மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 24 அக் 2020

10% இட ஒதுக்கீடு: கூடுதலாக 2 லட்சம் இடங்கள்!

10% இட ஒதுக்கீடு: கூடுதலாக 2 லட்சம்  இடங்கள்!

10% இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்காக மத்திய கல்வி நிறுவனங்களில் 2 லட்சத்துக்கும் அதிகமான இடங்களைப் புதிதாக ஏற்படுத்த மத்திய அமைச்சரவை முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முற்பட்ட வகுப்பினரில் உள்ள ஏழைகளுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை இந்த ஆண்டு ஜனவரியில் மத்திய அரசு கொண்டு வந்தது. இந்தச் சட்டமானது பிப்ரவரி முதல் அமலுக்கு வந்துள்ளது. வரும் கல்வியாண்டில் மத்திய கல்வி நிறுவனங்களில் இந்தச் சட்டத்தை அமல்படுத்தும் விதமாகக் கூடுதல் இடங்களை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று (ஏப்ரல் 15) டெல்லியில் நடந்தது. முற்பட்ட வகுப்பினரில் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மாணவர்களுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க, நாடு முழுவதும் உள்ள 158 மத்திய கல்வி நிறுவனங்களில் 2 லட்சத்துக்கும் அதிகமான இடங்களை ஏற்படுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்குப் பெயர் குறிப்பிட விரும்பாத நபர் ஒருவர் அளித்துள்ள பேட்டியில், “முன்னேறிய பிரிவினருக்குப் பொருளாதார அடிப்படையில் 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தின்படி, மத்திய கல்வி நிறுவனங்களில் 2,14,766 இடங்களைக் கூடுதலாக உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதில் 1,19,983 இடங்கள் 2019-20 கல்வியாண்டிலும், 95,783 இடங்கள் 2020-21 கல்வியாண்டிலும் உருவாக்கப்படும். தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று மத்திய அமைச்சரவை இதற்கான முன்மொழிதலை வழங்கும்” என்று கூறியுள்ளார்.

158 மத்திய கல்வி நிறுவனங்களில் இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக ரூ.4315.15 கோடி நிதி ஒதுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

திங்கள், 15 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon