மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 3 ஜூலை 2020

தமிழ்நாட்டில் மனிதவள மேம்பாட்டின் நிலை- 5

தமிழ்நாட்டில் மனிதவள மேம்பாட்டின் நிலை- 5

1980களிலேயே இந்தியா உணவு தானியங்கள் உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. ஐம்பதுகளிலும், அறுபதுகளிலும் உணவு தானியங்களுக்காக மற்ற நாடுகளிடம் இந்தியா கையேந்தி நின்ற நிலை மாறியது குறிப்பிடத்தக்க முன்னேற்றம்தான். ஆனால், தன்னிறைவு அடைந்துவிட்டால் நாட்டு மக்கள் அனைவருக்கும் உணவு கிடைத்துவிட்டது என்று முடிவுசெய்து விட முடியுமா? மேலும், கிடைக்கும் உணவு சத்துள்ள உணவாகவும் இருக்க வேண்டும் அல்லவா?

உணவுப் பாதுகாப்பு என்பது மூன்று அம்சங்களைக் கொண்டது. முதலில் நாட்டில் போதிய உணவு உற்பத்தி செய்யப்பட வேண்டும் (availability). அடுத்ததாக அந்த உணவை வாங்கும் சக்தி மக்களிடம் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும் (accessibility). இறுதியாக, உண்ணும் உணவில் உள்ள சத்து உடம்பில் ஒட்ட வேண்டும் (absorption). உணவு தானியம் உற்பத்தியில் உற்பத்தித் திறன் பெருக்கம், பொது விநியோகத் திட்டம் வழியே முதல் இரண்டு அம்சங்களை ஓரளவுக்கு இந்தியா சாத்தியமாக்கி இருக்கிறது.

குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் மாதாமாதம் 20 கிலோ இலவச அரிசை வழங்கும் அனைவரையும் உள்ளடக்கிய பொது விநியோகத் திட்டம், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச மதிய உணவுத் திட்டம் போன்றவை உணவுப் பாதுகாப்பில் தமிழ்நாட்டைத் தலைசிறந்த மாநிலங்களுள் ஒன்றாக நிலைநாட்டியுள்ளன.

மேலே குறிப்பிட்டுள்ள மூன்று அம்சங்களின் அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு உணவுப் பாதுகாப்புக் குறியீடு (Food Security Index) தயாரிக்கப்பட்டுள்ளது. உணவுப் பாதுகாப்பில் முன்னிலையில் இருக்கும் ஐந்து மாவட்டங்கள், உணவுப் பாதுகாப்பில் பின்தங்கியிருக்கும் ஐந்து மாவட்டங்களை அட்டவணையில் பார்ப்போம்.

தமிழகத்தின் டெல்டா பகுதியில் உள்ள மாவட்டங்கள், உணவு உற்பத்தியில் முன்னணியிலிருந்தாலும், அதை மக்களுக்குக் கொண்டு சேர்ப்பதிலும், ஊட்டச்சத்து உடம்பில் ஒட்டுவதை உறுதி செய்வதிலும் பின்தங்கியுள்ளன. முன்னிலையில் இருக்கும் மாவட்டங்களும் குறைவான புள்ளிகளே பெற்றிருப்பதற்குக் காரணம், அவை ஊட்டச்சத்து உடம்பில் ஒட்டுவதை உறுதி செய்யத் தவறியிருப்பதே. அதையும் சாத்தியமாக்கினால்தான் ஒரு மாவட்டம் முழுமையாக உணவுப் பாதுகாப்பு பெற்றதாக நாம் கருத முடியும்.

தமிழ்நாட்டில் மனிதவள மேம்பாட்டின் நிலை-1

தமிழ்நாட்டில் மனிதவள மேம்பாட்டின் நிலை - 2

தமிழ்நாட்டில் மனிதவள மேம்பாட்டின் நிலை- 3

தமிழ்நாட்டில் மனிதவள மேம்பாட்டின் நிலை- 4

புதன், 24 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon