மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 25 செப் 2020

திருமாவளவன் பெயரைச் சொல்லி ஓட்டு கேட்பீர்களா? அன்புமணி

திருமாவளவன் பெயரைச் சொல்லி ஓட்டு கேட்பீர்களா? அன்புமணி

நாமக்கல் தொகுதியில் திருமாவளவன் பெயரைச் சொல்லி ஓட்டு கேட்பீர்களா என்று ஈஸ்வரனுக்கு அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாமக்கல் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் காளியப்பனுக்கு வாக்கு சேகரிக்கும் வகையில் நேற்று (ஏப்ரல் 15) ராசிபுரத்தில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மின் துறை அமைச்சர் தங்கமணி, சமூகநலத் துறை அமைச்சர் சரோஜா, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பிரச்சாரத்தில் பேசிய அன்புமணி, திமுக கூட்டணியைக் கடுமையாக விமர்சித்தார். “திமுக கூட்டணி வேட்பாளர்கள் அனைவரும் பண முதலைகளாக, மது ஆலை அதிபர்களாக உள்ளனர். முக்கியமாக சரக்கு மிடுக்கானவர் ஒருவர் இருக்கிறார். அதிமுக கூட்டணி விவசாயக் கூட்டணி. கூட்டணித் தலைவர்கள் அனைவரும் விவசாயப் பின்னணி கொண்டவர்கள். ஆனால், ஸ்டாலினுக்கும் விவசாயத்துக்கும் ஏதாவது சம்பந்தம் உள்ளதா? அவருக்கு ஏர் என்றால் என்ன, கலப்பை என்றால் என்னவென தெரியுமா? அவர் ஷூ அணிந்துகொண்டு கரும்புத் தோட்டத்தில் நடக்க, தனியாக ரோடு போட்டார்கள்” என்று குற்றம் சாட்டினார்.

ராமதாஸை ஸ்டாலின் கொச்சையாகப் பேசி வருவதாகவும், அவருடைய பேச்சு ஒரு கட்சியின் தலைவர் பேச்சு போல இல்லை என்றும் குறிப்பிட்ட அன்புமணி, திமுக கூட்டணித் தலைவர்களையும் விமர்சித்தார். இந்தியாவிலேயே அதிக சரக்கு மிடுக்கானவர் என திருமாவளவனை மறைமுகமாக விமர்சித்த அவர், சிதம்பரத்தில் பானை உடையப் போவது உறுதி எனக் கூறினார்.

தொடர்ந்து, “ஈஸ்வரன் கட்சியின் வேட்பாளர்தான் இங்கு போட்டியிடுகிறார். ஆனால், அவருக்கென்று தனிச் சின்னம் கிடையாது. ஈஸ்வரனிடம் ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன். நீங்கள் ராசிபுரம் வந்து, உங்களின் வேட்பாளரை அறிமுகப்படுத்தி, திருமாவளவன் ஆசிபெற்ற வேட்பாளர் என்று கூறி வாக்கு சேகரிக்க முடியுமா? அதற்கான தைரியம் இருக்கிறதா? அப்படிக் கேட்டால் உங்களுக்கு ஓட்டு போடுவார்களா? டெபாசிட் போய்விடும். ஆனால், எங்கள் கூட்டணியிலுள்ள அனைத்து தலைவர்களின் பெயரைக் கூறியும் நாங்கள் வாக்கு சேகரிப்போம்” என்று பேசினார். திமுக கூட்டணி அராஜகக் கூட்டணி, அதிமுக கூட்டணி அமைதிக்கான கூட்டணி என்று அன்புமணி தனது பேச்சில் குறிப்பிட்டார்.

செவ்வாய், 16 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon