மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 2 ஜூலை 2020

சாதிய ஒடுக்குமுறைகளைப் பேசும் ‘பற’!

சாதிய ஒடுக்குமுறைகளைப் பேசும் ‘பற’!

சாதிய ஒடுக்கு முறைகளைப் பற்றிய ஆழமான புரிதலை பேசும் விதமாக ‘பற’ திரைப்படம் உருவாகியுள்ளதாக இயக்குநர் பா.இரஞ்சித் தெரிவித்துள்ளார்.

வ.கீரா எழுதி இயக்கியிருக்கும் படம் பற. சமுத்திரக்கனி, நித்திஷ் வீரா, சாந்தினி, வெண்பா, சாஜு மோன் நடித்துள்ளனர். வர்ணாலயா சினி கிரியேசன்ஸ் நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர்கள் ராமச்சந்திரன், பெவின்ஸ் பால் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.

இப்படத்துக்கு ஒளிப்பதிவு சிபின் சிவன், இசை ஜார்ஜ் வி.ஜாய், பாடல்கள் உமாதேவி, சினேகன், படத்தொகுப்பு சாபு ஜோசப், கலை இயக்கம் மகேஷ். இந்தப் ‘பற’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

விழாவில் தயாரிப்பாளர் ராமச்சந்திரன் பேசும்போது, “இந்தப் படத்தைப் பற்றி ஒரு விஷயத்தை மட்டும் சொல்கிறேன். ஒரு அருமையான பயணமாக இந்தப் படம் அமைந்துள்ளது. படமும் அருமையாக வந்திருக்கிறது. இயக்குநர் கீராவிற்கு நன்றி. சமுத்திரக்கனி அவர்கள் எங்களுக்கு சிறப்பான ஒத்துழைப்பைக் கொடுத்தார். இந்தப் படத்திற்கான ஆதரவை மக்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம்” என்றார்.

படத்தின் நாயகர்களில் ஒருவரான நித்திஷ் வீரா பேசும்போது, “இந்தப் படத்தைத் தொடங்கி வைத்தது இயக்குநர் பா.ரஞ்சித் அண்ணன்தான். அவர் இந்த விழாவிற்கு வந்ததற்கு நன்றி. இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் சிறப்பாக வந்திருக்கிறது. படமும் சிறப்பாக உருவாகியுள்ளது. இயக்குநர் கீரா அவர்களோடு பணியாற்ற வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அது இந்தப் படத்தின் மூலமாக நடந்துள்ளது” என்றார்.

இயக்குநர் பா.ரஞ்சித் பேசும்போது, “இங்கே வந்திருக்கும் கூட்டத்தைப் பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. இயக்குநர் கீரா அண்ணனுக்கு இப்படியொரு வரவேற்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. கீரா அவர் கொண்டிருக்கும் கொள்கையை பல தளங்களிலும் ஓங்கிப் பேசி வருகிறார். தாழ்த்தப்பட்டோருக்கான சட்டப் பாதுகாப்பு பற்றி இந்தப் ‘பற’ படத்தின் டிரெய்லரில் சொல்லியிருக்கிறார்.

இது இன்றைய சமகாலப் பிரச்சனை. புரட்சியாளர் அம்பேத்கர் பெயரை சமுத்திரக்கனி அண்ணனுக்கு வைத்திருக்கிறார்கள். சாதிய ஒடுக்கு முறைகளைப் பற்றிய ஆழமான புரிதலை இந்தப் படம் பேசும் என்று நம்புகிறேன். இந்த மாதிரியான படங்கள் வெற்றி பெற வேண்டும். சமீபத்திய எல்லா கமர்சியல் சினிமாக்களிலும் சாதி பற்றிய டிஸ்கஷன் வைக்க வேண்டிய சூழல் உருவாகி இருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது.

சினிமாவில் பாலியல் ரீதியாக பெண்கள் சுரண்டப்படுவது உண்மைதான். பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை வைப்பதால் அவர்களை குற்றம் சாட்டக்கூடாது” என்றார்.

அம்மா கிரியேஷன்ஸ் தயாரிப்பாளர் டி.சிவா பேசும்போது, “எப்போதும் பரபரவென்று இருப்பவர்கள்தான் பறக்க முடியும். அப்படியான பரபரப்பை கொண்டவர்கள்தான் உயரப் பறக்கிறார்கள். அவர்கள்தான் பறக்கவும் வேண்டும். அந்தப் பரபரப்பை எப்போதும் வைத்துக் கொண்டிருப்பவர் தம்பி சமுத்திரக்கனி. அவர் இந்தப் படத்தில் இருக்கிறார். இந்தப் படத்தின் இயக்குநர் கீரா மிகத் திறமையானவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இந்தப் ‘பற’ படம் வெற்றிக்கொடி கட்டிப் பறக்க வேண்டும்” என்று வாழ்த்தினார்.

படத்தின் இயக்குநர் வ.கீரா பேசும்போது, “இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. இந்தப் படத்தின் இசையமைப்பாளர் மறைந்து விட்டார். அவ்வளவு குறைவாகத்தான் வாழ்நாள் இருக்கிறது. வாழும்போது துரோகமும், வன்மும் இல்லாமல் வாழ வேண்டும். இந்தப் ‘பற’ படத்தில் மனிதர்களிடையே இருக்கும் ஏற்றத் தாழ்வையும், சாதி ஒழிப்பையும், ஆணவக் கொலைக்கான தீர்வையும் அண்ணன் சமுத்திரக்கனி ஏற்று நடித்திருக்கும் அம்பேத்கர் கேரக்டர் மூலமாகச் சொல்லி இருக்கிறோம். இந்தப் படம் தரமான படமாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அது உங்களுக்கும் இருக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.

நடிகர் சமுத்திரக்கனி பேசும்போது, “நான் இந்தப் படத்தில் நடிக்க வந்ததற்குக் காரணமே பா.ரஞ்சித்தான். அவர்தான் இயக்குநர் வ.கீராவை எனக்கு அறிமுகப்படுத்தினார். ‘படத்தில் உங்களுக்கு காதலர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் கேரக்டர்’ என்றார் இயக்குநர். ‘நான் இப்போது அதைத்தானே செய்து கொண்டிருக்கிறேன்’ என்றேன்.

இயக்குநர் கீராவிடம் நான் பா.ரஞ்சித்தைப் பார்க்கிறேன். எந்த உணர்ச்சியையும் அதிகமாக வெளிக்காட்டாத உண்மையாளர் ரஞ்சித். அதே கேரக்டர்தான் இயக்குநர் கீராவும். இந்தப் படத்தின் தயாரிப்பாளர் நல்ல நட்புள்ளம் கொண்டவர். இந்தப் படம் அற்புதமான படம். அருமையான பதிவு” என்றார்.

செவ்வாய், 16 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon