மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 3 ஜூலை 2020

மோடி பயோபிக்: புனிதராக்கும் முயற்சி!

மோடி பயோபிக்: புனிதராக்கும் முயற்சி!

மக்களவைத் தேர்தல் மே 19ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அதுவரை பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தை வெளியிடக் கூடாது என உச்ச நீதிமன்றத்துக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

‘பி.எம்.நரேந்திர மோடி’ திரைப்படத்தை வெளியிடுவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் ஏப்ரல் 15ஆம் தேதி புதிய உத்தரவை பிறப்பித்தது. அதன் படி, “இந்தப் படத்தை தேர்தல் ஆணைய அதிகாரிகள் பார்வையிட்டு தேர்தல் நேரத்தில் வெளியிடலாமா, வேண்டாமா என்பதை முடிவு செய்யவேண்டும். ஆணையத்தின் கருத்தை சீலிடப்பட்ட கவரில் வரும் 22ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிடப்பட்டது. அதன்படி தேர்தல் ஆணையமும் 22ஆம் தேதி தங்களது கருத்தை தெரிவித்தது.

ஏப்ரல் 17ஆம் தேதி தேர்தல் ஆணையத்தின் ஏழு அதிகாரிகள் கொண்ட சிறப்புக் குழுவினர் படத்தை பார்த்தனர். அதன் பின் “‘பி.எம்.நரேந்திரமோடி’ படத்தை தேர்தல் சமயத்தில் வெளியிட்டால் அது குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு சாதகமாக இருக்கும். எனவே பொதுமக்கள் பார்வைக்கு மே 19ஆம் தேதி வரை கொண்டுவரக் கூடாது என சிறப்புக் குழு கருதுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“நரேந்திர மோடியின் கதாபாத்திரம் அதிகமாக புகழப்படும் வகையில் உருவாகியுள்ளது. வாழ்க்கை வரலாறு என்பதைக் கடந்து புனிதர்களின் புராணம் போல் உள்ளது. எதிர்க்கட்சியும் அவர்களது தலைவர்களும் ஊழல்வாதிகளைப் போல் சித்தரிக்கப்பட்டுள்ளனர். பார்வையாளர்களால் அவர்கள் யார் என்பதை எளிதாக அறிந்துகொள்ளமுடியும்.

135 நிமிடங்கள் உள்ள இந்தப் படம் ஒற்றைப் பரிமாணத்தில் தனிப்பட்ட ஒருவரை குறிப்பிட்ட காட்சிகள், வசனங்கள், குறியீடுகள் மூலம் புனிதராக்கும் முயற்சியில் உருவாகியுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் மோடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஓமங் குமார் இயக்கத்தில் சந்தீப் சிங் உட்பட நான்கு தயாரிப்பாளர்கள் இணைந்து தயாரித்துள்ளார்.

புதன், 24 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon