனர். சிதம்பரத்தின் பின்னணியில் கதை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான படப்பிடிப்பு காரைக்கால், பாண்டிச்சேரியைச் சுற்றியுள்ள பல இடங்களில் நடைபெற்றுள்ளது.

நான் லீனியர் பாணியில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் பணிகள் முழுவதும் நிறைவடைந்து தணிக்கை துறையிடம் சான்றிதழுக்காக விண்ணப்பிக்கப்பட்டது. தணிக்கை துறை யு சான்றிதழ் வழங்கியுள்ளது. மே மாதம் படத்தை வெளியிடும் முயற்சியில் படக்குழு ஈடுபட்டுள்ளது.

புதன், 24 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon