மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 8 ஜூலை 2020

ஜெயலலிதா அலையில் திமுக காணாமல்போகும்: ஜெயக்குமார்

ஜெயலலிதா அலையில் திமுக காணாமல்போகும்: ஜெயக்குமார்

தமிழகத்தில் இறுதிகட்ட தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்றுவரும் வேளையில் தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று வடசென்னை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பழைய வண்ணாரப்பேட்டையில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜெயக்குமார், “வட சென்னை, தென்சென்னை, மத்திய சென்னை என தமிழ்நாடு முழுவதும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அலை, அம்மாவின் அலையும், புரட்சித்தலைவரின் அலையும் வீசிக்கொண்டிருக்கிறது. இந்த அலையில் திமுக கூட்டணி இடம்தெரியாமல் போய்விடும்.

தேர்தல் ஆணையம் அவர்களுக்கு கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்கிறார்கள். எங்களது அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் என யார் மீது வேண்டுமானாலும் சோதனை நடத்தலாம். மக்களை நம்பித்தான் நாங்கள் இருக்கிறோமே தவிர பணத்தை நம்பி இல்லை. ஆனால், நேற்று இரவு சென்னையில் திமுகவினரும், அமமுகவினரும் ஒரு ஓட்டுக்கு 200 ரூபாய் கொடுத்துள்ளனர். இது ஒரு மிகப்பெரிய ஜனநாயகப் படுகொலை. வடசென்னையிலோ, மத்திய சென்னையிலோ, தென்சென்னையிலோ அதுபோன்ற குறுக்கு வழிகளை நாங்கள் பயன்படுத்தவில்லை.

பறக்கும் படைகள் நிறைய பேர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் ‘வேஸ்ட்’ என்றுதான் நான் கூறுவேன். நேற்று சோதனை பணிகளை இரட்டிப்பாக்கியும் கூட திமுகவினரும், அமமுகவினரும் பணப்பட்டுவாடா செய்கின்றனர். அவர்கள் மீது பறக்கும் படையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று கூறினார்.

செவ்வாய், 16 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon