மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 8 ஆக 2020

எட்டு வழிச் சாலை - நிலத்தைக் கையகப்படுத்துவது அரசின் கடமை: முதல்வர்!

எட்டு வழிச் சாலை - நிலத்தைக் கையகப்படுத்துவது அரசின் கடமை: முதல்வர்!

எட்டு வழிச் சாலை திட்டம் என்பது மத்திய அரசின் திட்டம் என்றும், நிலத்தைக் கையகப்படுத்துவது மாநில அரசின் கடமை என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்காக எதிரும் புதிருமாக இருந்த கட்சிகளும் கூட்டணி வைத்திருக்கின்றன. எட்டு வழிச் சாலையை எதிர்த்த பாமகவும் அத்திட்டத்தை அமல்படுத்தத் தீவிரமாக உள்ள பாஜகவும் அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளன,

எட்டு வழிச் சாலையை அமல்படுத்த நீதிமன்றம் தடைவிதித்த நிலையில், நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்துவது அரசின் கடமை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். இதற்கிடையே எட்டு வழிச் சாலையைத் திட்டமிட்டபடி அமல்படுத்தியே தீருவோம் என்று மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி முதல்வரும், பாமக நிறுவனர் ராமதாஸும் இருந்த மேடையில் வைத்தே தெரிவித்திருந்தார்.

இதை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், தினகரன் உள்ளிட்டோர் விமர்சித்திருந்தனர். ஸ்டாலின் பேசுகையில் வெட்கம், மானம் இருந்திருந்தால் முதல்வரும் பெரியய்யாவும் இதுதொடர்பாக கட்கரியிடம் கேள்வி எழுப்பியிருக்கக் கூடாதா? இத்திட்டத்துக்காக முதல்வர் கமிஷன் வாங்கியுள்ளார் என்று பேசியிருந்தார்.

இதற்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி, எட்டு வழிச் சாலை திட்டம் குறித்து ஸ்டாலின் பேச அருகதை இல்லை. இத்திட்டம் தேவையில்லை என்பதை நிதின் கட்கரியிடம் எடுத்துக் கூறி திட்டத்தைக் கைவிட வைப்போம். ஒரு மேடையில் ஒரு கட்சியின் தலைவர் பேசும்போது அதில் குறுக்கிடாமல் இருப்பதுதான் மேடை நாகரிகமாகும் என்று ஸ்டாலின் பேச்சுக்கு விளக்கமளித்திருந்தார்.

இந்த நிலையில்தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி எட்டு வழிச் சாலைக்காக நிலத்தைக் கையகப்படுத்துவது மாநில அரசின் கடமை என்று கூறியுள்ளார். திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் ஈரோடு மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் வெங்கு மணிமாறனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் இவ்வாறு தெரிவித்தார்.

“திமுக தலைவர் பிரச்சார கூட்டங்களில் எட்டு வழிச் சாலை பற்றிப் பேசுகிறார். போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கப் புறவழிச் சாலை வசதிகள் தேவை. சாலை அமைக்க வேண்டும், புற வழிச் சாலை அமைக்க வேண்டும் என்று கேட்கின்றனர், புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்றால் நிலத்தைக் கையகப்படுத்தித்தான் ஆக வேண்டும். நிலத்தைக் கையகப்படுத்தாமல் சாலை எப்படி அமைக்க முடியும். புறவழிச் சாலையும் வேண்டும், நிலத்தையும் கையகப்படுத்தக் கூடாது என்றால் அது எப்படி சாத்தியமாகும்.

எட்டு வழிச் சாலை திட்டம் என்பது மாநில அரசின் திட்டம் அல்ல. மத்திய அரசின் திட்டம். நிலத்தைக் கையகப்படுத்திக் கொடுப்பது மாநில அரசின் கடமை. விவசாயிகளை அழைத்து சந்தை விலையில் நிலத்துக்குப் பணம் கொடுத்து, விவசாயிகளைச் சமாதானப்படுத்தி அதன் பிறகே நிலம் கையகப்படுத்தப்படும் என்று கட்கரி கூறினார்” என்றார் முதல்வர். 2001இல் ஒரு லட்சம் வாகனங்கள் செல்லக்கூடிய சாலையில் மூன்று லட்சம் வாகனங்கள் சென்றன. அப்படி அதிக வாகனங்கள் செல்லும்போது விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவதாகக் குறிப்பிட்டார்.

“சட்டமன்றத்தில் எட்டு வழிச் சாலை வேண்டுமா, வேண்டாமா என்று நான் கேட்டபோது, இந்த திட்டம் வேண்டாம் என்று சொல்லவில்லை. விவசாயிகளை அழைத்துப் பேசி அதன் பிறகு செயல்படுத்தலாம் என்று சொன்னார்கள் அதைத்தான் நாங்கள் செய்தோம்” என்றார்.

டி.ஆர்.பாலு போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது தேசிய நெடுஞ்சாலைக்காக 800 ஏக்கர் நிலம் கையகப்படுத்தினார்கள். அப்போது விவசாயிகள் பாதிக்கப்படவில்லையா? அவர்கள் கையகப்படுத்திய நிலத்துக்கு போதிய இழப்பீடும் வழங்கவில்லை என்று முதல்வர் குற்றம்சாட்டினார்.

செவ்வாய், 16 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon