மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 3 ஜூலை 2020

தமிழர்களை ஈர்த்த மலையாளப் படங்கள் – தேவிபாரதி

தமிழர்களை ஈர்த்த மலையாளப் படங்கள் – தேவிபாரதி

சினிமா பாரடைசோ – 24

அரச்சலூர் டூரிங் டாக்கீசில் வேலை செய்துகொண்டிருந்தபோது முதன்முதலாக தெலுங்குத் திரைப்படம் ஒன்றைத் திரையிட்டார்கள். ஏற்கனவே திரையிடத் திட்டமிட்டிருந்த தமிழ்ப் படத்தின் பெட்டி வந்து சேர்ந்திருக்காததால் இரண்டு நாட்களுக்கான இடைக்கால ஏற்பாடு. படப்பெட்டியோடு வால் போஸ்டர்களும் வந்து சேர்ந்திருந்தன. வால்போஸ்டரில் நடிகையொருவரின் கவர்ச்சித் தோற்றம் இடம் பெற்றிருந்தது. கவர்ச்சிப் படம் என்ற அடைமொழியோடு அந்த போஸ்டர்களை ஒட்டியிருந்ததால் பெண்கள் யாரும் அன்றைய காட்சிகளுக்கு வரவில்லை. ஆண்கள் கூட்டமும் பெரிதாக இல்லை. ஏழெட்டு மூத்த குடிமக்கள், இரண்டு மூன்று இளைஞர்கள் தவிர நான்கைந்து சிறுவர்கள் என மொத்தம் பதினைந்து பேர்.

அன்று முறுக்குத் தட்டம் எடுக்க வேண்டிய தேவை இல்லாமல் போனதால் நானும் எனது கேண்டீன் தோழர்களும் படம் பார்க்க உட்கார்ந்துவிட்டோம். தன்னைச் சீரழித்த நான்கு கயவர்களை இளம்பெண் ஒருத்தி பழிவாங்குவதுதான் கதை. எடுத்த எடுப்பிலேயே நாயகியும் அவளுடைய காதலரும் பாடிக்கொண்டே பூங்கா ஒன்றில் சுற்றித் திரிந்தார்கள், பிறகு இருவரும் தனித்தனியாக அவரவர் வீடுகளில் மல்லார்ந்து படுத்தவாக்கில் கனவுகளில் மூழ்கினார்கள், தொலைபேசியில் உரையாடினார்கள், சிரித்தார்கள். பிறகு இருவரும் சேர்ந்து கடற்கரைக்குப் போனார்கள், தெலுங்கில் பேசிச் சிரித்துக்கொண்டே கடல் அலைகளில் நனைந்தார்கள், பிறகு உடை மாற்றுவதற்காக எதிரே இருந்த சவுக்குத் தோப்புக்குப் போனாள் நாயகி.

அவள் துணி மாற்றிய காட்சியைக் கண்ட அந்தப் பத்துப் பதினைந்து பார்வையாளர்கள் திகைத்துப் போனார்கள். அவள் துணி மாற்றிக்கொண்டிருந்தபோதே சவுக்குத் தோப்புக்குள்ளிருந்து நான்கைந்து பேர் வந்தார்கள். அடுத்தாக வந்தது ஏறத்தாழ இரண்டு நிமிடங்கள் ஓடக்கூடிய பாலியல் வன்முறைக் காட்சி. அதில் நாயகி கிழிக்கப்பட்ட மேலாடையுடன் இருபது முப்பது வினாடிகள் திரையில் தோன்றினாள். பிறகு ஒரு சண்டைக் காட்சி, அதில் நாயகியின் காதலன் கொல்லப்படுகிறான். உயிரோடு விடப்பட்ட நாயகி அடுத்த இரண்டு காட்சிகளுக்குப் பிறகு நவநாகரீக மங்கையாக மாறி அந்த நால்வரையும் தேடிச் சென்று அவர்களைப் பழிவாங்குகிறாள், அப்போது அவள் நான்கைந்து முறை குளிக்கிறாள், ஒரு முறை அருவியில், இரண்டாவது முறை கடலில், மீதி இரண்டு முறைகளிலும் ஷவரில். முதல் முறை அவள் குளித்தபோது வாய் பிளந்து பார்த்துக்கொண்டிருந்த முதியவர்கள் இரண்டாம் முறை குளித்தபோது பெருமூச்செறிந்தார்கள், மூன்றாம் முறை குளித்தபோது விசில் அடித்தார்கள், நான்காம் முறை குளித்தபோது உற்சாகக் கூச்சல் எழுப்பினார்கள்.

அன்றைய இரண்டாம் ஆட்டத்திற்கும் கூட்டமில்லை. முதல் காட்சி பார்த்தவர்களில் இரண்டு மூன்று மூத்த குடிமக்களும் இளைஞர்களில் ஒருவரும் இரண்டாம் காட்சிக்கும் டிக்கெட் வாங்கினார்கள். என்ன காரணத்தாலோ இரண்டாம் நாளும் அந்தத் தெலுங்குப் படத்தையே திரையிட்டார்கள். அன்று கூட்டம் அலைமோதியது. முதியவர்கள், இளைஞர்கள், சிறுவர்கள் என ஏறத்தாழ நூற்றைம்பது பேர். கூட்டத்தைப் பார்த்து வியந்துபோன டென்ட் கொட்டகை முதலாளி மேலும் இரண்டு நாட்கள் வரை அந்தப் படத்தை ஓடச் செய்தார். ஐந்தாம் நாள் அவர் எதிர்பார்த்துக்கொண்டிருந்த படத்தின் பெட்டி வந்தது. சில வாரங்களுக்கு முன் ரிலீஸ் ஆகியிருந்த சிவாஜி படம். படத்தின் பெயர் தர்மம் எங்கே?

படம் இரண்டு நாட்களுக்கு மேல் ஓடவில்லை.

மலையாளப் படங்களின் வருகை

அதற்குப் பிறகு மாதத்திற்கு இரண்டு மூன்று முறை தெலுங்கு, மலையாளப் படங்களைத் திரையிட்டார்கள். கவர்ச்சிக் காட்சிகள் நிரம்பிய படம் என விளம்பரப்படுத்தினார்கள், ஒரு மலையாளப் படத்திற்கான போஸ்டரில் குளியல் காட்சிகள் நிரம்பிய படம் என்றுகூட ஒரு விளம்பர வாக்கியம் தென்பட்டது. ஆறேழு மாதங்களில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த நூற்றைம்பது, இருநூறு நிரந்தரப் பார்வையாளர்கள் அது போன்ற படங்களுக்கென உருவானார்கள்.

வழக்கமான நாட்களில் அதுபோன்ற படங்களைத் திரையிடுவது பெண் பார்வையார்களின் வருகையை பாதித்ததால் வார விடுமுறை நாட்களின் பகல் காட்சிகளை அந்தப் படங்களுக்காக ஒதுக்கினார்கள். பெரும்பாலும் மலையாளப் படங்கள். அவற்றில் பெரும்பாலானவை நல்ல கதையம்சம் கொண்ட படங்கள். அப்போதைய மலையாள முன்னணி நாயக நாயகியர் நடித்த படங்கள். அவற்றில் தோன்றும் பெண்கள் முண்டு உடுத்துக்கொண்டு தோன்றினார்கள். தழையத் தழையச் சேலை உடுத்துக்கொண்டு வந்த நாயகியரைப் பார்த்து அலுத்துப்போன ரசிகர்களுக்கு முண்டு உடுத்துக்கொண்டு வந்த மலையாள நாயகிகள் மீது ஒருவிதமான ஈர்ப்பு ஏற்படத் தொடங்கியது. தமிழகத்தின் பல ஊர்களில் மலையாளத் திரைப்படங்கள் கொடி கட்டிப் பறக்கத் தொடங்கின.

1980களின் தொடக்கத்தில் ஈரோடு நகரின் ஒரு திரையரங்கில் அவளோட ராவுகள் என்னும் மலையாளத் திரைப்படம் நான்கைந்து வாரங்கள் வரை ஓடி வசூலை வாரிக் குவித்தது. படத்தின் தலைப்பை அவளின் இரவுகள் என மொழிபெயர்த்து விளம்பரப்படுத்தியிருந்தார்கள். அந்தப் படத்தின் இயக்குனரான ஐ.வி.சசி மலையாளத் திரைப்பட உலகின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர். படத்தின் நாயகியான சீமா மலையாளத்தின் குறிப்பிடத்தக்க நாயகிகளில் ஒருவர். ஆனால் அவளோட ராவுகள் படம் அவரை ஒரு கவர்ச்சி நாயகியாகத் தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது. அவர்கள் அவரை அப்படித்தான் ரசிக்கத் தொடங்கினார்கள்.

அவளோட ராவுகளைத் தொடர்ந்து ஐ.வி.சசி இயக்கத்தில் வெளிவந்த சில படங்களுக்குத் தமிழ் ரசிகர்களிடையே ஓரளவு வரவேற்புக் கிடைத்தது. ஐ.வி.சசி தமிழில் ரஜினியை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்குமளவுக்குப் புகழ் பெற்றார். அவரது அந்தப் படத்திற்குத் தமிழகத் திரையரங்குகளில் கிடைத்த வரவேற்பைப் பார்த்த தமிழ்த் திரைப்பட விநியோகஸ்தர்கள் அதுபோன்ற மலையாளத் திரைப்படங்களைத் தேடிப் பிடித்துக்கொண்டு வந்தார்கள். அவற்றில் யாராவது ஒரிரு நடிகைகள் மேலாடையில்லாமல் தோன்றி மறைவார்கள், குளிப்பார்கள், உடை மாற்றுவார்கள், ஆடை விலகிய நிலையில் அசந்து தூங்குவார்கள், அவற்றைத் தமிழக ஆண்கள் ரசித்தார்கள்.

‘பிட்டு’ படங்களின் உதயம்

அந்தச் சமயத்தில் வெளிவந்த சில நல்ல மலையாளப் படங்களில் ஒன்று மழு. தமிழில் கோடாலி என்று அர்த்தம். சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற பாலன் கே.நாயர் நடித்த அந்தப்படம் மாமனாரின் இன்ப வெறி என்னும் தலைப்போடு தமிழில் திரையிடப்பட்டு வெற்றி பெற்றது. அசல் படத்தில் குறிப்பிடும்படியான கவர்ச்சிக் காட்சிகள் எதுவும் இடம்பெற்றதாகத் தெரியவில்லை, ஆனால் முப்பது முதல் 100 வினாடிகள் வரை ஓடும் ஓரிரு படுக்கையறைக் காட்சிகள் சேர்க்கப்பட்டன. அந்தக் காட்சிகள் ‘பிட்’ என அழைக்கப்பட்டன. அந்தக் காட்சிகள் அடங்கிய படங்களுக்கு “பிட்டு படங்கள்” என்னும் பெயர் சூட்டப்பட்டது. பிட்டு பட நடிகைகளும் பிட்டு பட ரசிகர்களும் உருவாகத் தொடங்கினர்.

தரமான மலையாளப் படங்கள் சில ஆபாசமான தலைப்புகளோடு தமிழகத் திரையரங்குகளில் திரையிடப்பட்டன.

சாயம் என்று ஒரு படம். சுவர் ஓவியன் ஒருவனின் வாழ்க்கையைச் சித்தரித்த அந்தப் படத்தில் சில்க் ஸ்மிதா முக்கியப் பாத்திரமேற்று நடித்திருந்தார். தமிழில் கவர்ச்சி நடிகையாக அறியப்பட்டிருந்த சில்க் ஸ்மிதாவுக்கு அந்தப் படத்தில் நல்ல வேடம். படத்தில் இணைக்கப்பட்ட ஓரிரு ஆபாசக் காட்சிகளுக்கும் சில்க் ஸ்மிதாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால் படம் தமிழ் பிட்டு பட ரசிகர்களை ஈர்த்தது. படத்திற்குத் தமிழில் வைத்த பெயர் சில்க்கின் இரவுகள்.

நகரம், கிராமம் என வேறுபாடு இல்லாமல் எல்லா ஊர்களிலும் அவளோட ராவுகளையும் மாமனாரின் இன்ப வெறியையும் சில்க்கின் இரவுகளையும் பார்ப்பதற்கு ஆண் ரசிகர்கள் திரண்டனர். அதுபற்றிய பேச்சுக்கள் ஆண்களின் உலகத்தில் புழக்கத்துக்கு வரத் தொடங்கின.

அதுபோன்ற படங்களைத் திரையிடுவதற்கு திரைப்பட உரிமையாளர்கள் தயங்கினார்கள். அது ஏதோ ஒரு வகையில் கூச்சப்பட வேண்டிய விஷயமாகப் புரிந்துகொள்ளப்பட்டிருந்தது. ஆனால் நாளுக்கு நாள் அந்தப் படங்களுக்கான மவுசு கூடிக்கொண்டிருந்தது. சில டென்ட் கொட்டகைகளிலும் நகரின் ஒதுக்குப்புறங்களில் இருந்த திரையரங்குகளிலும் அதுபோன்ற படங்கள் திரையிடப்பட்டன. அவற்றின் வழியே தமிழ் சினிமா ரசிகர்களின் மனங்களில் இடம்பிடித்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஷகீலா, ரேஷ்மா, முதலானவர்கள், அவர்கள் மலையாளத்தின் சூப்பர் ஸ்டார்களான மம்முட்டிக்கும் மோகன்லாலுக்குமேகூடச் சவாலாக உருவெடுத்தார்கள்.

புதன், 24 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon