மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 28 செப் 2020

புதுச்சேரியில் 144 தடை!

புதுச்சேரியில் 144 தடை!

புதுச்சேரியில் பணப் பட்டுவாடாவைத் தடுக்க மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு விதிக்கப்படவுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை மறுநாள் மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள போதும் பல்வேறு கட்டுப்பாடுகளைத் தேர்தல் ஆணையம் விதித்து வருகிறது. தேர்தல் நெருங்கும் நிலையில் பணப்பட்டுவாடா செய்வது அதிகரித்துள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதுவரை தமிழகத்தில் ரூ.499 கோடி மதிப்பிலான ரொக்கம், தங்க வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும், புதுச்சேரியில் ரூ.0.59 கோடி பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் , பணப்பட்டுவாடாவைத் தவிர்க்க இன்று மாலை முதல் புதுச்சேரியில் 144 தடை அமலுக்கு வரவுள்ளது.

அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதைத் தடுக்கவும் அரசியல் கட்சியினர் பணம் விநியோகம் செய்வதைக் கட்டுப்படுத்தவும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என புதுச்சேரி தேர்தல் அதிகாரி அருண் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், புதுச்சேரி மாநிலத்தில் இன்று மாலை 6 மணி முதல் வருகிற 19ஆம் தேதி காலை 6 மணி வரை 4 நாட்கள் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஐந்துக்கும் மேற்பட்டோர் பொது இடங்களில் கும்பலாக நிற்கக்கூடாது. விளம்பர பேனர்கள், துண்டறிக்கைகள், ஆயுதம் போன்றவை வைத்திருக்கக்கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, மாலை 6 மணிக்கு மேல் அரசியல் கட்சி தலைவர்கள், நட்சத்திர பேச்சாளர்கள் உள்ளிட்டோர் ஊடகம் மூலமாக தேர்தல் தொடர்பான எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்க கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

செவ்வாய், 16 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon