மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 12 ஜூலை 2020

தேர்தல் களத்தில் சாதியின் அறுவடை!

தேர்தல் களத்தில் சாதியின் அறுவடை!

மக்களின் மனநிலையைக் காட்டும் சந்திப்புகள்: 3 – நரேஷ்

கோவை, பொள்ளாச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் மிக வெளிப்படையாகவே, வாக்குகளைத் தீர்மானிக்கும் காரணியாகச் சாதி இருப்பதை உணரலாம். உதாரணத்துக்கு ராமநாதபுரத்தில் நடந்த உரையாடல்...

“இங்க தேவரு, தேவேந்திரரு, யாதவரு, முகமதியரு (முஸ்லிம்) - இந்தக் கூட்டம்தான் 80 சதவிகிதம். இவங்கள்ல நாலு பேரும் ஏத்துக்குக்கூடிய சாதியச் சேர்ந்தவரை நிக்கவெச்சாத்தான் ஜெயிக்க முடியும். போன எலெக்‌ஷன்ல அப்படித்தான் நடந்துச்சு. இங்க அம்மாவுக்காகவும் எம்.ஜி.ஆருக்காகவுமே அதிமுகவுக்கு ஓட்டு போடுறவுங்க இருக்கானுவ. பெரும்பாலும் அதிமுகவுக்குத்தான் ஓட்டுப்போடுவாங்க. செல்வாக்குள்ள ஆளா இருந்தா திமுக ஜெயிக்கும். அம்மா பாத்து நிக்கவெச்சா யாரா இருந்தாலும் ஓட்டு போட்டுருவானுங்க. ஆனா, போன எலெக்‌ஷன்ல அம்மா நிக்க வெச்சவரு தேவர் சாதிக்காரரு - பேரு கிருத்திகா முனியசாமி. காங்கிரஸ் சார்பா நின்னவரு மலேசியா பாண்டியன் - யாதவரு. பெரும்பாலும் திமுக எங்க தொகுதியில நேரடியா நிக்காது. ஒண்ணு முஸ்லிம் லீக்குக்குக் கொடுக்கும் இல்லாங்காட்டி காங்கிரஸுக்குக் கொடுக்கும். இந்த வாட்டி நவாஸ்கனி நிக்கிறாரு. போன வாட்டி மலேசியா பாண்டியன் நின்னாரு.

என்ன கதைன்னா, இங்க தேவருக்கும் தேவேந்திரருக்கும் ஆகாது. யாதவரும் முஸ்லிமும் இந்த சண்டைக்குள்ள வர மாட்டாங்க. தேவர நிக்கவெச்சா, தேவேந்திரங்க ஓட்டு போட மாட்டாங்க, தேவேந்திரர நிக்கவெச்சா தேவருங்க ஓட்டுபோட மாட்டாங்க. அதனால ஒண்ணு ரெண்டு பேரும் தேவராவோ, தேவேந்திரராவோ இருக்கணும், இல்லையினா வேற ஆளா இருக்கணும். அதேன் போன சட்டமன்ற எலெக்‌ஷன்ல தேவரான கிருத்திகாமாவ நிக்கவெச்சதால பூரா மத்த பயலுகளும் யாதவரான பாண்டியனுக்கு ஓட்டு போட்டாங்க.”

அவர் உண்மையை வெளிப்படையாகப் பேசினார். ஆம், உண்மை கதைகளைவிடக் கொடூரமாகத்தான் இருக்கிறது. மாற்று அரசியல் குறித்த கேள்வியை முன்வைத்ததும் இன்னும் தெளிவாக விளக்கம் கொடுத்தார்.

கமலுக்கு அரசியல் ‘ஆட்டம்’ தெரியுமா?

“மாற்றா வர்றவங்களுக்கு அரசியல் ஆட்டம் தெரியணும் தம்பி. அப்போதேன் ஜெயிக்க முடியும். மாற்றுன்னு ஆரார சொல்லுறீங்க? சுயேச்சியா நிக்கிறவரு, அத வுட்டா நாம் தமிழர், கமலோட நீதி மையம்... இப்ப, ராமநாதபுரம் தொகுதிய எடுத்துட்டீங்கன்னா கமல் பொறந்த பரமக்குடி தொகுதி இது. அவரு நின்னிருந்தாருன்னா ஜெயிச்சிருப்பாரு. கடைசிக்கு, டெபாசிட்டாச்சும் வாங்கிருப்பாரு. ஏன்னா அவருக்கு சாதி ஓட்டும் சேர்ந்து விழும். அந்தாளுக்கு இந்தத் தொகுதியில உறவும் மதிப்பும் இருக்கு. இதுதான் ஆட்டம். ஆனா, அவரு என்னன்னா யாரோ ஒருத்தர நிக்க வெச்சிருக்காரு. அவரு கட்சி சார்பா இங்க நிக்கிறவுரு பேருகூட எனக்குத் தெரியாது. அவுங்க என்னமோ படிச்சவரா பாத்து நல்லாத்தான் நிக்கவெக்கிறாங்க. ஆனா, கஞ்சிக்கு ஓடுறவனுக்கு அது புரியணும்லா..? அங்கதான் ஆட்டம் ஆடணும். இதெல்லாம் மாறுறதுக்கு ரொம்ப நாள் ஆகும்.”

கொங்கு மண்டலத்தில் கொங்கு தேசியக் கட்சிக்கு என்று ஒரு செல்வாக்கு உள்ளது. ஆனால் அதையும் தாண்டி மக்கள் மத்தியில் செல்வாக்கு உள்ள மனிதராகவும், தன் சொந்த பந்த சுப காரியங்களிலும் கலந்துகொள்பவராகவும் இருப்பவரைத்தான் அப்பகுதியில் பெரும்பாலும் ஆதரிக்கிறார்கள்.

‘அக்கறை’யை அளப்பது எப்படி?

“எங்க வீட்டுல எந்த நல்லது கெட்டதுனாலும் அவரு வந்துருவாரு” என்பது இரு கட்சியினரும் பிடிக்கத் துடிக்கும் நாடி. ஒரு விழாவுக்கு இருவரும் வெவ்வேறு நேரத்தில் வந்து வாழ்த்திச் சென்றால், யார் அதிகமாக மொய் வைத்திருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து அவருடைய ‘அக்கறை’ தீர்மானிக்கப்படும்.

வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டால், வேட்பாளர் புதியவராக இருந்தால், ‘அவரு யார் ஆளு’ எனும் கேள்வி தவிர்க்க முடியாததாக இருக்கும். தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் முதன்முறையாகத் தேர்தலைச் சந்தித்தபோது, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கட்சியாக தன்னை முன்னிறுத்தியது. ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்குக் கட்சியில் முன்னுரிமை வழங்கப்பட்டது. ஆனால் அது ஐந்து வருடங்களுக்குக்கூட நீடிக்கவில்லை. சாதி அடிப்படையிலான ஓட்டு வங்கியின் அரசியலை அதன் பிறகு புரிந்துகொண்டவர்கள், பிற பிரதான கட்சிகளைப் போலவே செயல்பட ஆரம்பித்தனர். இங்கே நியாயம் என்பதும் நடைமுறை என்பதும் உண்மையிலேயே வேறாகத்தான் இருக்கிறது.

இதுபோன்ற சில கசப்புகளையும் சமாளிக்கத் தெரிந்தால் மட்டுமே சாதனை சாத்தியம். அடுத்த தலைமுறை மிகப்பெரிய வெற்றிடத்தை முழுமையாக உணர்ந்திருக்கிறது. இப்போது வாக்கு வங்கியில் 75 சதவிகிதம் முந்தைய தலைமுறையிடம் இருக்கிறது. அது இந்தத் தலைமுறையிடம் வரும்போது, மாற்றம் வரும்.

அரசியலுக்கு அப்பாற்பட்ட அரசியல்

அதற்கு நேரடியான உதாரணமாக நாட்டின் தலைநகரையே காட்டலாம். மிகப் பெரிய தேசியக் கட்சிகளை வீழ்த்தி ஆம் ஆத்மி என்ற ஒரு சிறு பொறி பற்றியது. அவர்கள் தவறு செய்தபோது மக்கள் அதைப் புரிந்துகொண்டு மறுமுறை வாய்ப்பளித்தார்கள். அங்கே நடந்தது எங்கேயும் சாத்தியமே.

மாற்றம் வர வேண்டும் என்று மனதார நினைத்து மாற்றத்தை நோக்கி அடியெடுத்து வைக்கும் புதிய கட்சிகளும், சுயேச்சை வேட்பாளர்களும் தவறவிடும் இடம் அதுதான். அரசாங்கத்தில் அறம் அளவாகவும், அரசியல் அதிகமாகவும் இருக்கிறது. மக்களும் குறைந்தபட்ச அறத்தைத்தான் எதிர்பார்க்கிறார்கள். ஏனென்றால் அரசாங்கத்தின் சில ஓட்டைகளை அவர்கள் விரும்புகிறார்கள். தங்களுக்குச் சாதகமாக அதைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதை வெளிப்படையாகவும் ஒப்புக்கொள்கிறார்கள்.

அந்த இடத்தில்தான், அரசியல் அரசியலுக்கு அப்பாற்பட்டு நிற்கிறது.

மக்கள் கவனிக்கும் அந்த மூன்று விஷயங்கள்!

திங்கள், 15 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon