மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 28 அக் 2020

எளியவர்களை ஏய்த்துப் பிழைக்க வேண்டாமே!

எளியவர்களை ஏய்த்துப் பிழைக்க வேண்டாமே!

மேட்டுக்குடி மக்களின் வீடுகளிலும்கூட, அதிக அளவில் பெண்கள் வீட்டுக்கு வெளியே வேலை பார்த்து ஓரளவுக்குப் பொருளாதார சுதந்திரத்தை அனுபவிப்பது என்பது சமீபகாலமாகத்தான் நடந்து வருகிறது. 1990களின் தொடக்கத்திலிருந்து இந்தியப் பெருநகரங்களில் வேலை பார்க்கும் பெண்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

2001-2011 காலத்தில் நாட்டின் பெருநகரங்களில் உழைக்கும் வயதில் இருக்கும் பெண்களில், ஊதியம் தரும் வேலையைப் பார்க்கும் பெண்களின் பங்கு 70 விழுக்காடு உயர்ந்தது. வேகமான பொருளாதார வளர்ச்சி உருவாக்கிய செழிப்பான, பரபரப்பான வாழ்க்கைமுறை மற்றும் பெருநகர் வாழ் மேட்டுக்குடிப் பெண்கள் வீட்டுக்கு வெளியே சென்று வேலை செய்யும் போக்கு எனும் இரு முக்கியக் காரணிகளால் நாட்டில் பணிப்பெண்களுக்கான (Domestic maids) தேவை பன்மடங்கு பெருகியிருக்கிறது.

2015ஆம் ஆண்டில், இந்தியாவின் மொத்த தொழிலாளர்களில், உழைக்கும் வயதில் இருக்கும் பெண்களின் பங்கு 22 விழுக்காடு; சேவைத்துறையில் அவர்களின் பங்கு வெறும் 16 விழுக்காடு. ஆனால், அந்த சேவைத் துறையின் ஒரேயொரு வேலைப்பிரிவில் மட்டும் இவர்களின் பங்கு 59 விழுக்காடு – “பணிப்பெண்” எனும் வேலைப்பிரிவு.

அரசின் புள்ளிவிவரங்களின்படி பணியாட்களாக (ஆண் மற்றும் பெண்) இருப்பவர்களின் எண்ணிக்கை 35 லட்சம். ஆனால், இது மிகவும் துல்லியமான கணக்கு இல்லை என்பதைத் தன்னார்வ ஆராய்ச்சி நிறுவனங்கள், ஆலோசனை வழங்கும் தனியார் நிறுவனங்களின் (private consulting firms) ஆய்வுகள் நமக்குக் காட்டுகின்றன. KPMG எனப்படும் தணிக்கை மற்றும் ஆலோசனை வழங்கும் நிறுவனம், இந்தியாவில் கிட்டத்தட்ட 80 லட்சம் பணியாட்கள் இருப்பதாகக் கணிக்கிறது.

பணம் படைத்தவர்களில் பலரும் தங்கள் வீட்டைச் சுத்தம் செய்யவும், வீட்டில் சமையல் செய்யவும், குழந்தைகளைக் கவனித்துக்கொள்ளவும் பணிப்பெண்களை நாடுவதால், அவர்களை வேலையில் அமர்த்தும் இடைத்தரகர்கள் மற்றும் கம்பெனிகள் பெருகி வருகின்றன.

வேகமாக வளரும் பணியாட்களுக்கான சந்தையைக் கண்காணிக்கவோ, நெறிப்படுத்தவோ ஒன்றிய அரசும் சரி, மாநில அரசுகளும் சரி, எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. லட்சக்கணக்கான பணியாட்களின், குறிப்பாகப் பணிப்பெண்களின், நலனை உறுதி செய்யும் எந்தவொரு சட்டமும் நம் நாட்டில் இல்லை; இவர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியமோ, சமூகப் பாதுகாப்புத் தொகையோ, கட்டாய வார விடுமுறையோ இல்லை.

நம்மை விட பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கி இருப்பவர்கள் நம் வீட்டுக்குப் பணியாட்களாக வந்து சேர்ந்ததற்குப் பின்னால், ஒரு சமத்துவம் நிறைந்த சமுதாயத்தை உருவாக்குவதில் அரசாங்கம், அதிகாரம் படைத்தவர்களின் அலட்சியமும் தோல்வியும் இருப்பதை நாம் உணர வேண்டும்.

திங்கள், 15 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon