மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 3 ஜூலை 2020

சீமானும் கமலும் சில தாக்கங்களும்!

சீமானும் கமலும் சில தாக்கங்களும்!

நெட்டிசம்: சரா சுப்ரமணியம்

“சுவையாகச் சமைத்து, நீங்களும் சாப்பிடாமல், யாருக்கும் தராமல் குப்பையில் கொட்டுவது எப்படிப்பட்ட செயலோ, அப்படிப்பட்டதுதான் நீங்கள் நோட்டாவுக்குப் போடும் ஓட்டு. எங்களுக்குப் போடாமல், நீங்கள் நோட்டாவுக்கு ஓட்டுப் போடுவதற்குக் காரணம் சொல்லுங்கள். நாங்களும் சேர்ந்து நோட்டாவுக்குப் போடுகிறோம். உங்கள் வாக்குகள் மதிப்புமிக்கவை. வீணடித்துவிடாதீர்கள். நீங்கள் நோட்டை வாங்கிக்கொண்டு ஓட்டை விற்கிறீர்கள்; அவர்கள் ஓட்டை வாங்கிக்கொண்டு நாட்டை விற்கிறார்கள் என்ற புரிதலுக்கு நீங்கள் வர வேண்டும்...”

- தேர்தல் பரப்புரையில் இப்படி ஆவேசமாக முழங்குகிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இந்தப் பரப்புரைகள் வீடியோ வடிவில் அவ்வப்போது அவரது சமூக வலைதளப் பக்கங்களிலும் அப்டேட் செய்யப்படுகின்றன.

இன்னொரு, பக்கம் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் உறுதிமொழிகளைச் சொல்லும் வீடியோ பதிவுகளைச் சரியான நேர இடைவெளியில் வரிசைப்படி கமல்ஹாசன் தன் அதிகாரபூர்வ சமூக வலைதளப் பக்கங்களில் அப்டேட் செய்துவருகிறார்.

“ஆண் - பெண் இருபாலருக்கும் சமமான உரிமையும் வாய்ப்பும்; விவசாயம் காப்போம் - தமிழகத்தின் பொருளாதாரத்தை வளர்ப்போம்; வறுமையை அகற்றுவோம்; குடிசை, இல்லாத் தமிழகம் காண்போம்” என கமல்ஹாசனின் உறுதிமொழிப் பட்டியல் நீள்கிறது.

கை கொடுக்கும் இணையம்

இந்தப் பொதுத் தேர்தலைப் பொறுத்தவரையில், தேர்தல் களத்தைக் காட்டிலும் இணையக் களத்திலும் மிகுந்த கவனம் ஈர்த்திருப்பவர்களில் சீமானும் கமல்ஹாசனும் முன்னிலை வகிக்கின்றனர்.

அரசியல் ரீதியில் மக்களிடையே தங்களையும் தங்கள் கட்சியையும் கொண்டு சேர்த்த வகையில் இவ்விருவருக்குமே இணையம் ஒரு பேராயுதம் என்பதை மறுக்க முடியாது.

கடந்த 10 ஆண்டுகளாகத் தமிழகம் முழுவதும் கட்சிக்கான களப்பணியை ஒருபக்கம் செய்தாலும், சீமானையும் அவரது நாம் தமிழர் கட்சியையும் பரவலாக அறியவைத்ததும், மக்கள் பார்வையில் இருந்து விலகாமல் காத்ததும் இணையம்தான். குறிப்பாக, இணையத்தில் வீடியோ கன்டென்ட்டுகளுக்கு வரவேற்பு கூடியதன் விளைவாக, சீமானின் ‘செல்வாக்கு’ வெகுவாக உயர்ந்தது என்றால் அது மிகையில்லை.

ஆம், யூடியூபிலும் ஃபேஸ்புக்கிலும் ‘சீமான் உரை‘’ என்ற தலைப்பைத் தாங்கிய வீடியோக்களுக்கு எப்போதுமே மவுசு உண்டு. அது அவரது கட்சியின் தம்பிகளுக்கு எழுச்சி உரையாக ஒரு பக்கமும், கட்சி சாரா நெட்டிசன்களின் ‘ஸ்ட்ரெஸ் பஸ்டர்’ ஆக மறுபக்கமும் வைரல் ஆகி வந்தன. உணர்வெழுச்சி பொங்கும் பேருரைகளைக் கேட்டு, சீமானின் தம்பிகள் உத்வேகம் கொண்ட அதேநேரத்தில், மற்றவர்களோ எங்குமே ‘வெரிஃபை’ செய்ய முடியாத பல அறிவியல், வரலாற்றுக் கதைகளைக் கேட்டு களிப்புற்றனர்.

ஆனால், சமூக வலைதளங்களில் இந்த 10 ஆண்டுகளாக சீமானைக் கடக்காத நாளில்லை என்பது மட்டும் நிஜம். இந்த இணையப் பின்புலத்தைத் தக்கவைத்தபடியே களத்திலும் சீமான் மிகக் கடுமையாக உழைத்திருக்கிறார் என்பதைக் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும், இந்த நாடாளுமன்றத் தேர்தலும் தனித்தும் தனித்துவத்துடனும் போட்டிக் களம் காண்பதிலிருந்தே அறியலாம்.

கமலின் திட்டமிட்ட பயணம்

ஒருவகையில் சீமானைப் போலவே கமல்ஹாசனும் தன் அரசியல் இருப்பை இணையத்தில் வழியாக நிறுவ முயற்சி செய்தவர்தான். சீமான் இணையத்தில் முக்கியத்துவம் பெற்றது இயல்பான போக்கு என்றால், கமல்ஹாசனுடையது திட்டமிட்ட செயல்பாடு எனலாம்.

களத்தில் அரசியல் பேசுவதற்கு முன்பாக, ட்விட்டரில் அரசியல் விமர்சனங்களை முன்வைக்க ஆரம்பித்ததில் தொடங்கியது கமல்ஹாசனின் அரசியல் பயணத் திட்டம். அறிந்தும் அறியாமலும், புரிந்தும் புரியாமலும் போனாலும் கமல்ஹாசன் தட்டிய ட்வீட்களை நெட்டிசன்கள் வைரலாக்கத் தவறவில்லை.

சீமானின் வீடியோக்களும், அவர் குறித்த வீடியோக்களும் இணையத்தில் அங்கிங்கெனாதபடி நிறைந்திருந்தாலும், அதிகாரபூர்வ சமூக வலைதளப் பக்கம் என்று வரும்போது கமல்ஹாசனைப் பின்தொடர்வோரின் எண்ணிக்கை சீமானைக் காட்டிலும் பல மடங்கு அதிகம்.

அரசியல் களத்தில் அடியெடுத்து வைத்தபோது, கமல்ஹாசனிடம் பல தரப்பினருக்கும் எதிர்பார்ப்புகள் இருந்தன. ஆனால், அவரது கட்சியின் பெயரில் தொடங்கி, தெளிவற்ற கொள்கைகளை முன்வைத்தது வரையிலான அணுகுமுறைகளால் பெரும்பாலானோருக்கும் ஏமாற்றமே மிஞ்சின.

ஆனாலும், இணையக் களத்தில் சீமான் போலவே தொடர்ந்து அவர் பேசுபொருளாக நீடிப்பதற்கு அவரது செயல்பாடுகள் துணைபுரிகின்றன. உதாரணத்துக்கு, அவர் சமீபத்தில் வெளியிட்ட வீடியோ பரப்புரைப் பதிவு ஒன்றைக் குறிப்பிடலாம். டிவியை உடைத்துத் தெறித்துப் பேசும் அந்த வீடியோ செம்ம வைரல். ஆனால், அந்த அணுகுமுறை மூலம் மீண்டும் ஒருமுறை தன்னை ஓர் ஆகச் சிறந்த ‘பர்ஃபார்மர்’ என்ற அளவில் மட்டுமே நிறுவினார். மீம் மக்களுக்குத் தீனி போடும் இன்னொரு கன்டென்ட் என்ற அளவிலும் பார்க்கப்பட்டது அந்த வீடியோ பதிவு. ‘சென்சார்’ செய்யப்பட்ட அந்த வீடியோவை மீண்டும் பதிவேற்றி, தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியதையும் நெட்டிசன்கள் கலாய்க்கத் தவறவில்லை என்பதுதான் அவருக்கான துயர்மிகு யதார்த்தம்.

இருவரின் இடம் எது?

கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில், இணையத்தில் அதிகம் கவனம் ஈர்த்தது மக்கள் நலக் கூட்டணி. அதுபோலவே, அந்தக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் விஜயகாந்தின் ஒவ்வோர் அசைவும் மீம் வடிவம் பெற்றது. தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் விஜயகாந்த் பரப்புரைகளுக்கு மகத்தான வரவேற்பு இருந்தது. அதேபோல், அவரது பரப்புரைகள் வீடியோ வடிவில் இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டன. ஆனால், அந்தக் கூட்டணித் தலைவர்களே எதிர்பாராத முடிவுகளைத்தான் அவர்களுக்கு நம் வாக்காளர்கள் அளித்தனர். அப்போதுதான் பலரும் உணர்ந்திருப்பார்கள், அந்தத் தேர்தல் திருவிழாவில் உற்சாகமூட்டும் தரப்பாகவே அவர்களை மக்கள் கருதியிருக்கிறார்கள் என்று.

சீமானுக்கும் கமல்ஹாசனுக்கும் இணையத்தில் கிடைக்கின்ற வரவேற்புகளைப் பார்க்கும்போது, ஏனோ அந்த முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த் மட்டுமே நினைவுக்கு வருகிறார். ஆனால், இந்தத் தேர்தல் திருவிழாவைப் பொறுத்தவரையில், சீமானையும் கமல்ஹாசனையும் உற்சாகமூட்டும் அளவீடுகளைக் கொண்டு மட்டுமே கணக்கிட முடியாது. ஏனெனில், இப்போதைய தமிழகச் சூழல் அப்படியானது.

கருணாநிதி, ஜெயலலிதா போன்ற தலைமைகள் இல்லாமல் கழகங்கள் மோதும் முதல் தேர்தல் இது. எந்த இடத்திலிருந்தாவது பெஸ்ட் ஆக இல்லாமல் போனாலும்கூட, பெட்டரான தலைமை ஏதும் கிடைத்திடாதா என்று சமூக அரசியல் ஆர்வமிக்க மக்களின் ஏக்கத்துக்கிடையே நடக்கும் தேர்தல். அந்த அடிப்படையில்தான் சீமான், கமல்ஹாசன் போன்றோரை நேர்மறையான பார்வையுடன் அணுகவும் மக்கள் தயாராகி வருகின்றனர். குறிப்பாக, இளைஞர்களின் தேடலில் கவனத்துக்குரிய இடத்தில் இவர்கள் இருக்கிறார்கள்.

எந்தக் கட்சி சிறந்தது, எந்த வேட்பாளர் சிறந்தவர் என்று தேர்ந்தெடுக்கிற வாய்ப்பு இன்னமும் கிடைக்காத மக்கள், மோசமானவர்களில் யார் பெட்டர் என நாடுகிற நிலையில்தான் இருக்கிறார்கள். அப்படிப் பார்க்கும்போது, மேலோட்ட அரசியல் பார்வை கொண்ட மக்களைக் கவருவதில் ‘அதீத‘’ அரசியல் பாணியைக் கையிலெடுத்துள்ள சீமானும், மேம்போக்கு அரசியல் புரிதலைப் போதுமானதாகக் கருதும் கமல்ஹாசனும் முக்கியத்துவம் பெருகின்றனர்.

இந்தத் தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன்பு வரை இணையத்தில் இம்முறை நெட்டிசன்களுக்குப் பெருந்தீனி போடப் போகிறவர் வைகோதான் என்ற கணிப்பு இருந்தது. அதன்பின், கலாய்ப்பும் விமர்சனமும் கலந்து கட்டியபடி அன்புமணி வைத்துச் செய்யப்படுவார் என்று நம்பும்படியான இணையப் போக்குகள் அனுமானிக்கப்பட்டன. ஆனால், திமுக - அதிமுக பரப்புரை யுத்தங்களைத் தாண்டி, இணையத்தில் தங்கள் இருப்பை நிலைநாட்டியிருக்கிறார்கள் சீமானும் கமல்ஹாசனும்.

தமிழின் செய்தி சேனல்களில் சீமான் பரப்புரைகள் ஒளிபரப்பாகின்றனவோ, இல்லையோ... அந்தப் பரப்புரைகளின் முழு வீடியோ பதிவுகள் அப்படியே சம்பந்தப்பட்ட சேனல்களின் யூடியூப் பக்கங்களிலும், ஃபேஸ்புக் பக்கங்களிலும் உடனுக்குடன் பகிரப்படுகின்றன. சில மணி நேரங்களில் அவை ஆயிரக்கணக்கான பார்வைகளை எளிதில் எட்டுகின்றன. இதேபோல், கமல் குறித்த தகவல்களுக்கும் இணையச் செய்தி ஊடகங்களில் முக்கியத்துவம் தரப்படுகிறது. காரணம், இந்தத் தேர்தல் திருவிழாவில் நெட்டிசன்களின் வெவ்வேறு விதமான தேவைகளை இருவரும் பூர்த்தி செய்கின்றனர் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை.

தேர்தல் களத்திலும் இணையக் களத்திலும் அதிகரிக்கும் இத்தகைய கவன ஈர்ப்பு மூலம் வாக்குகளை அள்ள முடியுமா என்ற கவலை அவர்கள் இருவருக்குமே இப்போதைக்கு இல்லாமல் இருக்கலாம். ஆனால், அரசியல் ரீதியில் அவர்களது வளர்ச்சியின் அளவை நிர்ணயிக்கப்போவது என்னவோ கழகங்களின் செயல்பாடுகள்தான் என்பதை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும். இங்கே நினைவுக்கு வரும் காந்தியின் மேற்கோள் ஒன்று:

“முதலில் அவர்கள் உங்களைப் புறக்கணிப்பார்கள். பின்னர் உங்களைப் பார்த்துச் சிரிப்பார்கள். பிறகு உங்களுடன் சண்டையிடுவார்கள், அதன் பிறகு நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.”

அரசியலில் எதுவும் நடக்கலாம். அதுவும், எடப்பாடி பழனிசாமி முதல்வராக வீற்றிருக்கும் தமிழகத்தில் எதுவும் நடக்கும்!

திங்கள், 15 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon