மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 25 செப் 2020

ஆசிரியர்களின் சொத்துகளைச் சரிபார்க்க உத்தரவு!

ஆசிரியர்களின் சொத்துகளைச் சரிபார்க்க உத்தரவு!

கல்வித் துறையில் ஊழல் அதிகரித்துவிட்டதால், அரசுப் பள்ளி ஆசிரியர்களின் சொத்துகளைச் சரிபார்க்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு ஆதார் அடிப்படையில் பயோ மெட்ரிக் வருகைப் பதிவு முறையை அறிமுகம் செய்து அரசாணை பிறப்பித்தது தமிழக அரசு. இந்த அரசாணையை ரத்து செய்ய கோரி, நாகர்கோவிலைச் சேர்ந்த அன்னாள் என்ற அரசுப் பள்ளி ஆசிரியை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

நேற்று (ஏப்ரல் 15) இந்த மனுவை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் அமர்வு விசாரணை செய்தது. ஏற்கனவே இந்த அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை இரு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்துள்ளதாகவும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வருகைப் பதிவை உறுதி செய்யவே பயோ மெட்ரிக் வருகைப் பதிவு நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர்ந்த ஆசிரியர் எப்படி மாணவருக்கு ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுப்பார் என எதிர்பார்க்க முடியும் என்று கூறி அவரது மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார் நீதிபதி.

இந்த உத்தரவைப் பிறப்பிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளதாகக் குறிப்பிட்ட நீதிபதி, அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதில்லை என்று பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்ததால்தான் பயோ மெட்ரிக் வருகைப் பதிவு என்ற திட்டத்தை அமல்படுத்த வேண்டிய நிலைக்கு அரசு தள்ளப்பட்டதாகத் தெரிவித்தார். “இந்த அரசாணையை விரைந்து அமல்படுத்த வேண்டும். கல்வித் துறையில் ஊழல் அதிகரித்து வருவதால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துகளைச் சரி பார்க்க வேண்டும். ஏதேனும் தவறுகள் கண்டறியப்பட்டால் லஞ்ச ஒழிப்புத் துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.

தன்னுடைய அடிப்படை உரிமை பாதிப்பதாகக் கருதினால் மனுதாரர் பணியில் இருந்து விலகிக்கொள்ள வேண்டும் என்றும், அரசுப் பணியில் தொடர நினைத்தால் அரசின் கொள்கைகளையும் பணி விதிகளையும் பின்பற்றித் தான் ஆக வேண்டும் என்றும் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கூறினார்.

அதிக சம்பளம், உள்கட்டமைப்பு வசதிக்காக அரசு அதிக அளவில் நிதியைச் செலவு செய்யும் நிலையில் போதுமான தேர்ச்சி விகிதத்தைக் காட்டாததால் அரசுப் பள்ளிகளின் மீது பெற்றோர் நம்பிக்கை இழந்து விட்டனர் எனவும் நீதிபதி வேதனை தெரிவித்தார்.

திங்கள், 15 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon