மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 3 ஜூலை 2020

இலங்கைத் தமிழர் வாழ்க்கையும் திரைக்கதையாக்கமும் - சொர்ணவேல்

இலங்கைத் தமிழர் வாழ்க்கையும் திரைக்கதையாக்கமும் - சொர்ணவேல்

காக்கை குழுமம் நடத்திய குறும்படப் போட்டியின் முடிவுகள்

கடந்த ஏழு வருடங்களாகக் குறும்படங்களில் இலங்கைத் தமிழர் வாழ்வின் பிரதிபலிப்பு மெருகேறியிருக்கிறது என்பதில் ஐயமில்லை. ஆயினும் போருக்கு முன்னும் பின்னுமான வாழ்வின் சூழல்களை, நெருக்கடிகளைச் சித்திரிக்கும் படங்கள் பரவலாக வரக்கூடிய இக்கால கட்டத்தில் திரைக்கதையமைப்பு பற்றிய பயிற்சியும் தெளிவும் உதவிகரமாக இருக்கும். அத்தகைய நோக்கில் உருக்கொணடதுதான் ‘காக்கைச் சிறகினிலே’ இலக்கிய மாத இதழ் குழுமத்தினால் முன்னெடுக்கப்பட்ட நான்காவது ஆண்டு கி.பி. அரவிந்தன் நினைவு குறும்படத் திரைக்கதைப் போட்டி நடத்தப்பட்டது. இலங்கைத் தமிழர் வாழ்க்கை: பூர்வீகம் - இடப்பெயர்வு – புலப்பெயர்வு - இதனோடான தொடர்ச்சியும் நீட்சியும் என்னும் பொருளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படக்கூடிய குறும்படத்திற்கான திரைக்கதையை எழுத வேண்டும் என்பதே இந்தப் போட்டி.

இனஅழிப்பின் திரைப் பதிவுகள்

போட்டிக்கு வந்த திரைக்கதைகள் ஆழமாக இருந்தன. பெருவாரியான திரைக்கதைகள் குடும்பத்தின் சிதைவின் மூலம் தனிப்பட்ட இழப்பை முன்னிறுத்துகையில் போர் மற்றும் இன அழிப்பினால் ஏற்பட்ட தனிமையையும் பிரிவையும் மண், மொழி, பண்பாடு சார்ந்த தளங்களில் விவரித்து வெறுப்பையும் வன்முறையையும் பாலியல் வன்கொடுமையையும் ஆராய்ந்தன. இன அழிப்பின் truamaவைப் பற்றி பேசுவது எளிதல்ல. அதைப் போலவே ஐபிகேஎப் என்ற இந்தியப் படையின் வன்முறை, வன்கொடுமை பற்றியும். வந்திருந்த திரைக்கதைகள் அத்தகைய இருண்மையான காலகட்டங்களையும் அவற்றின் ஈரமற்ற உள்ளடக்கத்தையும் தவிர்க்கவில்லை.

நான் எப்போதும் கூறுவதைப் போல, யூதர்கள் தங்கள் இனஅழிப்பைப் பற்றித் துணிச்சலுடன் தொடர்ந்து ஆவணப்படுத்தியதால்தான் இன்று ஹாலோகாஸ்ட் என்றால் மனித இருண்மையின் விளிம்பு நிகழ்வு என்று உலகத்துக்குத் தெரியும். அவ்வாறு அல்லாமல், கொடிய நினைவுகளை வார்த்தைகளாக வடிப்பதிலுள்ள துன்பத்தைக் கருதி அவர்கள் அமைதியாக இருந்திருப்பார்கள் என்றால் இன்று ஹிட்லரின் நாஜிக் கட்சியின் பாசிச யூத இன அழிப்பு இரண்டாவது உலகப் போரின் சிறு பகுதியாக மட்டுமே இருந்திருக்கும். அவ்வகையிலே முகுந்தனின் காக்கை குழுமத்தின் இச்செயற்பாட்டை முக்கிமானதாகக் கருதுகிறேன். சக பயணிகள் மதிப்பிற்குரிய அம்ஷன் குமாருக்கும் ஞானதாஸ் காளிநாதருக்கும் எனது நன்றி. பங்கு பெற்றவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.

எழுத்து என்பது கலையையும் கைத்திறனையும் உட்கொண்டது. Craft என்பது பழக்கத்தினால் மெருகேறும். தையல் கலை மற்றும் சமையற்கலைப் போன்று, கறிவேப்பிலையையும் கடுகையும் உப்பையும் மிளகாய் வத்தலையும் தேவைக்கேற்ப இயல்பாகக் கலக்கும் நெடுநாள் தேர்ச்சி சுவையின்பாலான நமது குவிமையத்தைத் திடப்படுத்தும். இளம் எழுத்தாளர்களுக்கும் நாளைய இயக்குநர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

குறும்படத் திரைக்கதைப் போட்டி முடிவுகள்

காக்கைச் சிறகினிலே இலக்கிய மாத இதழ் குழுமத்தினால் முன்னெடுக்கப்பட்ட நான்காவது ஆண்டு கி.பி அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசு 2019 (வள்ளுவராண்டு 2050) முடிவுகள்...

குறும்படத்துக்கான பொருள்: இலங்கைத் தமிழர் வாழ்க்கை: பூர்வீகம் - இடப்பெயர்வு – புலப்பெயர்வு - இதனோடான தொடர்ச்சியும் நீட்சியும்.

தமிழ் இலக்கிய எழுத்துப் போட்டி வகையில் குறும்படத் திரைக்கதைப் போட்டி முதல் முறையாக நடத்தப்பட்டிருக்கிறது. முதற் போட்டியின் கதைக் களம் இலங்கைத் தமிழர்கள் வாழ்க்கை என்பதாக அமைந்திருந்தது. 20ஆவது நூற்றாண்டின் பிற்பகுதி முதல் தற்போது வரையில் உலகப் பெருவெளியில் அளப்பெரிய அனுபவங்களைச் செறிவாகப் பெற்றுள்ள ஓர் இனக்குழுவாக இலங்கைத் தமிழர்களது வாழ்வு நீட்சியுறுகிறது. இந்தப் புதிய வாழ்வனுபவங்கள் இலக்கியங்களாகப் பதிவாகி வரலாற்றிடம் கையளிக்கப்பட வேண்டும். அந்த நோக்குடன் நடத்தப்பட்ட இந்தப் போட்டியின் முடிவுகள் வருமாறு:

வெற்றிபெற்றவர்கள்

முதலாவது பரிசு: பொறி - த. இராஜ ராயேஸ்வரி (குப்பிழான் -இலங்கை) – ரூ.10,000

இரண்டாவது பரிசு: மறந்திட்டமா - வி. நிஷாந்தன் (இலங்கை) – ரூ.7,500

மூன்றாவது பரிசு: புலம்பெயர் பறவைகள் - கேஷாயினி எட்மண்ட் (மட்டக்களப்பு - இலங்கை) – ரூ.5,000

ஜூரி பரிசு: அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் - பாஸ்கர் மகேந்திரன் (பாரிஸ்) - ரூ.4,000 காக்கை ஓராண்டுச் சந்தா.

ஆறுதல் பரிசுகள் - தலா ரூ.1,500, காக்கை ஓராண்டு சந்தா.

ஒடுக்கம் - த. செல்வகுமார் (குப்பிழான் - இலங்கை)

தசரதன் - சி. ஸ்ரீரகுராம் (பருத்தித் துறை - இலங்கை)

தொலை நிலம் - வனிதா சேனாதிராஜா (வவுனியா இலங்கை)

நடுவர்கள்

பத்மநாப ஐயர் (இங்கிலாந்து) நெறியாளுகையில் திரைத்துறை ஆளுமையாளர்களான பேராசிரியர் சொர்ணவேல் ஈஸ்வரன் (அமெரிக்கா) , அம்ஷன் குமார் (இந்தியா), ஞானதாஸ் காசிநாதர் (இலங்கை) ஆகியோர் நடுவர்களாகச் செயல்பட்டனர்.

முதற்பரிசு பெற்ற பொறி குறும்படம் திரைப்படமாக்கப்படும்போது ஊக்கப் பரிசாக ரூ.30,000 A Gun & a Ring தயாரித்த Eyecatch Multimedia Inc நிறுவனரின் மகனது நினைவாக வழங்கப்படும் என்றும் காக்கை குழுமத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

காக்கை குழுமத்தைத் தொடர்புகொள்ள:

காக்கை, 288 டாக்டர் நடேசன் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை 600005. மின்னஞ்சல்: [email protected]

செல்பேசி: 00919841457503 (வாட்ஸ் அப் - வைபர் உண்டு)

தொலைபேசி: 00914428471890

முகநூல்: காக்கைச் சிறகினிலே

செவ்வாய், 23 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon