மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 3 ஜூலை 2020

பொது நூலகம் என்பது குப்பைகளைக் குவிக்கும் இடமா?

பொது நூலகம் என்பது குப்பைகளைக் குவிக்கும் இடமா?

புத்தகத் துறை ஊழல்களை அம்பலப்படுத்துகிறார் வேடியப்பன்

பா.நரேஷ்

“நூலகங்கள் என்பது தமிழ் வளர்ச்சிக்கான விதை நெற்களைச் சேமிச்சு வைக்கிற களஞ்சியம். அங்கே நல்ல நூல்கள்தான் இருக்கணும். அங்கே ஊழல் நடக்கிறதை அனுமதிக்க முடியாது” என்று நூலகங்கள் மற்றும் பதிப்பகங்களில் நடக்கும் ஊழல் குறித்துப் பேசினார் டிஸ்கவரி புக் பேலஸின் நிறுவனர் வேடியப்பன்.

அந்த ஊழல் பத்தி நாம பேசித்தான் ஆகணும். ஆனா, வாசிப்பு மிகப் பெரிய பின்னடைவைச் சந்தித்திருக்கும் இந்த நேரத்துல, இன்னும் புத்தக விற்பனைக் கூடங்களை மட்டும் நம்பி ஏன் இருக்கணும்?

இந்தத் தொழில்நுட்பக் காலத்தில்கூடப் புத்தகங்களை நம்பி ஒருவரால் பிழைக்க முடியும் என்பதைக் காட்டுகிறதுக்காகவே இன்னும் இந்தப் புத்தகக் கடையை விட்டுப் போகாம இருக்கேன். இது மிகப் பெரிய தளம். சமூகத்து மேல நமக்கு ஓர் அக்கறை இருக்கு. வாசகர்களுக்குச் சரியான புத்தகங்கள் கிடைக்கணும். 100இல் 10 பேர் தேடிப் போய் படிப்பாங்க. 90 பேர் கிடைச்சா படிப்பாங்க. அந்த 90 பேருக்குக் கிடைப்பதற்கான வாய்ப்புகளைத்தான் நான் உருவாக்கிக் கொடுத்திட்டு இருக்கேன்.

அப்படியே இருந்திருக்கலாமே... இங்கே திரைப்படங்கள் திரையிடலாம்னு எப்போ முடிவு செய்தீங்க? எதுக்காகப் புத்தகக் கூடத்துக்குள்ளே ஒரு திரை விழா?

நான் அஸிஸ்டன்ட் டைரக்டரா பணி செஞ்சிருக்கேன். ஒரு அஸிஸ்டன்ட் டைரக்டருக்கு என்னெல்லாம் தேவைனு எனக்குத் தெரியும். இங்கே வருகிற அஸிஸ்டன்ட் டைரக்டர்கள் எல்லாம் படம் ஸ்க்ரீனிங் பண்ணினா நல்லாயிருக்கும்னு சொன்னாங்க. அதுனால புத்தகக் கடையைப் பாதியா தடுத்து மறுபுறம் ஓர் அரங்கத்தை உருவாக்கினோம். மேடை அமைச்சு திரையிடல் ஆரம்பிச்சோம். அதுல கடைசியா மகேந்திரன் சாரோட முள்ளும் மலரும்ல இருந்து சாசனம் வரைக்கும் எட்டுப் படங்களைத் தொடர்ந்து திரையிடல் செஞ்சது மிகப் பெரிய அனுபவமா இருந்துச்சு. ஏன்னா, ஒரே டைரக்டரோட எட்டுப் படங்களைத் தொடர்ந்து பார்க்கிறதுங்குறது அவர்கூட பயணம் செஞ்சு வாழ்றதுக்குச் சமானமானது. மினி மகேந்திரன் ஃபிலிம் ஃபெஸ்டிவல்.

இவ்ளோ வேலைகள் இங்கே நடக்குறது வெளிய பெருசா தெரியறது இல்லையே..?

வெளிய தெரிய வேண்டிய அவசியம் இல்லையே. வேணும்ங்கிறவங்க எப்படியும் தேடி வந்திடுறாங்க. அதத் தாண்டி, நமக்குத் தான் உண்மை தெரியுமே. இங்க எதுவும் நிலைக்க போறதில்லைன்னு. புத்தகங்கள் கொடுத்த படிப்பினை அது. அந்த உண்மைய தெரிஞ்சுக்கிட்டா இங்கே பில்டப் பண்ண வேண்டிய அவசியமே இல்ல.

புத்தகக் கடை ஆரம்பிச்ச இந்த 10 ஆண்டுக்கால பயணத்துல என்ன புரிஞ்சிக்கிட்டீங்க? என்ன சாதனை செஞ்சதா நினைக்குறீங்க?

10ஆவது வருஷம் வந்ததே பெரிய சாதனைதானே? நான் இந்தக் கடைய ஆரம்பிச்சுப்போ இங்க வந்த நண்பர்கள், நேர்ல சந்திச்சு பேசுனவங்க சில பேர் தனியா புத்தகக் கடை ஆரம்பிச்சிருக்காங்க. அவங்களுக்கு அப்படியொரு நம்பிக்கையைக் கொடுத்திருக்கு என்பதைத்தான் நான் பெருசா நினைக்கிறேன்.

அவங்களால இன்னிக்கு இந்த நிலைமையில நிலைச்சிருக்க முடியுதா?

கஷ்டம்தான். சிலர் புத்தக விற்பனைக் கூடத்தை மூடிட்டாங்க. சிலர் தாக்கு பிடிச்சிட்டிருக்காங்க. நான் இந்தப் பத்தாவது ஆண்டில் அடியெடுத்து வைத்ததற்குக் காரணமும் அதுதான். இப்படிப்பட்ட சூழல்லகூட ஒருத்தரால சர்வைவ் பண்ண முடியும்னு ஒரு நம்பிக்கையை கொடுக்கணும் இல்லையா?

புத்தக விற்பனைச் சூழல்ல இருக்க மிகப் பெரிய அரசியல்னு எதை சொல்லுறீங்க?

வெளிப்படையா சொல்லணும்னா, நூலகம் அமைச்சு அதுக்காக புத்தக ஆர்டர் குடுக்குறதுல மிகப்பெரிய ஊழல் நடக்குது. காமராஜர், அண்ணா, கலைஞர் போன்ற பெரும் ஆளுமைகளின் விருப்பத்தாலயும் செயல்பாடுகளாலயும் தொடங்கப்பட்ட ஊருக்கொரு நூலகம் என்பது, இன்னிக்கு லஞ்சத்தால மட்டும்தான் இயங்குது. லஞ்சம் வாங்கிட்டுத்தான் புத்தகத்துக்கான ஆர்டரே போடுறாங்க. லஞ்சம் வாங்கிட்டு எந்தக் குப்பைய வேணும்னாலும் லைப்ரரிக்குள்ள தள்ளுறாங்க.

நீங்க எந்த லைப்ரரிக்கு வேணும்னாலும் போயி செக் பண்ணி பாத்துக்கலாம். கடந்த 5 ஆண்டுகளுக்குள்ள லைப்ரரிக்கு குடுத்த ஆர்டர்களை எல்லாம் போயி பாத்தீங்கன்னா, குறைந்த விலையுடைய சாணித்தாள்ல போட்டிருப்பாங்க. மூன்று வருஷத்துல அதெல்லாம் நஞ்சிடும். நம்முடைய வரலாறு, இலக்கியம் ஆகியவற்றோட நேரடி சான்றா இருக்குற புத்தகங்களை விதை நெல்ல பாதுகாக்குற மாதிரி பாதுகாத்து வைக்கணும். ஆனா, அப்படியான இடத்துல வெறும் குப்பையக் கொண்டுபோயி வெக்கிறதுக்கு இந்தச் சூழல் அனுமதிக்குது.

நீ எதுல எல்லாமோ ஊழல் பண்ற. அதையெல்லாம்கூடப் பொறுத்துக்கலாம். ஆனா, இது புத்தகத் துறை. தன்னோட பெருமைகளை பறைசாற்றிக்கொண்டு திரியும் இந்தத் தமிழினம், தன்னோட வரலாற்றுச் செல்வங்களைப் பொதித்து வைத்திருக்கும் புத்தகங்களைக் கொள்முதல் செய்து பாதுகாக்கும் நூலகங்கள்ல மிகப்பெரிய ஊழல் நடக்குது. சாமானிய மக்களுக்குக் கொண்டு போயி சேர்க்க வேண்டிய இந்தப் பொக்கிஷங்களை பாதுகாக்க வேண்டிய இடத்துல இவ்ளோ பெரிய அநியாயம் நடக்கக் கூடாது. நாம நினைக்குறோம்... லஞ்சம் கொடுக்குறவனும் வாங்குறவனும்தான் பிரச்சினைன்னு. ஆனா, சில பதிப்பகங்களும் இந்த தவற்றுக்கு உடந்தையா இருக்காங்க.

பல பதிப்பகங்கள் ஒரு கோடி ரூபாய்க்கு ஆர்டர் வாங்கிட்டு, ஒரே புத்தகத்தை பத்து தலைப்புகள்ல மாத்தி மாத்தி போட்டு ஏமாத்துறாங்க. நூலகங்கள் என்பது தமிழ் வளர்ச்சிக்கான விதை நெற்களை சேமிச்சு வைக்குற களஞ்சியம். அங்க நல்ல நூல்கள்தான் இருக்கணும். அதுக்காக எல்லோரும் தொடர்ந்து செயல்படணும்.

உலகப் புத்தக தினம்: ஒரு நாள் போதுமா!

செவ்வாய், 23 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon