மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 19 செப் 2020

ஜெ பயோபிக்: கங்கணா தேர்வான பின்னணி!

ஜெ பயோபிக்: கங்கணா தேர்வான பின்னணி!

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் கங்கணாவைத் தேர்வு செய்ததற்கான காரணத்தைக் கூறியுள்ளார் இயக்குநர் ஏ.எல்.விஜய்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக்கும் முயற்சியில் ஒரே நேரத்தில் பலர் ஈடுபட்டுள்ளனர். சமீபத்தில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கணா நடிப்பது உறுதியானது. இந்த நிலையில் கங்கணா படக்குழுவில் இணைந்தது தொடர்பாக ஏ.எல்.விஜய் டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

“ஜெயலலிதா எனும் ஆளுமையை ஒரு மாநிலத்துக்குள் அடக்கிவிட முடியாது. அவர் ஒரு தேசிய தலைவர். இந்தியா முழுவதும் இந்தப் படத்தைக் கொண்டுசெல்ல முடிவெடுத்துள்ளோம். தற்போது இந்திய அளவில் முக்கியமான நடிகையாக கங்கணா உள்ளார். முன்னணி நாயகி இந்தக் கதாபாத்திரத்தை ஏற்றால்தான் சரியாக இருக்கும் என்பதால் அவரை படக்குழுவுக்குள் கொண்டுவந்தோம்.

இந்தக் கதை இந்தியா முழுவதுமுள்ள பார்வையாளர்களால் ரசிக்கப்படும். கங்கணாவைத் தேர்வு செய்வதற்கு முன் யாரை நடிக்க வைப்பது என பல விவாதங்களை நடத்தினோம். இந்தக் கதாபாத்திரத்துக்காகப் பலரைச் சந்தித்தோம். கங்கணா மிகவும் ஆர்வத்துடன் இந்தக் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க ஆயத்தமானார். படத்துக்காக தமிழ் கற்று வருகிறார். இந்தக் கதாபாத்திரத்தை உள்வாங்குவதற்காக அவருக்கு ஒரு மாதப் பயிற்சி பட்டறை நடத்தவுள்ளோம்” என்று கூறியுள்ளார்.

இந்தப் படம் தமிழில் தலைவி என்ற பெயரிலும் இந்தியில் ஜெயா என்ற பெயரிலும் தயாராகிறது. நீரவ்ஷா ஒளிப்பதிவாளராகப் பணியாற்ற, மதன் கார்கி பாடல்கள் எழுதுகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இயக்குநர் ராஜமௌலியின் தந்தையும் திரைக்கதை ஆசிரியருமான விஜயேந்திர பிரசாத் படக்குழுவில் இணைந்துள்ளார். விஷ்ணுவர்தன் இந்தூரி, சைலேஷ் ஆர் சிங் இணைந்து தயாரிக்கின்றனர்.

திங்கள், 15 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon