மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 27 பிப் 2020

பாஜகவில் போட்டியிடும் சாத்வி பிரக்யா

பாஜகவில் போட்டியிடும் சாத்வி பிரக்யா

மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சாத்வி பிரக்யா தாகூர் பாஜகவில் இணைந்து 4 மணி நேரத்தில் போபால் தொகுதியில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள போபால் தொகுதிக்கு ஆறாம்கட்ட தேர்தல் நடக்கும் மே 12ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இந்தத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங் போட்டியிடுகிறார். இதனால் திக் விஜய் சிங்கை எதிர்கொள்ளும் வகையில் வலுவான வேட்பாளரைக் களமிறக்க பாஜக திட்டமிட்டு வந்தது. பாஜக சார்பில் இத்தொகுதியில் உமா பாரதி, நரேந்திர சிங் தோனம் மற்றும் சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளில் யாரேனும் ஒருவரைப் போட்டியிட வைக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகச் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய சாத்வி பிரக்யா நேற்று (ஏப்ரல் 17) போபாலில் உள்ள பாஜக அலுவலகத்துக்குச் சென்று தன்னை கட்சியில் இணைத்துக்கொண்டார். 2006ஆம் ஆண்டு செப்டம்பரில் மகாராஷ்டிராவின் மாலேகானில் மசூதி அருகே வெடிகுண்டு வெடித்தது. இந்தக் குண்டு வெடிப்பில் ஆறு பேர் கொல்லப்பட்டனர். 100 பேர் வரை இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டனர். அந்தச் சம்பவத்தில் தீவிரவாத தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்றவர் சாத்வி பிரக்யா.

இவர் மீதான வழக்கு இன்னும் முடிவடையவில்லை. கட்சியில் இணைந்த உடனேயே சாத்வி பிரக்யா போபால் தொகுதியில் களமிறக்கப்படலாம் என்று பாஜக வட்டாரத்தில் செய்திகள் பரவியது. இதுகுறித்து அவர் கூறுகையில், “நான் பாஜகவில் இன்று இணைந்துள்ளேன். எனது கொள்கைகளுடன் பாஜக ஒத்துப்போவதால் அந்த கட்சியில் இணைந்துள்ளேன். தேர்தலில் போட்டியிடுவது குறித்து நான் முடிவு செய்ய முடியாது. கட்சி தான் முடிவெடுக்கும்” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் கட்சியில் இணைந்த 4 மணி நேரத்துக்குள் போபால் தொகுதியில் அவர் போட்டியிடுவதை பாரதிய ஜனதா கட்சி உறுதி செய்தது. சாத்வி பிரக்யாவை இந்து தீவிரவாதி என்று காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் திக் விஜய் சிங்கை எதிர்த்து அவர் போட்டியிடவுள்ளதாக பாஜக அறிவித்துள்ளது.

வியாழன், 18 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon