மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 24 அக் 2020

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்: ஸ்டாலின்

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்: ஸ்டாலின்

திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியில் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர், “நான் இங்கே வந்து வாக்கு கேட்கிறேன் என்றால் ஏதோ தேர்தலுக்கு மட்டும் இங்கே வந்துபோகிறேன் என அர்த்தமல்ல. கஜா புயல் தாக்கியபோது உங்களை வந்து சந்தித்து ஆறுதல் கூறிய அதே ஸ்டாலின் தான் இப்போது வாக்கு கேட்டு வந்திருக்கிறேன். நியாயமாக முதலமைச்சர்தான் முதலில் வந்திருக்க வேண்டும். ஆனால் அவர் வரவில்லை. ஹெலிகாப்டரிலேயே வந்து பார்த்துவிட்டு போனார்.

அவர் ஒருபுறம், மோடி இந்தியாவின் பிரதமர் என்கிறார்கள். தமிழகமும் இந்தியாவில்தான் இருக்கிறது. கஜா புயல் தாக்கி உணவு, மின்சாரம், குடிநீர் என பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து மக்கள் வாடினர். அதற்கு உரிய நிதியும் இன்னும் வந்துசேரவில்லை. பிரதமர் ஒருமுறைகூட வந்துபார்க்கவில்லை. கஜா புயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு குறைந்தபட்சமாக அனுதாபம் தெரிவித்தாரா? இரங்கல் செய்தி தெரிவித்தாரா? அவர் இந்தியாவின் பிரதமரல்ல, வெளிநாடுகளின் பிரதமர்.

வெளிநாடுகளிலேயே சுற்றிக்கொண்டிருந்த மோடி இப்போது தேர்தலுக்காக இந்த பக்கம் வருகிறார். மக்கள் நாடாளுமன்ற தேர்தலை மட்டும் மனதில் வைத்திருக்கக்கூடாது. மோடியை வெளியே அனுப்புவதுபோல எடப்பாடியையும் வெளியே அனுப்பப்போகிறோம். இந்த தேர்தலில் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.

தலைவர் கலைஞரே உங்களிடத்தில் வந்து ஆதரவு கேட்டிருப்பார். அவர் இப்போதும் நம்முடன் இருந்தாலும், இயற்கை அவரை நம்மிடமிருந்து பிரித்துவிட்டது. அவருக்கு 6 அடி இடம் கொடுக்க எடப்பாடி அரசு மறுத்தது. அப்படிப்பட்டவர்களுக்கு நாம் பாடம் புகட்ட வேண்டும். அதற்காக இந்த தேர்தலை பயன்படுத்திக்கொள்ளுங்கள்” என்று பேசினார்.

செவ்வாய், 16 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon