மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 28 ஜன 2021

இளைய நிலா: இந்தத் தயக்கம் மட்டும் வேண்டாமே…!

இளைய நிலா:  இந்தத் தயக்கம் மட்டும் வேண்டாமே…!வெற்றிநடை போடும் தமிழகம்

இளைஞர்களின் உறவுச் சிக்கல்களைத் தீர்க்க என்ன வழி? பகுதி – 41

ஆசிஃபா

“அவன் அழகா இருக்கான். என்னப் பாரு… என்னப் போய் அவன் லவ் பண்ணுவானா?” இது பல இடங்களில் காதலின் தொடக்கத்தில் பலரும் கேட்கும் ஒரு கேள்வி. இதே கேள்வியைப் பையன்களும் கேட்பார்கள். காதலிப்பவர்களுக்கு நண்பர்களாக இருப்பதைவிட கொடுமை வேறு இருக்கிறதா என்ன?! அது இருக்கட்டும். இங்கு கவனிக்க வேண்டியது அவர்களின் மனநிலையை.

மற்ற தயக்கங்கள் அனைத்தையும் விட்டுவிடுவோம். காதலில் ஏற்படும் தயக்கத்ததில் அழகு என்பது அதிகமாகவே விளையாடுகிறது. அதிலும் குறிப்பாக, நம் அழகைப் பற்றிய நம் பார்வை. அழகு என்பது எல்லோரிடமும் இருப்பதுதான். எல்லோருமே அழகுதான். சில நிறுவனங்களும், ஊடகமும் முன்னிறுத்திய ‘ரோஜாப்பூ நிறமும்’, ‘செதுக்கி வைத்த முகமும்’, ‘சாமுத்ரிகா லட்சணங்களும்’ எல்லோரிடமும் இருப்பதில்லை. அதற்காக, அவர்கள் அழகில்லை என்று சொல்லிவிட முடியுமா?

இப்படி, பொதுவான “அழகு” வகையறாக்குள் அடங்காத பெரும்பான்மையானவர்களுக்கு தங்கள் மீது இருக்கும் self-esteem குறைவாகவே இருக்கிறது. வெகு சிலர்தான், இவற்றை உடைத்து வெளியேறுகிறார்கள். ஆனால், பலரும் அழகு எனும் போலி மாயைக்குள் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில், அவர்களைப் பார்க்கும் நபர்களுக்கு அவர்களைப் பிடிக்கும். ஏன் அவர்கள் விரும்பும் நபருக்குக்கூடப் பிடிக்கும். ஆனால், நம் விருப்பத்தைச் சொல்லாமல், அவ்வுறவையே நழுவவிடுகிறோம். எல்லோருக்கும் இரண்டாவது வாய்ப்பு கிடைப்பதில்லையே!

முதலில், நாம் நம்மை அழகாகக் காண வேண்டும். அனைவரிடமும் ஏதோ ஒரு தனித்துவம் இருக்கிறது. அதைக் கண்டுபிடிக்க வேண்டும். அதுதான் நம் பலம். நம்மை நமக்கே பிடிக்காவிட்டால் யாருக்குப் பிடிக்கும்? இந்த வலிமை வந்துவிட்டாலே நாம் நம் விருப்பத்தைத் தெரிவித்துவிடுவோம். முதலில், நம் பார்வை மாற வேண்டும்.

அப்படியும் நம்மை அவர்களுக்குப் பிடிக்கவில்லையா, காதல் வரவில்லையா, வாழ்வில் இதுவும் ஒரு நிகழ்வு என்று கடந்துசெல்ல வேண்டும். அதை மனசுக்குக் கொண்டுபோய், நம் வாழ்க்கை முழுவதிலும் ஆதிக்கம் செலுத்த விடக் கூடாது. பிறரின் பார்வை என்றுமே நம்மைப் பாதிக்கக் கூடாது. நம் மீதே நமக்கென்று ஆழமான ஒரு பார்வையும் நம்பிக்கையும் அன்பும் இருக்க வேண்டும். அப்படி இருக்குமாயின், அவை நம் செயலில் வெளிப்படும்.

நாம் எப்படி இருக்கிறோமோ அதை அப்படியே வெளிப்படுத்துவதில் எவ்வித தயக்கமும் என்றும் காண்பிக்கக் கூடாது. பிறரின் விருப்பத்திற்கேற்ப முகத்தை, உடலை, மனதை என்று மாற்றிக்கொண்டே போனால், வாழ்க்கையே முடிந்துவிடும். காதலிலும், அன்பிலும் அழகு என்பதைவிட, மரியாதைதான் முக்கியம்.

நம்மை நாமாக ஏற்றுக்கொள்ளும் மரியாதை.

இளைய நிலா: ஆனா, பயமா இருக்கு…!

செவ்வாய், 16 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon