மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 ஏப் 2019

மூன்றாம் கட்டத் தேர்தல்: 66% வாக்குகள் பதிவு!

மூன்றாம் கட்டத் தேர்தல்: 66% வாக்குகள் பதிவு!

மக்களவைத் தேர்தலில் நேற்று நடந்த மூன்றாம் கட்ட வாக்குப் பதிவில் 65.61 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன.

17ஆவது மக்களவையைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 11 மற்றும் 18 ஆகிய தேதிகளில் இரண்டு கட்ட வாக்குப் பதிவுகள் முடிந்துள்ள நிலையில் கேரளம், மேற்கு வங்கம் மற்றும் குஜராத் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 116 மக்களவைத் தொகுதிகளுக்கும், ஒடிசாவில் 42 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நேற்று (ஏப்ரல் 23) மூன்றாம் கட்டமாக வாக்குப் பதிவு நடந்தது. ராகுல் காந்தி, அமித் ஷா, சசி தரூர் மற்றும் பல்வேறு மத்திய அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகள் நேற்றைய வாக்குப்பதிவில் இருந்தன.

அனந்த்நாக் தவிர்த்து 302 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இதுவரையில் முடிந்துள்ளது. நேற்று இரவு 8 மணி நிலவரத்தின் அடிப்படையில் மூன்றாம் கட்ட தேர்தலில் 65.61 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 8 மணிக்கு மேலாகியும் சில வாக்குச் சாவடிகளில் வாக்காளர்கள் வரிசையில் காத்திருந்ததால் வாக்குப்பதிவு விழுக்காடு இன்னும் சற்று அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மற்றும் காங்கிரஸ் தலைவர் அகமது படேல் ஆகியோர் நேற்று தங்களது வாக்குகளைச் செலுத்தினர்.

மாநில வாரியான வாக்குப் பதிவு நிலவரம்

அசாம் - 80.75%

பிகார் - 59.97%

சத்தீஸ்கர் - 68.41%

தாத்ரா நகர் & ஹாவேலி - 79.59%

டாமன் & டையூ - 71.82%

கோவா - 74.03%

குஜராத் - 63.71%

ஜம்மு காஷ்மீர் - 12.86%

கேரளா - 76.35%

கர்நாடகம் - 67.72%

மகாராஷ்டிரம் - 59.74%

ஒடிசா - 62.49%

திரிபுரா - 79.92%

உத்தரப் பிரதேசம் - 61.40%

மேற்கு வங்கம் - 80.25%

முதல் கட்ட தேர்தலில் 69.45 விழுக்காடு வாக்குகளும், இரண்டாம் கட்ட தேர்தலில் 69.43 வாக்குகளும் பதிவாகியிருந்த நிலையில் மூன்றாம் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு விகிதம் சரிந்துள்ளது.

கேரளம், மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாக இயங்கவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்தன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிவர இயங்குவதைத் தேர்தல் அதிகாரிகள் உறுதி செய்ய தவறிவிட்டனர் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டினார்.

உத்தரப் பிரதேசத்தின் எடாக் மாவட்டத்தில் தேர்தல் அதிகாரி ஒருவர் சமாஜ்வாதி கட்சிக்கு வாக்களிக்க வலியுறுத்தியதாகப் பொதுமக்களின் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் அங்கிருந்து நீக்கப்பட்டார்.

உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஜம்மு - காஷ்மீர் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் வாக்குப்பதிவின்போது வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. வன்முறையில் மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தொண்டர் ஒருவர் கொல்லப்பட்டார்.

ஒருவர் மட்டும் வாக்களிக்க ஒரு வாக்குச்சாவடி

ஆசிய சிங்கங்களின் வீடு எனக் கருதப்படும் குஜராத் மாநிலத்தின் கிர் காடுகளில் உள்ள ஜூனாகத் நகரிலிருந்து தொலைதூரத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு நபர் மட்டுமே வாக்களிக்க ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. பரத் தாஸ் பப்பு என்ற முதியவருக்கு மட்டுமே அந்த வாக்குச்சாவடியில் ஓட்டு இருந்துள்ளது.

வாக்களித்த பின்னர் அவர் ஏ.என்.ஐ. ஊடகத்திடம் பேசுகையில், “என்னுடைய ஒரு வாக்குக்காக அரசாங்கம் செலவு செய்திருந்தது. நான் வாக்களித்ததால் இந்த வாக்குச்சாவடியில் 100 விழுக்காடு வாக்குப் பதிவாகியுள்ளது. எல்லோரும் வாக்களித்து, எல்லா பகுதிகளிலும் 100 விழுக்காடு வாக்குப்பதிவை எட்ட வேண்டும்” என்றார்.

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

காவலருடன் வாக்குவாதம்: வழக்கறிஞர் விரைவில் கைது!

4 நிமிட வாசிப்பு

காவலருடன் வாக்குவாதம்: வழக்கறிஞர் விரைவில் கைது!

புதன் 24 ஏப் 2019