மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 15 ஆக 2020

தமிழக லோக் ஆயுக்தா தலைவர் பதவியேற்றார்!

தமிழக லோக் ஆயுக்தா தலைவர் பதவியேற்றார்!

பிரதமர், மத்திய அமைச்சர்கள், முதலமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள், அரசு உயரதிகாரிகள் என உயர் பொறுப்பு வகிப்பவர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிப்பதற்கென இந்தியாவின் பல மாநிலங்களில் லோக் ஆயுக்தா நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன.

எனினும், தமிழ்நாட்டில் மட்டும் இதுவரையில் லோக் ஆயுக்தா நீதிமன்றம் அமைக்கப்படாமலே தாமதிக்கப்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து லோக் ஆயுக்தா அமைக்கப்படாத மாநிலங்களில் விரைவில் அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழக லோக் ஆயுக்தாவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பெயர் பட்டியல் கடந்த ஏப்ரல் 2ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது. லோக் ஆயுக்தா உறுப்பினர்களின் பெயர்களைத் தேடுதல் குழு மார்ச் 13ஆம் தேதியன்று பரிந்துரைத்தது. இந்தப் பட்டியலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தேர்வுக் குழு பரிசீலித்து பின்னர் அதிகாரிகளால் இறுதி செய்யப்பட்டது.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், லோக் ஆயுக்தாவின் தலைவரையும், உறுப்பினர்களையும் நியமிக்க அனுமதி கேட்டு தேர்தல் ஆணையத்துக்கு மாநில அரசு கடிதம் எழுதியிருந்தது. அதற்கு தேர்தல் ஆணையமும் ஒப்புதல் அளித்தது.

இந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 15) மாலை கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பி.தேவதாஸ் தமிழக லோக் ஆயுக்தா தலைவராகப் பொறுப்பேற்றார். லோக் ஆயுக்தாவின் நீதித் துறை உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற நீதிபதிகள் கே.ஜெயபாலன், ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பதவியேற்றுக்கொண்டனர்.

ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி எம்.ராஜாராம், மூத்த வழக்கறிஞர் கே.ஆறுமுகம் ஆகியோர் நீதித்துறை சாரா உறுப்பினர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். லோக் ஆயுக்தா தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்குத் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவி பிரமாணம் செய்துவைத்தார்.

திங்கள், 15 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon