மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 15 நவ 2019

கொடநாடு விவகாரம்: எடப்பாடி, ஸ்டாலின் பேசத் தடை!

கொடநாடு விவகாரம்: எடப்பாடி, ஸ்டாலின் பேசத் தடை!

கொடநாடு விவகாரம் தொடர்பாக முதல்வரும், எதிர்க்கட்சி தலைவரும் பேசத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று (ஏப்ரல் 16) உத்தரவிட்டுள்ளது.

கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புப்படுத்திப் பேசியதாக தனக்கு எதிராகத் தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட அவதூறு வழக்கு விசாரணைக்குத் தடை விதித்து உத்தரவிட்டது.

அதன் பின்னரும் கொடநாடு சம்பவம் குறித்து ஸ்டாலின் தொடர்ந்து பேசி வருவதாகக் கூறி, அவதூறு வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி அரசு சார்பில் கூடுதல் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், இதுபோல் தொடர்ந்து பேச வேண்டாம் என ஸ்டாலினுக்கு அறிவுறுத்தும்படி ஸ்டாலின் தரப்பு வழக்கறிஞருக்கு ஏப்ரல் 4ஆம் தேதி வாய்மொழி உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்நிலையில், தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட திமுக தலைவர் ஸ்டாலின், கொடநாடு சம்பவம் குறித்து ராமநாதபுரம், தென்சென்னை, சோழிங்கநல்லூர், நீலகிரி, கள்ளக்குறிச்சி, நாமக்கல் ஆகிய இடங்களில் தொடர்ந்து பேசி வருவதாகக் கூறி, அவர் மீது தமிழக அரசு சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது.

இந்நிலையில், அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி ஸ்டாலின் தாக்கல் செய்த மனு, தடையை நீக்கக் கோரி அரசு தாக்கல் செய்த மனு, நீதிமன்ற அவமதிப்பு மனு என அனைத்து மனுக்களும் நீதிபதி இளந்திரையன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அப்போது, அரசுத்தரப்பு வழக்கறிஞர், ஸ்டாலினின் பேச்சு குறித்த வீடியோவை நீதிபதிக்குப் போட்டுக் காட்டினார். இதுகுறித்து ஸ்டாலின் தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதி கேள்வி எழுப்பிய போது, தேர்தல் பிரச்சாரம் முடிய இருப்பதால் இந்த விவகாரத்தை இனி பேசப் போவதில்லை எனத் தெரிவித்தார். இதையடுத்து, கொடநாடு விவகாரம் தொடர்பாக முதல்வரும், எதிர்க்கட்சி தலைவரும் பேசக் கூடாது என உத்தரவிட்ட நீதிபதி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தார். பிரதான வழக்கின் விசாரணையை ஜூன் மாதத்துக்கு ஒத்திவைத்தார்.

செவ்வாய், 16 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon