மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 3 ஜூலை 2020

ரஜினி கட்சியினருக்குதான் தனுஷ் மன்றத்தில் பதவியா?

ரஜினி கட்சியினருக்குதான் தனுஷ்  மன்றத்தில் பதவியா?

ரசிகர் மன்ற பதவிகள் இங்கு விற்கப்படும் என்ற தலைப்பிட்டு தனுஷ் ரசிகர் மன்றத்தினர் பெயரில் சென்னையில் ஒட்டப்பட்டிருக்கும் பெரிய பெரிய போஸ்டர்கள் திரையுலகில் சலசலப்பைக் கிளப்பியிருக்கின்றன.

தலைவன் தனுஷ் நடவடிக்கை எடுப்பாரா என்ற கேள்வியோடு சென்னை மாவட்டம், காஞ்சிபுரம், கடலூர், திருவாரூர், புதுக்கோட்டை, சேலம், திருவண்ணாமலை மாவட்ட தனுஷ் ரசிகர் மன்றத்தினர் ஒட்டிய போஸ்டர்களில்,

”தனுஷ் மன்றத்தில் உழைக்கிறவர்களுக்கு பதவிகள் கிடையாது. பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே பதவிகள் கொடுக்கப்படும். அதையும் வருடத்துக்கு ஒரு முறை பணம் கொடுத்து புதுப்பித்துக் கொள்ள வேண்டும். ரஜினி கட்சியைத் தவிர மாற்றுக் கட்சியில் உள்ளவர்களுக்கு தனுஷ் மன்றத்தில் இடம் இல்லை” என்றெல்லாம் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மேலும் இதற்குக் காரணம், அகில இந்திய தலைவர் இயக்குனர் சுப்பிரமணிய சிவாவும், அகில இந்திய செயலாளர் டச்சப் ராஜாவும்தான் என்று அந்த போஸ்டரில் குற்றம் சாட்டியிருக்கிறார்கள்.

இதுபற்றி தனுஷ் மன்றத்தின் செயலாளர் டச்சப் ராஜாவிடம் பேசினோம். “அது மன்றத் தலைமையால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள் சிலரின் வேலை. இந்த போஸ்டர்கள் பற்றி தனுஷ் சாரின் கவனத்துக்குக் கொண்டு போய்விட்டோம். இதுபற்றி பெரிதுபடுத்தத் தேவையில்லை” என்றார்.

புதன், 24 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon