மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 14 ஜூலை 2020

ஆபரேஷன் கமலா: ஆதாரம் கேட்கும் வருமான வரித் துறை!

ஆபரேஷன் கமலா: ஆதாரம் கேட்கும் வருமான வரித் துறை!

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை பாஜக விலைக்கு வாங்கியதாகக் கூறப்பட்ட புகாரில் ஆதாரங்களைக் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளது வருமான வரித் துறை.

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதாதளம் கூட்டணி ஆட்சி, கடந்த ஆண்டு மே 23ஆம் தேதியன்று முதலமைச்சர் குமாரசாமி தலைமையில் அமைக்கப்பட்டது. அதன்பின், மூன்று முறை இந்த ஆட்சியைக் கலைக்க பாஜக முயற்சி செய்ததாக காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிகள் குற்றம்சாட்டின. இதற்கு ஆபரேஷன் கமலா என்று பெயர் இருப்பதாகக் கூறப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 20 எம்.எல்.ஏ.க்களை பாஜக விலை பேசியதாகப் புகார் எழுந்தது. முன்னாள் முதல்வர் சித்தராமையா உட்பட பலர், இந்த விவகாரத்தில் பாஜகவுக்கு எதிராகக் கருத்து தெரிவித்தனர்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த காம்ப்ளி கணேஷ், அனந்த் சிங், பி.நாகேந்திரா, ரமேஷ் ஜார்கிகோலி ஆகியோர் உட்பட பல எம்.எல்.ஏ.க்களிடம் பாஜக விலை பேசியதாகக் கூறப்பட்டது. அவர்களுக்குப் பெருமளவில் பணம் கொடுக்க முன்வந்ததாகவும் தகவல் வெளியானது. இது தொடர்பாக மூன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் புகார் அளித்தனர். இது பற்றி வருமான வரித் துறை விசாரணை மேற்கொண்டது.

கடந்த சில நாட்களாக, கர்நாடக அரசுடன் வருமான வரித் துறையானது மோதல் போக்கைக் கடைப்பிடித்து வருவதாகக் குற்றம்சாட்டி வருகின்றனர் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதாதளம் கூட்டணியினர். கடந்த 5ஆம் தேதியன்று வருமான வரித் துறையை எதிர்த்து, முதலமைச்சர் குமாரசாமி உள்ளிட்ட தலைவர்கள் போராட்டம் நடத்தினர். நேற்று முன்தினம்கூட கர்நாடகாவில் பல இடங்களில் சோதனை மேற்கொண்டனர் வருமான வரித் துறையினர். தேர்ந்தெடுத்து காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியினரிடம் மட்டும் சோதனை நடத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில், மூன்று எம்.எல்.ஏ.க்கள் விலை பேசப்பட்ட விவகாரத்தில் வருமான வரித் துறை அனுப்பிய கடிதம் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. இக்கடிதத்தில், உரிய ஆதாரங்களைச் சமர்ப்பிக்குமாறு கர்நாடக காங்கிரஸ் கட்சித் தலைவர் தினேஷ் குண்டுராவுக்குக் கடிதம் அனுப்பியுள்ளார் கர்நாடகா, கோவா மற்றும் பெங்களூருவுக்கான வருமான வரித் துறையின் விசாரணைப் பிரிவு தலைவர் பாலகிருஷ்ணன். ஏப்ரல் 5ஆம் தேதியிடப்பட்ட இக்கடிதத்தில், மூன்று எம்.எல்.ஏ.க்களுக்கு சம்மன் அனுப்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“சம்மன் அனுப்பப்பட்டவர்களில் இரண்டு எம்.எல்.ஏ.க்கள் அந்த குற்றச்சாட்டு உண்மையல்ல என்று தெரிவித்துள்ளனர். ஒருவர் சமீபத்தில் மரணமடைந்துவிட்டார். இந்தச் சூழலில், இப்புகார் மீது நடவடிக்கை மேற்கொள்ளப் போதுமான ஆதாரங்கள் இல்லை. எனவே, இது தொடர்பாக வேறு ஏதேனும் கிடைத்தால் எங்களுக்குத் தெரியப்படுத்தவும்” என்று அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

வியாழன், 18 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon