மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 10 ஆக 2020

அந்தந்த மாநிலத்துக்கேற்ப கூட்டணி: உம்மன் சாண்டி

அந்தந்த மாநிலத்துக்கேற்ப கூட்டணி: உம்மன் சாண்டி

கேரளாவில் இடதுசாரிகளை எதிர்த்துப் போட்டியிடுவதால் எந்தப் பிரச்சினையும் எழவில்லை என்றும், தேசிய அளவில் அந்தந்த மாநிலத்துக்கு ஏற்ப கூட்டணி வைத்துள்ளோம் என்றும் கன்னியாகுமரி தொகுதியில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார் கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி.

கன்னியாகுமரி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஹெச்.வசந்தகுமாரை ஆதரித்து, நேற்று (ஏப்ரல் 15) பிரச்சாரம் மேற்கொண்டார் கேரள முன்னாள் முதலமச்சரான உம்மன் சாண்டி. மார்த்தாண்டம் காஞ்சிரகோடு காங்கிரஸ் அலுவலகத்தில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ் உட்பட காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் அவருடன் இருந்தனர்.

மதச்சார்பற்ற தன்மைக்கும் மோடியின் தலைமையிலான பாஜகவின் மதவாதத்துக்கும் எதிரான போராட்டமாக இந்த மக்களவைத் தேர்தல் அமைந்துள்ளதாகத் தெரிவித்தார் உம்மன் சாண்டி. மோடியின் ஆட்சியில் இந்தியா பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிவிட்டதாகக் கூறினார்.

“காங்கிரஸ் கட்சி தேசிய ஒருமைப்பாட்டில் நம்பிக்கை வைத்துள்ளது. அதனால், பிற மதச்சார்பற்ற கட்சிகளுடனும் இடதுசாரிகளுடனும் இணைந்து செயல்படுகிறோம். கேரளாவில் நாங்களும் இடதுசாரிகளும் எதிர்த்துப் போட்டியிடுவதால் எந்தப் பிரச்சினையும் எழவில்லை. தேசிய அளவில் அந்தந்த மாநிலத்துக்கேற்ப கூட்டணி அமைத்துள்ளோம்.

இந்தியாவில் உள்ள எல்லா மக்களும் ராகுல் காந்தி தலைமை மீது நம்பிக்கை வைத்துள்ளனர். வயநாடு தொகுதியில் அவர் அதிக வாக்குகள் பெறுவார். இந்த தேர்தலில் பெரும் வெற்றி பெற்று, அவர் பிரதமர் ஆவார்.

கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறுவார்” என்று அவர் தெரிவித்தார்.

முல்லைப் பெரியாறு அணை தமிழ்நாட்டில் உள்ள 5 மாவட்டங்களுக்குப் பயனளிக்கிறது என்றும், அதனைப் பாதிப்பில்லாமல் கையாள்வோம் என்றும் அவர் தன் பேச்சில் குறிப்பிட்டார். சபரிமலை விவகாரத்தை அரசியலாக்க விரும்பவில்லை என்று தெரிவித்த உம்மன் சாண்டி, கேரள மாநில அரசு நீதிமன்றத்தில் வெவ்வேறு கருத்துகளைத் தொடர்ந்து தெரிவித்து வருவதாகக் கூறினார். அதே நேரத்தில் சபரிமலை பிரச்சினையை அரசியலாக்கி பாஜக நடித்து வருகிறது என்றார்.

செவ்வாய், 16 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon