மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 3 ஜூலை 2020

பண்பாட்டு உறவுகளை வளர்க்கும் மொழிபெயர்ப்புகள்

பண்பாட்டு உறவுகளை வளர்க்கும் மொழிபெயர்ப்புகள்

வெவ்வேறு மாநிலங்கள், நாடுகளில் வசிக்கும் மக்களிடையே பண்பாட்டுப் பரிமாற்றங்கள் ஏற்பட மொழிபெயர்ப்பு நூல்கள் பெரிதும் துணைபுரியும் என்று உறவுகள் மொழிபெயர்ப்பினால் மட்டுமே சாத்தியமாக முடியும் என்று ஆக்ஸ்போர்டு யூனிவர்ஸிடி ப்ரஸ் பதிப்பகத்தின் மொழிபெயர்ப்பு பதிப்பாசிரியர் மினி கிருஷ்ணன் பேசினார். நேற்று உலகப் புத்தக தினத்தை (ஏப்ரல் 23) ஒட்டி சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத் துறை சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் இவ்வாறு பேசினார்.

“புத்தகங்களும் வாசிப்பும்” என்கிற தலைப்பில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத் துறை சார்பில் புத்தக தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில், ஆன்ட்ரூ காலிஸ்டர் (இணை தூதர், ஆஸ்திரேலிய தூதரகம், சென்னை) தலைமையில், மினி கிருஷ்ணன், எழுத்தாளர் இமையம், பதிப்பாளர் ஒளிவண்ணன் (சி.இ.ஓ - எமரால்டு பதிப்பகம்) ஆகியோர் பங்கேற்றனர்.

விழாவைத் துவக்கிவைத்துப் பேசிய ஆங்கிலத் துறைத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வாசிப்பைப் பாடத்திட்டத்திற்குள் சுருக்கிவிடாமல் நல்ல பல நூல்களைத் தேர்ந்தெடுத்து வாசிப்பதன் அவசியத்தையும், நூலகங்களைப் பயன்படுத்தவேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினார்.

மினி கிருஷ்ணன் பேசுகையில் உலக இலக்கியங்களை மட்டுமல்லாமல் இந்திய இலக்கியங்களையும் மாணவர்கள் வாசிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். பண்பாட்டு உறவுகள் மொழிபெயர்ப்பினால் மட்டுமே சாத்தியமாக முடியும் என்றபோதிலும்கூட மொழிபெயர்ப்பு அங்கீகாரம் பெறாமலேயே இருப்பது கவலையளிப்பதாக உள்ளதென்று கூறினார். சர்வதேசப் பண்பாட்டு உறவுகள் தழைத்தோங்குவதில் நூல்கள் ஆற்றும் முக்கியப் பங்கு பற்றி ஆன்ட்ரூ காலிஸ்டர் பேசினார்.

நூல்கள் மட்டுமே இடம், காலம், பண்பாடு கடந்து மனித உறவுகளைப் பேணிப் பாதுகாத்துவருகின்றன என்று இமையம் வலியுறுத்திக் கூறினார். ஷேக்ஸ்பியரின் வெனிஸ் நகர வாணிகன் நாடகத்தைக் குறிப்பிட்டு அந்த நாடகத்தின் மொத்த படைப்புத்திறனை போர்ஷியா கூறுகிற “ஒரு துளி ரத்தமும் சிந்தாமல்” என்கிற ஒரு தொடர் தாங்கி நிற்கிறது என்று குறிப்பிட்டு, வீரியமிக்க மொழியை உருவாக்குபவனே உன்னதமான படைப்பாளி என்று கூறினார்.

பேராசிரியர் சுபலா பாண்டியராஜன் நன்றியுரை வழங்கினார்.

புதன், 24 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon