மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்த துப்பறிவாளன் திரைப்படம் 2017ஆம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது அதன் இரண்டாம் பாகத்தின் பணிகள் தொடங்கியுள்ளன.
ஷெர்லாக் ஹோம்ஸ் பாதிப்பில் இயக்குநர் மிஷ்கின் எழுதிய கணியன்பூங்குன்றன் கதாபாத்திரத்தில் விஷால் துப்பறியும் நிபுணராக நடித்திருந்தார். அவருடன் பயணிக்கும் கதாபாத்திரமாக பிரசன்னா, மற்ற கதாபாத்திரங்களில் வினய், ஆன்ட்ரியா, அனு இம்மானுவேல், பாக்யராஜ், சிம்ரன் ஆகியோர் நடித்திருந்தார்கள்.
படம் வெளியான சமயத்திலேயே பேட்டிகளில் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகும் என மிஷ்கின் தெரிவித்திருந்தார். தற்போது இரண்டாம் பாகம் பணிகள் தொடங்கியுள்ளன.
சந்தர்.சி இயக்கும் புதிய படத்தில் நடிக்கும் விஷால் மற்றும் தமன்னா அதன் படப்பிடிப்புக்காக அஸர்பைஜானில் உள்ளனர். திரைக்கதை பணிகளுக்காக அங்கிருக்கும் மிஷ்கின் விஷாலைச் சந்தித்திருக்கிறார். அதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளிவந்திருக்கின்றன. மற்ற விவரங்கள் வரும் நாட்களில் வெளிவர உள்ளன.
வில்லனான வினய் இறந்துவிடுவதுடன் முதல் பாகம் நிறைவடையும். அடுத்த பாகம் இதன் தொடர்ச்சியாக வருமா அல்லது முற்றிலும் புதிய களமா என்பது குறித்து படக்குழு இதுவரை எந்த தகவலும் வெளியிடவில்லை.