மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 19 ஜன 2021

உயர்சாதியினரால் பாஜகவுக்கு பாதகமா?

உயர்சாதியினரால் பாஜகவுக்கு பாதகமா?

ஹரிஷ் கரே

சில மாதங்களுக்கு முன்பு, டெல்லியைச் சேர்ந்த சில ஊடக தலைவர்கள் பாஜக தலைமைக்கு ஸ்ருதி தவறாமல் துதி பாடிவந்தனர். பாஜக தலைவர் அமித் ஷா ‘புதுயுக சாணக்கியர்’ எனவும் அழைக்கப்பட்டார். கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தள - காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சியில் அமர்ந்த பிறகு அத்தனை துதி பாடல்களும் அடங்கிவிட்டன. இருந்தாலும், பாஜக தலைமையான அமித் ஷா, நரேந்திர மோடியின் அரசியல் யுக்தி, தந்திரங்கள், புதுமுறைகள் குறித்து சிலர் புகழ் பாடி வருகின்றனர்.

எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, கல்ராஜ் மிஸ்ரா, சுமித்ரா மகாஜன், சத்ருகன் சின்ஹா, அஜய் அகர்வால் போன்ற முக்கிய தலைவர்களுக்கு மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. பாஜகவுக்கு மேற்கொண்டு மதிப்புக்கூட்ட பயன்படாதவர்கள் என்பதால் இவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை என்று கூறப்பட்டது. இதுவும் ஓர் அரசியல் யுக்தி என சிலர் பேசி வந்தனர்.

ஆனால், இவர்களை ஓரம்கட்டியதால் சத்தமில்லாமல் உயர்சாதிகளில் ஒரு எதிர்ப்பு உருவாகியுள்ளதை யாருமே கவனிக்கவில்லை. உயர்சாதிகள்தான் பாஜகவின் முக்கிய வாக்கு வங்கியாக இருந்து வருகிறது என்பதை நாம் அறிவோம். “பார்ப்பனர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. கயஸ்தர்கள் அவமதிக்கப்பட்டுள்ளனர். பனியாக்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்” என்பதே உயர்சாதியினர்களில் பெரும்பாலானோரின் குரல். உயர்சாதியினருக்கு மோடி - அமித் ஷா வழங்கிவந்த முக்கியத்துவம் கடந்த சில மாதங்களில் சரிந்துள்ளதால் அவர்களிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது என்பதை மறுக்க முடியாது.

2014ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக தன்னை ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கான கட்சியாகவே முன்னிறுத்திக்கொண்டது. நாட்டுக்குப் பிற்படுத்தப்பட்ட சமூகத்திலிருந்து முதல் பிரதமர் கிடைக்கப்போவதாக எங்கும் பெருமைக் குரல்கள் ஒலித்தன.

மோடி ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்ற பிரச்சார யுக்தியால் 2014 மக்களவைத் தேர்தலில் கணிசமான வாக்குகள் கிடைத்தன. அதேபோல 2017ஆம் ஆண்டு நடைபெற்ற உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலிலும் பிற்படுத்தப்பட்ட மக்களின் கணிசமான வாக்குகளை பாஜக அறுவடை செய்துகொண்டது. பாஜக ஒரு பார்ப்பன - பனியா கட்சி என்ற நிலை மாறி, தேசிய அளவில் காங்கிரஸுக்கு மாற்றாக உருவெடுத்துள்ளதாகப் பலரும் பேசி வந்தனர்.

பாஜகவில் பாரம்பரியமாகப் பதவிகளை அனுபவித்துவந்த உயர்சாதியினர் மற்ற சமூகக் குழுக்களுடன் அதிகாரத்தைப் பங்கிட வேண்டிய நிலை உருவானது. சிறிது நாட்களுக்குக் கலாச்சார தேசியவாதம், இஸ்லாமிய எதிர்ப்பு, பாகிஸ்தான் எதிர்ப்பு போன்ற பரப்புரைகள் இல்லாததால் பாஜகவின் பெயரும், மதிப்பும் வீழ்ச்சியடையாமல் இருந்து வந்தது. இப்படி பாஜகவில் சமூக சமநிலை உருவெடுத்துக்கொண்டிருந்த காலத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்ட விவகாரம் தலையெடுத்தது.

2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கடுமையான விதிகளை உச்ச நீதிமன்றம் தளர்த்தியது. இதற்கு உயர்சாதியினர் சத்தம்போடாமல் பாராட்டுகளைத் தெரிவித்து வந்தனர். வன்கொடுமை தடுப்புச் சட்ட விவகாரத்தால் பாஜக கூட்டணியில் உள்ள ராம் விலாஸ் பஸ்வான் போன்றோரிடம் எதிர்வினையைச் சம்பாதிக்க வேண்டியிருக்கும் என்பதால் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் சட்டத் திருத்த மசோதா 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வேக வேகமாக நிறைவேற்றப்பட்டது. வேறு வழியின்றி பாஜகவிலிருந்த உயர்சாதி பொறுப்பாளர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை உருவானது.

பாஜகவுக்குப் புதிய தலைமை பதவியேற்ற பிறகு அக்கட்சியில் உயர்சாதியினர் தனித்து விட்டதுபோல் உணர்ந்தனர். அவர்கள் வேறு கட்சிகளுக்குப் போகவும் வழியில்லை. கலாச்சார தூய்மை மற்றும் வைதீக காவலர்களாகிய சங் பரிவாரங்களும் பாஜகவின் பக்கம் சாய்ந்து வெற்றி மட்டுமே ஒரே குறிக்கோள் என்ற நிலைக்கு வந்துவிட்டன. ஆனால், பாஜகவுக்குப் பதிலடி கொடுக்க உயர்சாதியினருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக தோல்வியடைந்தது.

உயர்சாதியினரின் அதிருப்தியை போக்குவதற்காக மோடி ஒரு புதிய திட்டத்துடன் களமிறங்கினார். பொருளாதார ரீதியாக பின் தங்கிய சமூகங்களுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு திட்டத்தால் உயர்சாதியினரின் ஆதரவை மீண்டும் கைப்பற்ற மோடி முயற்சி செய்தார். இந்தத் திட்டம் குறித்து வடஇந்தியாவிலுள்ள பார்ப்பனர்களையும், உயர்சாதியினரையும் விட தொலைக்காட்சி நெறியாளர்களே அதிகம் மகிழ்ச்சியடைந்தனர்.

பாலகோட் விமானப் படைத் தாக்குதலுக்குப் பிறகு பாஜக தேர்தல் யுக்தியில் சாதிக்கு மதிப்பளிக்கப்படவில்லை என்பதே அக்கட்சியின் மூத்த தலைவர்களின் கருத்து. நாளுக்கு நாள் தேசியவாத மந்திரத்தை மோடி அதிகம் கையிலெடுப்பதால் எல்லா சமூகங்களின் ஆதரவும் தனக்குக் கிடைக்கும் என நம்புகிறார். இந்த நம்பிக்கையால் பாஜகவின் வேட்பாளர் தேர்வில் உயர்சாதியினருக்கு மதிப்பளிக்கப்படவில்லை.

மற்ற எல்லா கட்சிகளுமே தங்களது சாதி விஸ்வாசத்தைக் காட்டிக்கொண்டுதான் இருக்கின்றன. தங்களை மட்டும் ஒதுக்கி வைப்பதற்கு பார்ப்பனர்கள் தயாராக இல்லை. மோடியின் தேசியவாத பரப்புரைகளின் மத்தியில் நேரு குடும்பத்தின் மற்றொரு நபரான பிரியங்கா காந்தி அரசியலில் களமிறங்குகிறார். உத்தரப் பிரதேச பார்ப்பனர்களிடையே பிரியங்கா காந்தி வலுவான வரவேற்பை பெற்றுள்ளதாகப் பல கள ஆய்வுகள் சொல்கின்றன.

மறுபுறம் பாஜக தலைமையோ பார்ப்பன தலைவர்களைத் தேர்தல் போட்டியிலிருந்து ஓரம்கட்டிவிட்டது. ஆக, மேற்கு மற்றும் கிழக்கு உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் வேட்பாளர்கள் பாஜகவின் வாக்கு வங்கியில் கணிசமான பங்கை கைப்பற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. உயர்சாதியினரிடையே பாஜகவுக்கான ஆதரவும், உற்சாகமும் முன்பைவிட வீழ்ச்சியடைந்துள்ளது என்பதையே முதற்கட்ட கள நிலவரம் கூறுகிறது. இறுதிக்கட்ட வாக்கு எண்ணிக்கையின்போது உயர்சாதி வாக்குகளே முக்கிய பங்கு வகிக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

நன்றி: தி வயர்

வியாழன், 18 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon