மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 3 ஜூலை 2020

அரவக்குறிச்சி: செந்தில் பாலாஜி வேட்புமனு தாக்கல்!

அரவக்குறிச்சி: செந்தில் பாலாஜி வேட்புமனு தாக்கல்!

அரவக்குறிச்சி தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி இன்று (ஏப்ரல் 24) தாக்கல் செய்தார்.

4 தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 22ஆம் தேதி தொடங்கியது. அரவக்குறிச்சியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் இன்று காலை ஊர்வலமாகச் சென்று, அரவக்குறிச்சி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி, காங்கிரஸ் நிர்வாகி ஜோதிமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

கரூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட ஜோதிமணி வேட்புமனு தாக்கல் செய்யச் சென்றபோது, அவரை வெகுநேரம் ஆகியும் வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்கவில்லை. இதனால் ஜோதிமணியுடன் சென்ற செந்தில் பாலாஜி அங்குள்ள அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். டிஎஸ்பி ஒருவர் செந்தில் பாலாஜியை பிடித்துத் தள்ளிய நிகழ்வும் நடந்தது. ஆனால் இன்று நடந்த வேட்புமனு தாக்கலின்போது அதுபோன்ற சம்பவங்கள் ஏதும் நிகழவில்லை. ஊர்வலத்தில் செந்தில் பாலாஜியுடன் சென்ற பொன்முடி ஆகியோர் வேட்புமனு தாக்கல் அறைக்குள் செல்லவில்லை.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செந்தில் பாலாஜி, “இன்று வேட்புமனு தாக்கல் செய்யக் கூடிய கூட்டம், ஸ்டாலின் முதல்வராவதை உறுதி செய்துள்ளது. மே 23ஆம் தேதி மதியம் எடப்பாடி பழனிசாமி முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வார். ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்று தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார். வெற்றிக் கோட்டை எட்ட நாங்கள் முன்னால் சென்று கொண்டிருக்கிறோம். எங்களுக்குப் பின்னால் வருபவர்கள் பற்றி கவலையில்லை” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, “அரவக்குறிச்சி தொகுதியில் வாடகை வீடுகளில் பலர் வசித்து வருகிறார்கள். ஒரே வீட்டில் நெருக்கடியான நிலையில் இரு குடும்பங்களுக்கும் மேல் வசித்துவருகின்றனர். இதனை உணர்ந்து அரவக்குறிச்சி தொகுதியில் வீட்டுமனைப் பட்டா இல்லாத ஏறத்தாழ 25 ஆயிரம் மக்களுக்கு 3 சென்ட் நிலத்துடன் வீட்டுமனைப் பட்டா வழங்க வாக்குறுதி அளித்துள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளார். அந்தத் திட்டத்துக்கு தளபதி வீட்டு வசதித் திட்டம், உதயசூரியன் நகர் என்று பெயர் வைக்கவுள்ளதாகவும் செந்தில் பாலாஜி கூறினார். அரவக்குறிச்சியில் கலைக் கல்லூரி அமைக்கவும், குடிநீர் பிரச்சினைகளை தீர்த்துவைப்பேன் என வாக்குறுதி அளித்துள்ளார்.

தேர்தல் நடத்தும் அதிகாரி எவ்வாறு செயல்படுகிறார் என்ற கேள்விக்கு, “இன்றுதான் வேட்புமனு தாக்கல் செய்துள்ளோம். கரூர் மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி வேறு ஒருவர், தற்போது இருப்பவர் வேறு ஒருவர். எனவே இவர் நடுநிலையோடு செயல்படுவார் என்று நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்” என்று பதிலளித்தார் செந்தில் பாலாஜி.

இதனைத் தொடர்ந்து தொகுதியின் திமுக பொறுப்பாளர் பொன்முடி, நன்னியூர் ராஜேந்திரன் சகிதம் அரவக்குறிச்சி நகரில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

புதன், 24 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon