மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 3 ஜூலை 2020

காவிரியில் டிஎன்பிஎல் நிறுவனம் அமைத்திருந்த குழியில் சிக்கி ஆறு பேர் பலி!

காவிரியில் டிஎன்பிஎல் நிறுவனம் அமைத்திருந்த குழியில் சிக்கி ஆறு பேர் பலி!

தமிழகத்தில் கடுமையான வறட்சி நிலவுவதால், நிலத்தடி நீர் மட்டம் வெகுவாகக் குறைந்து வருகிறது. இந்த நிலையில், காவிரி ஆற்றின் இரு கரையிலும் உள்ள 17 மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையிலிருந்து நாள்தோறும் 6,000 கன அடித் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. சேலம், ஈரோடு, நாமக்கல் மற்றும் கரூர் மாவட்ட பகுதிகளில் இந்தத் தண்ணீர் ஆற்றில் சென்று கொண்டுள்ளது.

இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள பொத்தனூர் பகுதியில் காவிரி ஆற்றில் நேற்று (ஏப்ரல் 23) காலை அந்த பகுதியைச் சேர்ந்த புகைப்படக் கலைஞரான சரவணன் (36) அவரது மனைவி ஜோதிமணி (32) மற்றும் அவரது மகன்கள் தீபகேஷ், தரகேஷ் (இரட்டையர்கள்) ஜோதிமணியின் உறவினரான தேவி, அவருடைய பெண் குழந்தை ஒருவர் என ஆறு பேர் குளிக்கச் சென்றுள்ளனர்.

காலை 8 மணியிலிருந்து ஆற்றின் வடக்குப் பகுதியில் முழங்கால் அளவு நீர் உள்ள பகுதியில் குளித்தவர்கள்,வீட்டிலிருந்து எடுத்துக்கொண்டு போயிருந்த சிற்றுண்டியைச் சாப்பிட்டுவிட்டு, 9 மணியளவில் ஆற்றின் நடுப்பகுதியிலிருந்த தண்ணீரில் குளிக்கச் சென்றுள்ளனர்.

ஆற்றின் தென்பகுதியில் உள்ள புகளூரில் செயல்பட்டுவரும் தமிழ்நாடு காகித நிறுவனம் (டிஎன்பிஎல்) தங்களுக்குத் தேவையான தண்ணீரைக் காவிரி ஆற்றிலிருந்துதான் எடுத்து வருகிறது.

நீர் வரத்துக் குறைவாக இருக்கும் நேரங்களில், ஆற்றின் நடுவே மணலை எடுத்து வாய்க்கால் அமைத்தும், அதற்குப் பிறகு 8 முதல் 20 அடி ஆழம் வரை மணலைப் பறித்து, அதற்குள் மோட்டார் வைத்தும், அதற்கும் தண்ணீர் கிடைக்காமல் போகும் நேரங்களில் பெரிய அளவில் குளம் போன்று குழிகளையும், பல இடங்களில் 40 அடி ஆழம் கொண்ட கிணறுகளையும் அமைத்தும் தண்ணீர் எடுத்து வருகின்றனர்.

கடந்த சில நாளாக ஆற்றில் பாதியளவுக்குத் தண்ணீர் செல்வதால், இந்தக் குழிகள் எல்லாம் நிரம்பிய நிலையில் இருந்துள்ளது. அந்தப் பகுதிக்குக் குளிக்கச் சென்ற சரவணன் மற்றும் அவருடன் இருந்தவர்களுக்கு இந்த குழிகளின் ஆழம் தெரியாமல் இறங்கியுள்ளனர்.

முதலில் சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளனர். இதைப்பார்த்த சரவணன், அவருடைய மனைவி ஜோதி மணி,உறவினரான தேவி என ஒவ்வொருவராகக் குழந்தைகளைக் காப்பாற்றும் முயற்சியில் அந்தக் குழிக்குள் இறங்கியுள்ளனர். இதனால் மேலே தண்ணீரும், ஆறு அடி முதல் பத்து அடி ஆழம் வரை சேறும், சகதியுமாக இருந்த அந்த குழியில் சிக்கிய ஆறு பேரும் உயிரிழந்துள்ளனர்.

தூரத்திலிருந்து இதைப்பார்த்த மக்கள், தகவல் கொடுத்ததைத் தொடர்ந்து அப்பகுதி காவல் துறையினர் அந்த இடத்துக்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். பிறகு, நாமக்கல் மற்றும் திருச்செங்கோட்டிலிருந்து தீயணைப்புத் துறை வீரர்கள் வரவழைக்கப்பட்டு குழிக்குள் இறங்கித் தேடியதில் சரவணன் உள்ளிட்ட உயிரிழந்த ஐந்து பேரின் உடல்கள் மீட்கப்பட்டது. இரவு 7 மணி வரை ஜோதிமணியின் உறவினரான தேவியின் பெண் குழந்தையின் உடல் கிடைக்கவில்லை.

நாமக்கல் மாவட்டம், பாண்டமங்கலம், வேலூர், பொத்தனூர், இடையாறு போன்ற பேரூராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கடந்த பல ஆண்டுகளாக டிஎன்பிஎல் நிறுவனம் காவிரி ஆற்றில் சட்டவிரோதமாகக் குழி தோண்டித் தண்ணீர் எடுத்து வருகிறது. இதனால், எங்களுக்குக் குடிநீர் கூட கிடைப்பதில்லை எனப் போராடி வந்துள்ளனர்.

இப்போது அந்தக் குழியிலேயே விழுந்து ஆறு பேர் உயிரிழந்துள்ள சம்பவத்தைத் தொடர்ந்து, காகித ஆலைக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.

புதன், 24 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon