மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 2 ஜூலை 2020

குடியரசுத் தலைவரிடம் பரிந்துரை: வேலூர் தேர்தல் ரத்தாகுமா?

குடியரசுத் தலைவரிடம் பரிந்துரை: வேலூர் தேர்தல் ரத்தாகுமா?

வேலூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கட்டுக்கட்டாகப் பணம் கைப்பற்றப்பட்ட நிலையில், வேலூர் தேர்தலை ரத்து செய்வதற்கான பரிந்துரையைக் குடியரசுத் தலைவருக்குத் தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்தைக் குறிவைத்து காட்பாடியிலுள்ள துரைமுருகன் வீடு, அவரது குடும்பத்துக்குச் சொந்தமான கிங்க்ஸ்டன் கல்வி நிறுவனங்கள் ஆகிய இடங்களில் கடந்த மார்ச் 30ஆம் தேதி வருமான வரித் துறை சோதனை நடத்தியது. அதில் துரைமுருகன் இல்லத்தில் ரூ.10.50 லட்சம் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. ஒருநாள் இடைவெளிவிட்டு ஏப்ரல் 1ஆம் தேதி துரைமுருகன் நண்பர் பூஞ்சோலை சீனிவாசனுக்குச் சொந்தமான சிமென்ட் குடோனில் வருமான வரித் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 11.48 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது.

வேலூர் தொகுதி மக்களவைத் தேர்தலை ரத்து செய்யவே துரைமுருகன் சம்பந்தப்பட்ட இடங்களில் வருமான வரிச் சோதனை நடைபெற்றதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருந்த நிலையில், கதிர் ஆனந்தைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென அதிமுக, தமிழகத் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தது. இந்த வருமான வரிச் சோதனை தொடர்பாகத் தேர்தல் ஆணையத்திடம் கடந்த 3ஆம் தேதி வருமான வரித் துறை அறிக்கை அளித்தது. இதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில், தேர்தல் செலவின உதவி அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில் கதிர் ஆனந்த் உள்ளிட்டோர் மீது காட்பாடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, “இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வருமான வரித் துறையிடமிருந்து சில தகவல்களைப் பெற்றுள்ளோம். இதுகுறித்து தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்புவோம். தேர்தல் ஆணையம் இறுதி முடிவெடுக்கும்” என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் வேலூர் தொகுதி மக்களவைத் தேர்தலை ரத்து செய்ய தேர்தல் ஆணையம் முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. “வேலூர் மக்களவைத் தேர்தலை ரத்து செய்வதற்கான பரிந்துரை குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளது” என்று தேர்தல் ஆணைய வட்டாரங்களில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக என்டிடிவி ஆங்கில இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஏற்கெனவே மத்திய, மாநில அரசுகளுக்குச் சாதகமாகத் தேர்தல் ஆணையம் செயல்படுவதாக அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டிக்கொண்டிருந்த நிலையில், வேலூர் தேர்தல் ரத்து செய்யப்பட்டால் அதை மெய்ப்பிக்கும் விதமாகவே இருக்கும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். தேர்தல் ரத்து செய்யப்படும்பட்சத்தில், அதை எதிர்த்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள திமுக உள்ளிட்ட கட்சிகள் தயாராகி வருகின்றன.

செவ்வாய், 16 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon