மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 ஏப் 2019

சசிகலா ஒப்புதல்படியே முடிவுகள்: தினகரன்

சசிகலா ஒப்புதல்படியே முடிவுகள்: தினகரன்

சிறையில் சசிகலாவைச் சந்தித்த பின் பேட்டியளித்த தினகரன், சசிகலாவின் ஒப்புதல்படியே அனைத்து முடிவுகளும் எடுக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு கடந்த 19ஆம் தேதி சென்னை அசோக் நகரிலுள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், அக்கட்சியைப் பதிவு செய்ய முடிவெடுக்கப்பட்டது. துணைப் பொதுச் செயலாளராக இருந்த டிடிவி தினகரன், பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். இதுவரை பொதுச் செயலாளர் என்று சசிகலா அழைக்கப்பட்டுவந்த நிலையில், இது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் சசிகலாவை ஓரங்கட்ட தினகரன் முயல்வதாகவும் ஒரு தகவல் கசிந்தது. ஆனால், சசிகலாவைக் கேட்ட பின்னரே பதவி ஏற்றுக்கொண்டதாக தினகரன் விளக்கமளித்தார்.

இந்தச் சூழலில் பொதுச் செயலாளராகப் பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக நேற்று (ஏப்ரல் 23) டிடிவி தினகரன், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவைச் சந்தித்துப் பேசினார். அமமுகவின் சமீபத்திய நிகழ்ச்சிகள் குறித்து அதில் விவாதிக்கப்பட்டுள்ளது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், “சசிகலாவைச் சந்தித்தபோது பொதுச் செயலாளராகப் பதவியேற்றதற்கு எனக்கு வாழ்த்துகள் தெரிவித்துச் சிறப்பாகச் செயல்பட அறிவுறுத்தினார். தான் அதிருப்தியில் இருப்பதாக சில ஊடகங்களில் வெளியாகும் தகவல்களில் உண்மை இல்லை என்று தெரிவிக்கச் சொன்னார். சசிகலாவின் ஒப்புதல்படியே அனைத்தும் நடைபெற்று வருகிறது. அவர் பேச முடியாத நிலையில் இருப்பதைப் பயன்படுத்தி சில விஷமிகள் புகழேந்தியை வைத்து தவறான தகவல்களைப் பரப்பியுள்ளனர். ஒரு டாட் காமிலும் செய்தி வெளியாகியுள்ளது. ஆனால், அதுபோன்று ஒன்றும் நடைபெறவில்லை” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, “அதிமுகவுக்கு உரிமை கோரும் வழக்கை சசிகலா தொடர்ந்து நடத்துவார். அமமுகவில் தலைவர், துணைத் தலைவர், பொதுச் செயலாளர் உள்ளிட்ட பதவிகள் தேர்தல் மூலமாகத் தேர்வு செய்யக் கூடிய பதவிகள். பொதுச் செயலாளர், துணைத் தலைவர் பதவியைகளைத்தான் தற்போது பூர்த்தி செய்துள்ளோம். சசிகலாவுக்காக தலைவர் பதவியை காலியாக வைத்துள்ளோம். சிறையிலிருந்து வெளிவந்த பிறகு என்ன செய்வது என்பதை சசிகலா முடிவெடுப்பார்” என்றார்.

சசிகலாவை வெளியே கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்த தினகரன், இதுதொடர்பாக நீதிமன்றம் முடிவு செய்யும் என்றும், சிறையில் சசிகலா நலமாக உள்ளதாகவும் கூறினார்.

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

காவலருடன் வாக்குவாதம்: வழக்கறிஞர் விரைவில் கைது!

4 நிமிட வாசிப்பு

காவலருடன் வாக்குவாதம்: வழக்கறிஞர் விரைவில் கைது!

புதன் 24 ஏப் 2019