மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 10 ஏப் 2020

சமூக வலைதளங்களின் மீது மோகம் எங்கிருந்து வந்தது?

சமூக வலைதளங்களின் மீது மோகம் எங்கிருந்து வந்தது?

நவீனா

சமூக வலைதளங்கள், பொருட்களைப் பெரிய சந்தையில் வைத்து அதிகப் பொருளீட்டப் பயன்படுகின்றன. கருத்துச் சுதந்திரம் தருகின்றன. திறமைகளை வெளிக்காட்டி அதன் மூலம் பணம் சம்பாதிக்க வகை செய்கின்றன. பொழுதுபோக்கு அம்சமாகவும் திகழ்கின்றன. ஒரே நேரத்தில் பெரும்பான்மையான மக்களோடு தொடர்பில் இருக்கச் செய்கின்றன. ஆனால், இதுபோன்ற காரணங்கள் மட்டுமே சமூக வலைதளங்களின் எழுச்சிக்கு அடிப்படைக் காரணங்களாகத் தோன்றவில்லை. ஏனெனில், சமூக வலைதளங்களை வணிகச் சந்தையாகப் பயன்படுத்தக்கூடியவர்கள் சுமார் 20 சதவிகிதம் பேர் மட்டுமே. மீதமுள்ளோர் வேறு ஏதோ ஒரு காரணத்துக்காகவே வலைத்தளங்களைப் பயன்படுத்துகின்றனர்.

அந்தக் காரணத்தைத் தெரிந்துகொள்வதற்கு முன், டோபமைன் (Dopamine) பற்றி ஒரு சிறிய விளக்கம். ஓர் இளைஞன் ஓர் இளம்பெண்ணை முதன்முறையாகப் பார்க்கும்போதே அந்தப் பெண் மீது ஒரு விதமான ஈர்ப்பு ஏற்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். 'இவள்தான் என் மனைவி, என் பெற்றோரின் மருமகள், என் குழந்தைகளின் தாய்', என்றெல்லாம் கற்பனை செய்யும் அளவுக்குத் தூண்டப்படுகிறான். சூதாடும்போதும், புகை பிடித்தல், மது அருந்துதலின்போதும், அதிகமாக உண்ணும்போதும், ஷாப்பிங் செய்யும்போதும், போதை வஸ்துக்களைப் பயன்படுத்தும்போதும், இவ்வாறான எந்த ஒரு நடவடிக்கையில் ஈடுபடும்போதும், அதன் விளைவாக ஒருவித இன்பமான உணர்வு ஏற்படுகிறது. அந்த உணர்வினால் தூண்டப்பட்டுத்தான் இவ்வாறான நடவடிக்கைகளில் திரும்பத் திரும்ப ஈடுபடுகிறோம்.

இந்த உணர்ச்சியின் மூலமாக மனித மூளைக்குள் இருந்து தூண்டிவிடுவது டோபமைன் என்னும் வேதிப்பொருள். இதுவே மனிதன் அடிமையாக இருக்கும் அத்தனை பழக்க வழக்கங்களுக்கும் ஆதிமூலம். சொல்லப்போனால், மனித மூளையில் இயற்கையாகவே உற்பத்தி ஆகும் ஒரு போதை வஸ்துதான் டோபமைன். மனிதனின் தனிப்பட்ட விருப்பமாகக் கருதப்படும் அனைத்தும் மனித மூளையில் உற்பத்தியாகும் டோபமைனால் உந்தப்படுபவையே.

'சோஷியல் மீடியா டோபமைன்' என்னும் வழக்காறு சமீபத்தில் பிரபலமாகிவருகிறது. மனிதனுக்கு இயல்பிலேயே தன்னைப் பற்றிப் பேசுவது மிகவும் பிடித்த விஷயங்களில் ஒன்று. தன்னைப் பற்றியும், தான் சார்ந்த விஷயங்களையும் அனைவரும் புகழ்ந்து பேச வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு மனிதனுக்கு என்றும் குறைவதே கிடையாது. இதுவும் ஒருவகையில் டோபாமைனால் தூண்டப்படும் விருப்பம்தான். இதன் காரணமாகவே ஒவ்வொருவரும் தன்னைப் பற்றிய விஷயங்களை அதிகம் பகிரக்கூடிய ஃபேஸ்புக் (Facebook), வாட்ஸ் அப் (Whatsapp), ட்விட்டர் (Twitter), இன்ஸ்டாகிராம் (Instagram) மற்றும் யூடியூப் (YouTube) போன்றவை உலகம் முழுவதும் இணையப் பயன்பாட்டில் முதலிடத்தில் இருக்கின்றன.

நேருக்கு நேராக, முகம் பார்த்து ஒருவரிடம் நிகழும் உரையாடலில் 30 முதல் 40 சதவிகிதம் ஒருவர் தன்னைப் பற்றி பேசுகிறார். இவ்வகை உரையாடல்களில், இருவரும் மாறி மாறிப் பேசும்போது, ஒருவர் மட்டுமே தன்னைப் பற்றிப் பேசும்படியாக நிஜவுலக உரையாடல்கள் இருப்பதில்லை. ஆனால், சமூக வலைதளங்களில் பதிவிடும் ஒவ்வொருவரும் 80 சதவிகிதம் தன்னைப் பற்றி மட்டுமே பேசுகின்றனர். இன்னொருவரும் பேசுவது என்பது சமூக வலைதள உரையாடல்களில் நிகழ்வதில்லை. இதனால் அவர்கள் ஒரு வகையான சுய மிகை விருப்பத்துக்கு ஆளாகின்றனர். இது மனித மூளையின் டோபாமைனுக்கு மிகவும் பிடித்தமான விஷயம். இந்த சுய மிகை விருப்பம் நாளடைவில் தன் பார்வையாளர்களின் எண்ணிக்கை, தன்னைப் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை, லைக்குகள், கமெண்ட்டுகள், ஷேர்கள், மறு பதிவுகள் என்பன போன்றவற்றின் மீதான மிகை விருப்பமாக மாறுகிறது. ஒரு கட்டத்தில் நிஜ மனிதர்களைக் காட்டிலும், சமூக வலைதளத்தில் உலவும் மனிதர்களின் மீது அதிக ஆர்வம் காட்டத் தொடங்குவதையே 'சமூக வலைதள டோபாமைன்' என்று குறிப்பிடுகின்றனர்.

டச்சுக் கட்டடக் கலைஞர்கள் வடிவமைத்த நிறுவனம் ஒன்றில், அறையின் மேசைகள் அனைத்தும் மேற்கூரையோடு பொருந்துமாறு வடிவமைத்திருந்தனர். முதல் நாள், அந்தப் புதிய கட்டடத்தில் பணியாளர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பணியாற்றிக்கொண்டிருந்தனர். மின்னஞ்சல் அனுப்புவதும், வலைதளங்களில் பதிவிடுவது என இருந்தவர்கள் திகைக்கும்படி, மாலை 6 மணியானதும் மேசைகள் மடங்கித் தானாகவே மேற்கூரையுடன் சேர்ந்து பொருந்திவிட்டன. அவர்கள் அனைவருக்கும் ஆச்சரியம் தாங்கவில்லை. நிறுவன அதிபரிடம் இதுபற்றி அவர்கள் விளக்கம் கேட்டபோது அவர், “நீங்கள் இந்தத் திரைகளுக்கு முன் அமர்ந்து உழைப்பதெல்லாம், உங்கள் குடும்பங்களுக்காகத்தான். அலுவலக நேரம் முடிந்த பின், அப்படிப்பட்ட குடும்பத்தோடு நீங்கள் செலவிட வேண்டிய நேரத்தை, இந்தத் திரைகளின் முன்பு அமர்ந்து செலவிடுவது எந்த விதத்தில் சரியாகும்?” எனக் கேள்வியெழுப்பினார்.

எந்த அறிவியல் முன்னேற்றத்தையும் மனிதன் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்வரை அது பற்றி அதிகமாகக் கவலைகொள்ளத் தேவையில்லை. ஆனால், அதன் கட்டுப்பாட்டில் மனிதன் இருந்தால் என்றுமே விபரீதம்தான்.

வலைய வரலாம்!

(தொடரின் அடுத்த பகுதி அடுத்த வியாழன் அன்று வெளியாகும்)

(கட்டுரையாளர் நவீனா, ஆங்கிலப் பேராசிரியர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர். சமூகப் பிரச்சினைகள், பெண்ணியம், இலக்கியம் சார்ந்த படைப்புகளை எழுதிவருகிறார். இவரைத் தொடர்புகொள்ள: [email protected])

சமூக வலைதளங்களில் என்னதான் நடக்கிறது?

வியாழன், 18 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon