மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 14 ஆக 2020

மத்திய சென்னையை மாற்றுவார் சாம்பால்: பிரேமலதா

மத்திய சென்னையை மாற்றுவார் சாம்பால்: பிரேமலதா

மத்திய சென்னை தொகுதியில் பாமக வேட்பாளர் சாம்பாலை ஆதரித்துப் பிரச்சாரம் மேற்கொண்ட பிரேமலதா விஜயகாந்த், ஊழல் வழக்குகளே திமுகவைச் சேர்ந்த தயாநிதி மாறனின் சாதனை என்று கூறியுள்ளார்.

இரண்டு வாரங்களுக்கும் மேலாகத் தமிழகம் முழுவதும் அதிமுக – பாஜக கூட்டணியில் உள்ள வேட்பாளர்களுக்காகப் பிரச்சாரம் மேற்கொண்டார் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா. கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் அவரது சகோதரர் சுதீஷ் போட்டியிடுகிறார். நேற்று முதல் சென்னையை மையமாகக் கொண்டு பிரச்சாரம் செய்துவருகிறார் பிரேமலதா.

வடசென்னை தொகுதியில் போட்டியிடும் தேமுதிகவைச் சேர்ந்த அழகாபுரம் மோகன்ராஜை ஆதரித்துப் பிரச்சாரம் மேற்கொண்டவர், இன்று (ஏப்ரல் 16) காலையில் மத்திய சென்னை தொகுதியில் பாமக சார்பில் மாம்பழம் சின்னத்தில் போட்டியிடும் சாம்பாலை ஆதரித்துப் பிரச்சாரம் செய்தார். “2011ஆம் ஆண்டில் அம்மாவும் கேப்டனும் அமைத்த கூட்டணி ராசியானது. அந்த வரலாறு இன்று மீண்டும் திரும்பியிருக்கிறது. 40 தொகுதிகளையும் நமது மெகா கூட்டணி வென்றெடுக்கும்” என்றார்.

பிரச்சாரத்தின்போது, திமுக சார்பில் போட்டியிடும் தயாநிதி மாறனைத் தாக்கும் வகையில் பிரேமலதாவின் பேச்சு அமைந்திருந்தது. “தன்னுடைய உழைப்பின் மூலமாக மிகப்பெரிய தொழிலதிபராக வந்திருக்கிறார் சாம்பால். இவர் வெற்றி பெற்று, மத்திய சென்னையை முதன்மைத் தொகுதியாக மாற்றுவார். பத்து வருடங்களாக எம்பியாகவும் மத்திய அமைச்சராகவும் இருந்தவர் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன். 440 ஊழல் வழக்குகள் தன் மீது இருப்பதுதான் அவரது சாதனை. கொள்ளையடிப்பவருக்கு உங்கள் வாக்கா, கடுமையாக உழைத்து முன்னேறியிருக்கும் சாம்பாலுக்கு உங்கள் வாக்கா என்பதைச் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவும் விஜயகாந்தும் சினிமாவிலிருந்து வந்திருந்தாலும், அவர்களுக்கு மக்கள் முன்னால் நடிக்கத் தெரியாது என்றார் பிரேமலதா. “சொல்றது ஒண்ணு செய்றது ஒண்ணு என்றிருப்பவர்கள் அவர்கள் (திமுக). கடவுள் இல்லை என்று சொல்லிவிட்டு, ஊர் ஊராகச் சென்று கடவுளைக் கும்பிட்டுக்கொண்டிருப்பவர்கள். ஆனால் நமது கட்சி கடவுளை நம்புகிறது. கடவுள் பக்தி இருக்கிற கட்சி நம்முடையது. எங்கு பக்தி இருக்கிறதோ, அங்கு பண்பு இருக்கும். பண்பு இருக்குமிடத்தில் துணிவும் இருக்கும். பண்பும் துணிவும் இணைந்து அனைத்துச் சவால்களையும் வென்றெடுக்கும்” என்று பிரச்சாரத்தில் பேசினார்.

முக்கனிகளுள் சிறந்தது எது, இந்த சீசனுக்கு ஏற்றது எது என்று மக்களிடையே கேள்வி எழுப்பிய பிரேமலதா, மாம்பழம் சின்னத்துக்கு அனைவரும் வாக்களிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.

செவ்வாய், 16 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon