மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 23 ஏப் 2019

ஆக்‌ஷன் சொல்ல ரெடியான மோகன்லால்

ஆக்‌ஷன் சொல்ல ரெடியான மோகன்லால்

‘தி கம்ப்ளீட் ஆக்டர்’ என அறியப்படும் நடிகர் மோகன்லால் நடிப்பு, தயாரிப்பைத் தொடர்ந்து தற்போது இயக்குநராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளார்.

40 வருட கால நடிப்பு அனுபவமுள்ள மோகன்லால் மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டாராக அறியப்படுபவர். தற்போது அவர் தான் அடுத்து இயக்கப்போகும் புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

பரோஸ் எனத் தலைப்பிடப்பட்ட 3டி தொழில்நுட்பத்தில் உருவாகவிருக்கும் படத்தை மோகன்லால் இயக்கவுள்ளார். போர்ச்சுகீஸ் நாட்டை அடிப்படையாகக் கொண்டு ஜிஜோ புன்னூஸ் எழுதிய வரலாற்றுப் புனைவு கதைதான் பரோஸ். இந்தியாவின் முதல் 3டி படமான மை டியர் குட்டிச்சாத்தான் படத்தை இயக்கிவர் ஜிஜோ புன்னூஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

மலபார் கடலோரப் பகுதியில் உலவும் கட்டுக்கதையான, வாஸ்கோடகாமாவின் புதையலை 400 ஆண்டுகளாகக் காவல் காக்கும் பரோஸ், தனக்கு அடுத்து வரும் உண்மையான வாரிசிடம் புதையலை ஒப்படைக்க காத்திருக்கிறது. பரோஸையும் ஒரு சிறுவனையும் மையப்படுத்தி மந்திர சாகசங்களுடன் நகரும் கதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் விதமாக உருவாகவிருக்கிறது.

ஏற்கனவே சென்றாண்டு வெளியான ஒப்பம் திரைப்படத்தை மோகன்லால் இயக்க முடிவு செய்திருந்தார், அதன் பின் தன் முடிவை மாற்றியுள்ளார். இந்த நிலையில் தற்போது அவரது இயக்குநராகும் முடிவு ரசிகர்களை மட்டுமல்லாது மலையாளத் திரையுலகையும் வியப்புக்குள் ஆழ்த்தியுள்ளது.

மோகன்லாலின் ஆஸ்தான இயக்குநர் பிரியதர்ஷன் இதைப் பற்றி டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் கொடுத்திருக்கும் பேட்டியில், “இதன் மூலம் சினிமாவை மேலும் என்னால் புரிந்துகொள்ள முடியும் என மோகன்லால் கூறியது முக்கியமானது. சினிமாவில் இருக்கும் நான், சினிமா உருவாக மற்ற அனைத்து துறைகளும் என்னென்ன பிரச்சினைகளைச் சந்திக்கின்றன என்பதை புரிந்துகொள்ள விரும்புகிறேன், அது என்னை இன்னும் மேம்பட்ட நடிகனாக மாற்றும் எனவும் கூறினார். வேறு எந்த நடிகரும் இந்த கோணத்தில் சிந்தித்து நான் பார்த்ததில்லை. இத்தனை வருட அனுபவமுள்ள ஒரு நடிகர் எடுத்திருக்கும் இந்த முடிவு நிச்சயம் தவறாகப் போகாது” எனக் கூறியுள்ளார் பிரியதர்ஷன்.

பரோஸ் என்ற டைட்டில் கதாபாத்திரத்தில் மோகன்லாலே நாயகனாக நடிக்கவுள்ளார். டிசம்பர் மாத தொடக்கத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

செவ்வாய், 23 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon