மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 8 ஆக 2020

ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை வலுப்படுத்துவோம்!

ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை வலுப்படுத்துவோம்!

ஊரக மக்களின் வருமானத்தை அதிகரிப்பதற்கும், ஊரக வளர்ச்சிக்கான பொதுப் பணிகளை மக்களே மேற்கொண்டு, உற்பத்தித் திறனைப் பெருக்கும் கட்டமைப்பு வசதிகளை எழுப்புவதற்கும் பயன்படும் வகையில் வடிவமைக்கப்பட்டதே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புச் சட்டம் (100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் எனும் MGNREGA). மேலும், உடலுழைப்பைச் செலுத்த வேண்டிய வேலைகளை உருவாக்கும் ஒரு நோக்கமும் இருந்தது.

கிணறு வெட்டுவது, குளம்-குட்டைகளைத் தூர்வாருதல், சாலைகள் போடுவது என இத்திட்டத்தின்கீழ் ஊரக மக்கள் மேற்கொண்டுள்ள பொதுப்பணிகளில் 87 விழுக்காட்டு பணிகள் நல்ல முறையில் செயல்பட்டு வருவதாகவும், 75 விழுக்காட்டு கட்டமைப்பு வசதிகள் ஏதாவது ஒரு வகையில் வேளாண்மைக்கு உதவுவதாகவும் மகாராஷ்டிரா மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மக்கள் தெரிவித்துள்ளனர்.

சரியான முறையில் செயல்படுத்தினால் இத்திட்டம் ஊரக மேம்பாட்டுக்கும், வளங்குன்றா வேளாண்மைக்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் வழிவகுக்கும். வேலைக்கான கிராக்கி இருந்தும் வேலையேதும் உருவாக்கப்படாதது, வேலைக்கான கூலியை வங்கிக் கணக்கில் செலுத்துவதில் தாமதம் போன்ற குறைபாடுகள் இன்னும் இருப்பதால், இத்திட்டத்தின் முழுப்பயனை மக்களிடம் கொண்டுசேர்க்க இன்னும் கொஞ்சம் காலம் தேவைப்படும். ஊரக சுயாட்சி, பெண்களின் பொருளாதார சுதந்திரம் ஆகிய நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு இன்னும் பாடுபட வேண்டும்.

2016 நவம்பர் மாதம் புழக்கத்தில் இருக்கும் பணத்தின் மொத்த மதிப்பில் 86 விழுக்காட்டை அரசு மதிப்பிழக்கச் செய்ததால் ஊரகப் பொருளாதாரம் பெரும் பாதிப்பிற்குள்ளானது. பணமதிப்பழிப்பு (demonetization) நடவடிக்கையைத் தொடர்ந்து, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புச் சட்டத்தின்கீழ் ஊரகப் பணிகளுக்கான கிராக்கி பன்மடங்கு அதிகரித்தது.

2017-18 நிதிநிலை அறிக்கையில் MGNREGAக்கான ஒதுக்கீடு ரூ. 47,500 கோடி; முந்தைய நிதியாண்டில் இதற்கு அரசு செய்த செலவு ரூ. 47,000 கோடி. MGNREGAக்கு நிதி ஒதுக்கீட்டை நடுவணரசு 1 விழுக்காடு மட்டுமே உயர்த்தியது. இது நியாயமற்ற செயல் என்பதே பொருளாதார வல்லுநர்களின் ஒருமித்த கருத்து.

வேலைவாய்ப்பை உறுதிசெய்யும் செயல்திட்டங்களின் முக்கியத்துவத்தை அமெரிக்கா போன்ற முன்னேறிய நாடுகளும் உணர்ந்துவரும் இவ்வேளையில், நாம் நம் நாட்டில் அதனை வலுப்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்வது அவசியம்.

செவ்வாய், 16 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon